Tamil News
Home செய்திகள் ரணிலின் வவுனியா விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து உறவுகள் போராட்டம்!

ரணிலின் வவுனியா விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து உறவுகள் போராட்டம்!

வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது வவுனியா வைத்தியசாலையில் பிரதமரின் நிகழ்வு இடம்பெறும் பகுதிக்கு போராட்டக்காரர்கள் செல்ல முற்பட்டபோது வைத்தியசாலை சுற்று வட்டத்தில் பொலிஸார் தடையை ஏற்படுத்தியமையால் ஏ-9 வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டது.

இன்றுடன் 907 ஆவது நாட்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க உறுப்பினர்கள் இன்று (புதன்கிழமை) பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தொடர் போராட்டம் இடம்பெறும் இடத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த எதிர்ப்புப் போராட்டம் நீதிமன்ற வீதி வழியாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தினை சென்றடைந்ததும் விஷேட அதிரடிப்படையினர், பொலிஸார், கலகம் தடுப்புப் பொலிஸார் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தினை தடுத்து நிறுத்தியதுடன் பேருந்து ஒன்றை வீதியின் குறுக்கே நிறுத்தி வீதியையும் தடை செய்தனர்.

இந்நிலையில், சுமார் 30 நிமிடங்களின் பின்னர் காணாமற்போனோரின் உறவுகளின் போராட்டக் களத்திற்கு பிரதமரை அழைத்து வருவதாக பொலிஸார் வாக்குறுதி வழங்கியதையடுத்து குறித்த எதிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் காரணமாக பிரதமர் பிரதான வீதியைப் பயன்படுத்தாமல் மாற்று வீதியூடாக நிகழ்வு நடைபெறும் இடத்திற்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version