பஷார் அல் அசாத் சிரியாவின் அதிபராக மீண்டும் தெரிவு

சிரியாவின் அதிபர் தேர்தல் நான்காவது முறையாக வெற்றி பெற்று பஷார்அல்அசாத் மீண்டும் அந்நாட்டின் அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிரியாவில் கடந்த 26ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான 78.6 சதவீத வாக்குகளில் அசாத் 95.1 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஹமூடாசபாக் நேரலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இத்தேர்தலில் ஆசாத்துக்கு எதிராக முன்னாள் அமைச்சரும், சோசலிச யூனியனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான அப்துல்லா சலிம் போட்டியிட்டார். இந்த நிலையில் பஷார் அல் ஆசாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இத்தேர்தலை, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நியாயமற்ற முடிவுகள் என்று விமர்சித்துள்ளன.

போரினால் புலம்பெயர்ந்தவர்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்று  அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.  மேலும் சிரியா போரில் ஆசாத்தின் அரசுப் படைகள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததாக  பல நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.

ஆனால் சிரியாவின் அதிபர் அசாத், மேற்கத்திய நாடுகளின் கூற்றை யாரும் கருத்தில் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து வருடங்களாக நடக்கும் உள்நாட்டு போரில் நிலைகுலைந்து நிற்கிறது சிரியா. ஜனநாயகத்துக்கு எதிரான அமைதியான போராட்டத்தை மோசமான படைகளை கொண்டு அதிபர் அசாத் ஒடுக்கியதற்கு எதிராக அங்கு போர் தொடங்கியது.

 இந்த  உள்நாட்டுப் போரில் இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தும் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.