Home ஆய்வுகள் பாடசாலையில் அனுபவக்கல்வி – ச.பிரியசகி (கிழக்குப் பல்கலைகழகம்)  

பாடசாலையில் அனுபவக்கல்வி – ச.பிரியசகி (கிழக்குப் பல்கலைகழகம்)  

ஒரு நாட்டின் சமூக,பொருளாதார வளர்ச்சியின் அடித்தளமாக கல்விவே விளங்குகிறது.இதனை உணர்ந்தே உலகநாடுகள் பலவும்  தங்கள் நாட்டின் கல்வி முன்னேற்ற வடடிக்கைகளுக்கு முதன்மை கொடுத்து வருகின்றன.

இலங்கையிலும் கல்விமேம்பாட்டுக்கான பல்வேறு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில்  8 வருடங்களுக்கு ஒரு தடவை கல்வித்திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்துதல்,நவீன விடயங்களை உட்புகுத்தல்,நடைமுறை பிரச்சினையின் தீர்வை காணுவதற்கான உத்திகளினை கல்வியில் ஒன்று சேர்த்தல்,புதிய தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியின் அறிமுகம்,அனுவக் கல்வி  முறையை புதிய அணுகுமுறைகளுடன் கையாளுதல் என இந்த நடவடிக்கைகள் விரிந்து செல்கின்றன.

தற்காலத்தில் தொழிற்கல்வியினை பெரிதும் முன்னிறுத்தி கல்விநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் அனுபவம்சார் கல்வி நிலையை ஆரம்பப்பிரிவு தொடக்கம் உயர்பிரிவு வரை நடைமுறைப்படுத்தும் செயலில் அரசாங்கம் இறங்கியுள்ளது

அனுபவக்கல்வி என்பது ஒரு மாணவனிற்கு புலன்களின் மூலம் உணரப்படும் பிரச்சினைகள்,அவதானம்,செயற்பாடுகள் என்பவற்றின் தொகுப்பே ஆகும்.அந்த வகையில் அனுபவமான விடயங்கள் நிலைத்து ஆழமான பதிவுகளையும்,பிரச்சினைக்கான சிறந்த தீர்வினையும் உருவாக்கும். இதனால்தான் அனுபவரீதியான கல்வியின் முக்கியம் உலக நாடுகளில் உணரப்பட்டுள்ளது.

அனுபவக்கல்வியின் முக்கியத்துவம் பற்றி ஆரம்பக்காலங்களில் உணரப்பட்டுள்ளது என்பதை கல்வித்தத்துவங்களான இயற்கைவாதம்(ரூசோ) பயன்பாட்டுவாதம்(ஜோன்டூயி) போன்றவற்றின் மூலம் எம்மால் அறியக்கூடியதாக உள்ளது.அனுபவக்கல்வி பற்றி இவர்கள் இருவரும் பின்வருமாறு கருத்துத்தெரிவித்துள்ளனர்.

ரூசோ- காட்சிப்பொருட்கள் மூலம்  பெறும் அனுபவங்களே அனுபவ கல்வியாகும்.

ஜோன் டூயி-பரிசோதனை ரீதியான விஞ்ஞான முறை அறிவு பெறுவதற்கான ஊடகமாக உணரப்பட்டது.

அனுபவங்களை அனுபவங்கள் ஊடாகவே அனுபவங்களாகவே பிள்ளைகளிற்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும் .அனுபவக்கல்வி தொடர்பாக இயற்கைவாதமும் பயன்பாட்டு வாதமும் பல நடைமுறைரீதியான ஆய்வுத்தத்துவ கருத்துக்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. அவற்றில் பின்வரும் கருத்துக்கள் முக்கியம் பெறுகிறது.

இயற்கைவாதம்

சுற்றுலாக்கள் மூலம் அறிவு,அனுபவம் பெறல் வேண்டும்.

தொடுதல்,நுகர்தல்,பார்த்தல் என்பன கல்விக்கான முக்கிய விடயங்களாகும்.

கற்பித்தல் என்பது கருத்தற்ற செயற்பாடுகளை மனனம் செய்வதல்ல.

பயன்பாட்டுவாதம்

கல்வி அனுபவம் மூலம் கிடைக்கப்பெற வேண்டும்.

பாடசாலையில் வழங்கும் அறிவும் சமூகத்தில் பெறும் அனுபவமும் ஒத்ததன்மை கொண்டதாக காணப்பட வேண்டும்.

பாடசாலை கற்றல் அனுபவமானது வாழ்க்கைக்கற்றல் அனுபவங்களோடு தொடர்புபட்டு காணப்படவேண்டும்.

வகுப்பறையில் மேசைகளை அகற்றி வேலைக் களங்கள், மணல் ,செங்கல் கொண்டு வர வேண்டும்.

பாடசாலையை விட பாடசாலையிற்கு வெளியே கற்றலுக்கான சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.

மேற்கூறப்பட்ட விடயங்களின் அடிப்படையில் அனுபவ கல்வியின் புரிதல் தத்துவங்களாக வடிவமைக்கப்பட்ட நிலையை எம்மால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.அத்துடன் ரூசோ,டூயி ஆகிய இருவரும் ஆராய்தல்,பிரச்சினைதீர்த்தல்,  அவதானிப்பு ஆகிய முறைகளையே கல்வியில் முதன்மைப்படுத்தியுள்ளனர்.

மேலும் அனுபவ கல்வி முறை இலங்கை பாடசாலைகளில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்று பார்த்தால் ஆரம்பப் பிரிவில் புதிதாக  1ம் தரக்கல்வியை பயில வரும் மாணாக்களுக்கு “பாடசாலை புகுநிலை செயற்பாடு”  எனும் புதிய விடயம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

மாணாக்களுக்கு தங்கள் வீடுகளின் நினைவை ஏற்படுத்தும் வகையில்  அவர்களுடைய விளையாட்டு பொருட்கள்,பொம்மைகள் போன்றவற்றைக் குறிப்பிட்ட வீடு போன்ற அமைப்புடன் காணப்படும் மாதிரி அமைப்பிற்குள் வைத்து விளையாடுவர். இது மாணாக்களுக்கு தங்கள் வீட்டில்தான் உள்ளோம் என்ற மகிழ்ச்சியான நிலைக்கு இட்டுச் செல்வதுடன் உளநிலையை சீராக பேணுவதற்கான ஒரு உத்தியாகவும் கையாளப்படுகின்றது.

அதுமாத்திரம் அன்றி ஆரம்பப்பிரிவு மாணாக்களின் வகுப்பறை அமைப்பில் புத்தக மூலை,சித்திர ஆக்க மூலை,விளையாட்டுப் பொருட்கள் மூலைääஆடல் பாடல் மூலைääசதுரங்க விளையாட்டு மூலை,மணல் மூலை போன்ற அனுபவ ரீதியாக தங்களுடைய ஆக்கங்கள்,செயற்பாடுகள்,மணலில் வீடுகட்டல்,புத்தகங்களை வாசிப்பதற்கான புத்தகங்கள் அடங்கிய தொகுதி என்பவற்றை உள்ளடக்கிய வகையிலேயே வகுப்பறைகள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் மாணாக்கள்  ஒவ்வொரு விடயத்தையும் அனுபவரீதியாக கற்றுக்கொள்வதற்கான சூழல் அமைத்துக்கொள்ளப்படுகின்றது.Egypt 1 final பாடசாலையில் அனுபவக்கல்வி - ச.பிரியசகி (கிழக்குப் பல்கலைகழகம்)  

16 கருப்பொருள்களை கொண்ட சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் ஆரம்பப்பிரிவில் முக்கியப்படுத்தப்பட்டுள்ளன.அதற்காக வாரத்தில் கிட்டத்தட்ட 6மணித்தியாலங்கள் ஒதுக்கப்படுகின்றது.புதியகட்டடங்கள்,பூங்காக்கள்,சந்தைஅமைப்புக்கள்,கோவில்கள் போன்றவற்றை நேரடியாக அழைத்துச் சென்று கற்பிப்பதன் மூலம் சிறந்த கருத்தாழத்துடன் கூடிய கல்வியை வழங்கக் கூடியதாக உள்ளது.

அடுத்ததாக இன்றைய பாடசாலைகளில் முக்கியமாக மாணவர் பாராளுமன்ற தேர்தல் முறை நடைமுறைப் படுத்தப்படுகின்றது.  உதாரணமாக 03.07.2019 மகாஜன கல்லூரியில் இத்தேர்தல் முறை நடாத்தப்பட்டு மாணவ அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.இதன் மூலம் வினைத்திறன் மிக்க பாடசாலை நிர்வாக செயற்பாடு.இணைப்பாடவிதான செயற்பாடு,ஆளுமை மிக்க தலைவர்களை

உருவாக்கல் போன்ற செயற்பாடுகளுக்கான ஒரு ஒத்திகையுடன் கூடிய அனுபவம் வழங்களாக காணப்படுகின்றது.இதனுடன் இணைந்த வகையில் பல்வேறு முறைகளின் ஊடாக அனுபவக்கல்வயை வழங்க வேண்டியதில் ஆசிரியர்களின் கடமை அதிகமாக காணப்படுகின்றது.

பின்லாந்து நாட்டை எடுத்துக் கொண்டால் ஒரு பாடம் தொடர்பான அறிவினை வாய்வழியாக வழங்கி 3 மணித்தியாளங்களில் நேரடிக்காட்சியிற்கு உட்படுத்தி மாணவர்களிற்கு கற்பித்த விடயம் தொடர்பான முழுத்தெளிவு வழங்கும் முறை காணப்படுகின்றது.சுவீடன் நாட்டில் முழுக்க முழுக்க வாழ்க்கையிற்குத் தேவையான அனுபவ அறிவினை  கல்வியாக வழங்குகின்றனர்.மாணவர்களினை கடைகளிற்கு அழைத்து சென்று எவ்வாறு பொருட்களை பெற்றுக்கொள்வது,விற்பது என்பது தொடர்பான பல அனுபவ கற்றல் வழங்கப்படுகின்றது.

இலங்கையைப் பொருத்தமட்டில் இதனை மையமாக கொண்டே சந்தை முறை மாணவர்களால் மேற்கொள்ளப் படுகின்றது.இதன்மூலம் பொருட்களை விற்கவும்,பெற்றுக்கொள்ளவும் மாணாக்கள் பழகிக்கொள்கின்றனர்.

மகாத்மாகாந்தியுடைய ஆதாரகல்வி தொடர்பான சிந்தனை முறையும் அனுபவ கல்வியின் தாக்கம் பற்றி கூறுகின்றது.அந்தவகையில் கற்றலுடன் தொழிலில் ஈடுபட்டால்தான் தொழில் தொடர்பான அனுபவமும்,நாட்டின் அபிவிருத்தியில் அக்கறையும் பிறக்கும் என்கின்றார்.உதாரணமாக பருத்தி பற்றி கற்கும் போது அந்த தொழிலையும் அனுபவ ரீதியாகக் கற்று மேற்கொள்ள வேண்டும்.அப்பொழுதுதான் கல்வியுடன் இணைந்த வகையில் ஊதியத்துடன் கூடிய அறிவு பெற்றக்கொள்ள முடியும் என்கின்றார்.

தற்போது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி முறைமை தொழிற்பயிற்சியுடன் கூடிய அனுபவக் கல்வியாக மாணாக்கள் அனைவரும் 13 வருடம் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சாதாரண தரப்பொதுப் பரீட்சையில் தோற்றி சித்தியடையாத மாணவர்களே இக்கல்வி மூலம் தமது வாழ்க்கையின் தொழிலிற்கான அனுபவ கல்வியினை 2 வருடங்கள் பெற்றுக்கொள்கின்றனர். 2017ல் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் உணவு பதப்படுத்தும் கல்வி,கலை மற்றும் கைவினை போன்ற 26 தொழிற் கல்வி அனுபவரீதியான கற்கைக்கு உட்படுத்தப்படுகின்றது.

இப்பாடங்கள் சொற்ப அளவிலான அறிமுறைகளாகவும்(theory) கூடிய அளவான பிரயோக பயற்சிகளாகவும் (practical skills),பாடசாலைக்கு வெளியேயான தொழில் நிறுவன பயிற்சிகளாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன.

மேற்கூறிய விடயங்களின் படி அனுபவக் கல்வி பற்றிய நடைமுறையும் கலைத்திட்டமும் மாற்றமுற்றாலும் எந்த அளவிற்கு சாத்தியமாகின்றது என்பது கேள்விக்குறியே. ஜரோப்பிய நாடுகளில் வெற்றி நடைபோடும் அனுபவக் கல்வி தொடர்பான அனுபவம் இலங்கையிற்கு முற்றுமுழுதாகக் கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

அந்த வகையில் பல கொள்கைகளும் நடைமுறைசார் விளக்கமும் பல கல்வியியலாளர்களுக்கு காணப்பட்டாலும் வளப்பிரச்சினை அனுபவக்கல்வியிற்கு தடையாகவே உள்ளது. இவ்வாறான தடைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு கல்வி வளர்ச்சி அடைந்த ஏனைய நாடுகளை விட இலங்கை கல்வி வளர்ச்சிக்கான பயணத்தில் வெற்றியடைய கல்விமாண்களும் புத்திஜீவிகளும் நடைமுறைசார் சீர்திருத்தங்களை முன்னெடுத்தால் எதிர்காலத்தில் இலங்கைக் கல்வி தரம் மென்மேலும் உயரும் சாத்தியம் உள்ளது.

 

ச.பிரியசகி

2ம் வருட சிறப்புக்கற்கை

கல்வி பிள்ளை நலத்துறை

கிழக்குப்பல்கலைகழகம்

Exit mobile version