Tamil News
Home செய்திகள் பாடசாலைகளை பாதுகாக்கும் அமைப்பு  போராட்டம்?

பாடசாலைகளை பாதுகாக்கும் அமைப்பு  போராட்டம்?

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்வதில் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி பாடசாலைகளை பாதுகாக்கும் அமைப்பு  போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.

நுவரெலியாவில் நடைபெற்ற இப்போராட்டத்தின் போது, வெட்டுப்புள்ளிகளை நிர்ணயிக்கின்ற பொழுது உரிய நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த போராட்டம் தொடர்பாக  பாடசாலைகளை பாதுகாக்கும் அமைப்பின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ராமராஜ் தெரிவித்துள்ளதாவது,

“இறுதியாக நடைபெற்ற க.பொ.த.உயர்தர பரீட்சையானது புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகவும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாகவுமே இரண்டு முறைகளில் நடைபெற்றது.

இதனடிப்படையில் வெட்டுப்புள்ளிகளை நிர்ணயிக்கின்ற பொழுது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை.

இவ்வாறான ஒரு நிலைமை 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொழுது அந்த சந்தர்ப்பத்தில் சரியான முறையை கையாண்டு, அதற்கான தீர்வு சரியான முறையில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இம்முறை அந்த முறை கடைபிடிக்கப்படவில்லை. அதிகாரிகள் தங்களுக்கு என்ன தோன்றியதோ அதனையே செய்திருக்கின்றார்கள். இதனால் பாதிக்கப்பட்டிருப்பது எங்களுடைய மாணவர்கள்.

இதன் காரணமாக சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களை இணையத்தின் ஊடாக பதிவு செய்யுமாறு கேட்டிருக்கின்றார்கள். அனைவருக்கும் அந்த வசதி இருக்கின்றதா? என்பது ஒரு கேள்விக்குறியே.

இதன் காரணமாக இன்று மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றார்கள். மாணவர்கள் மாத்திரமன்றி அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்றார்கள்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாவதற்கான நிலை இருக்கின்றது.

இந்த விடயத்தை நாங்கள் இன்று நுவரெலியாவில் போராட்டம் செய்தது போல நாடு முழுவதும் செய்வதற்கும் தீர்மானித்திருக்கின்றோம்.

இதற்கு உரிய பதிலை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version