பாலஸ்தீனிய சிறுவன் இஸ்ரேல் படைகளால் சுட்டுக் கொலை;மேலும் ஐவர் காயம்

தெற்கு காசா பகுதியில் வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 16 வயது பாலஸ்தீனிய சிறுவன் கொல்லப்பட்டதுடன் மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

இஸ்ரேலினால் காசா பகுதியில் இடம்பெற்றுவரும் அடக்குமுறைகளுக்கும் கொடுமைகளுக்கும் எதிராக அம்மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த 2018 மார்ச் மதம்தொடக்கம் வாராந்திர போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து காசாவில் குறைந்தது 348 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலியர்கள் கடலோர பகுதிகளில் முற்றுகையை தளர்த்த வேண்டுமென்றும்,இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் கோரி மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

காசாவின் இரண்டு மில்லியன் பாலஸ்தீனியர்களில் 70 சதவிகிதம் பதிவு செய்யப்பட்ட அகதிகள், அவர்கள் 1948 இல் இஸ்ரேல் நிறுவப்படுவதற்கு முன்னர் அப்போதைய இஸ்ரேலிய சியோனிச ஆயுதக் குழுக்களால் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.