பிக்குவின் உடலை புதைக்கவோ எரிக்கவோ கூடாது; முல்லைத்தீவு நீதிமன்ற ம் உத்தரவு

முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை முல்லைத்தீவு நாயாறு, குருகந்த ரஜமஹா விகாரை விகாராதிபதியின் உடலை பூமியில் புதைக்கவோ எரிக்கவோ கூடாது என முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முல்லைத்தீவு பழையச்செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு நேற்று முன்தினம் காலமானார்.

நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொழும்பு மஹரகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் மரணமடைந்தார்.

இந்த நிலையில் மரணமடைந்த பௌத்த பிக்குவின் சடலத்தை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திலுள்ள பௌத்த விகாரைக்கு எடுத்து வந்து இறுதிகிரியைகளை மேற்கொள்வதற்கு இராணுவம் மற்றும் கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்து பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் நேற்று முன்தினம் (21) இரவு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் தடை கோரி முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சுதர்சன் முன்னிலையில் இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது . இதன்படி இன்று (23 ) காலை 9மணிக்கு விகாரை தரப்பினரையும் பிள்ளையார் ஆலய தரப்பினரையும் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்நிலையாகுமாறும் இந்த விவகாரம் தொடர்பாக இன்று நீதிமன்றால் கட்டளை ஒன்று வழங்கும் வரை குறித்த பௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ எரிக்கவோ கூடாது எனவும்  அதுவரையான காலப்பகுதியில் பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்தும் விதமாக பொலிஸார் கடமையில் ஈடுபடவேண்டும் எனவும் முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.