பா.அரியநேத்தின்- தடையுத்தரவினை நீக்கக் கோரி தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்றி நினைவு கூருவதை தடுக்கும் வகையில் கொக்கட்டிச்சோலை பொலிசாரினால் பெறப்பட்ட தடையுத்தரவினை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யது தடையினை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்றி நினைவு கூருவதைதடுக்கும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கட்டளை கொக்கட்டிச்சோலை பொலிசாரினால் கடந்த 20ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இரங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்தினின் வீட்டுக்கு சென்று வழங்கப்பட்டிருந்தது.

அதில் 21-11-2020 தொடக்கம் எதிர்வரும் 27-11-2020, வரை மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் அரியநேத்திரனோ அவர் கட்சி சார்ந்தவர்களோ ஏனையோர்களோ அவ்வாறான நினைவு தினம் நடாத்தவும் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரனை பிறந்த தினத்தினை கொண்டாடவும் தடைவிதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதுத்தொல்லைகளை தவிர்த்தல்,தனித்தல் என்கின்ற குற்றவியல் சட்டக்கோவையின் 106:01 பிரிவின் கீழ் இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனுக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவினை நீக்க கோரி கடந்த 24ஆம் திகதி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.கே.சுமந்திரன்,சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத்,சட்டத்தரணி சயந்தன் உட்பட 27 சட்டத்தரணிகள் அன்றைய தினம் ஆஜராகியிருந்தனர்.

குறித்த வழக்கினை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது வாதப் பிரதிவாதங்கள் இடம் பெற்றிருந்ததுடன். பொலிஸார் குறித்த நிகழ்வு விடுதலைப்புலிகளை மீள உருவாக்க மேற்கொள்ளப்படும் செயற்பாடு மற்றும் கொரோனா அச்சுறுத்தல்களை காரணம் காட்டி வாதங்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த வழக்கினை இன்றைய தினம் வரையில் ஒத்திவைத்திருந்த நிலையில், மீண்டும் வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிபதி ஏ.சி.றிஸ்வானால் ஏழு பக்கங்கள் கொண்ட தீர்ப்பு அறிக்கை வாசிக்கப்பட்டதை தொடர்ந்து தடையுத்தரவினை நீக்குவதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.