பாதிக்கப்பட்ட பெண்களை துஸ்பிரயோகம் செய்த ஐ.நா படையினர் – சிறீலங்கா இராணுவத்திற்கும் தொடர்பு

கெயிட்டி பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கச் சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையினர் அங்கு பாதிக்கப்பட்ட பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் துஸ்பிரயோகம் செய்து பல நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு அப்பாவாகியுள்ளதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட பெர்மிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் குயின்ஸ் பல்கலைக்கழகங்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் சிறீலங்கா படையினரும் ஈடுபட்டிருந்ததாகவும், அவர்கள் 9 சிறுமிகளை பாலியல் பலாத்தகாரத்திற்கு உட்படுத்தியதாகவும், சபீன் லீ மற்றும் சூசன் பாற்ரேல்ஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2500 கெயிட்டி மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 10 விகிதத்திற்கு மேற்பட்டவர்கள் ஐ.நா படையினர் அங்கு மேற்கொண்ட பாலியல் துஸ்பிரயோகத்தின் மூலம் பாதிக்கப்பட்டு குழந்தைகளைப் பெற்றுள்ளதாக கூறியுள்ளனர்.

11 வயது சிறுமியையும் பாலியல் துஸ்பிரயோகம் செய்த படையினர் அவர் குழந்தை பெற்றதும், அவரை கைவிட்டுச் சென்றுள்ளனர். குழந்தைகளுடன் கைவிடப்பட்ட சிறுமிகளும் பெண்களும் வறுமையில் தவிக்கின்றனர்.

சில பெண்கள் ஒரு சில நாணயங்களுக்காகவும், சிலர் ஒரு வேளைச் சாப்பாட்டிற்காகவும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். அங்கு காணப்படும் வறுமையை ஐ.நா படையினர் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

2004 ஆம் ஆண்டில் இருந்து 2007 ஆம் ஆண்டு வரையிலும் கெயிட்டியில் பணியாற்றிய 134 சிறீலங்கா படையினர் அங்குள்ள 9 சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.

அங்கு கைவிடப்பட்டுள்ள குழந்தைகளை “நீல தலைக்கவசக் குழந்தைகள்” என மக்கள் அழைக்கின்றனர். இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரும், ஐக்கிய நாடுகள் சபை இது தொடர்பில் எந்த பதிலும் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.