Tamil News
Home செய்திகள் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வழக்கின் தீர்ப்பு  வெளியாகியது , பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள...

பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வழக்கின் தீர்ப்பு  வெளியாகியது , பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் தடையின்றி வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி !

முல்லைத்தீவு பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அடாத்தாக பிடித்து பௌத்த மதகுரு ஒருவர்  விகாரை அமைந்துள்ளமை தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெற்றுவரும் நிலையில் இன்றையதினம் குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது .

அதாவது அடாத்தாக பௌத்த பிக்குவால் விகாரை அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் ஒரு பிள்ளையார் ஆலயம் மிக நீண்டகாலமாக இருந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த பிள்ளையார் ஆலயத்தில் தடைகள் எதுவும் அற்றநிலையில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் அபிவிருத்திகளை உரிய உள்ளுராட்ச்சி திணைக்களகளின்  அனுமதிகளுடன் மேற்கொள்ளவும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று அனுமதியளித்து தீர்ப்புவழங்கியுள்ளது .

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி எஸ் .லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கிலேயே இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் முதலாம் தரப்பாக பிள்ளையார் ஆலய வளவில் விகாரை அமைத்துள்ள குருகந்த ரஜமஹா விகாரையின் விகாராதிபதியும் இரண்டாம் தரப்பாக நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர் . இதில் பிள்ளையார் ஆலயம் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்டதரணிகள் தமது வாதங்களை முன்வைத்தனர். மிக நீண்டநேரம் இடம்பெற்ற இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி முதலாம் தரப்பான பௌத்த மதகுரு இரண்டாம் தரப்பான  பிள்ளையார் ஆலயத்தினரின் வழிபாட்டுக்கு எந்தவிதமான தடையையும் ஏற்படுத்தக்கூடாது எனவும் கட்டுமான வேலைகளின்போது உரிய அனுமதிகளை உள்ளூராட்சி திணைக்களங்களில் பெற்று மேற்கொள்ளவேண்டும் எனவும் அதேபோல் இரண்டாம் தரப்பான பிள்ளையார் ஆலயதரப்பினர் வழிபாடுகளை சுயமாக தடைகளின்றி மேற்கொள்ளமுடியும் எனவும் கட்டுமானங்களை மேற்கொள்ளவிருந்தால் உரிய அனுமதிகளை பெற்று மேற்கொள்ளமுடியும் எனவும் ஏற்கனவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் என இருந்த பெயர்பலகையை மாற்றி கணதேவி தேவாலயம் என பௌத்த பிக்கு பெயர் பலகையை நாட்டியிருந்தார் .ஆகவே அது வழமையாக இருந்ததைப்போன்று நீராவியடி பிள்ளையார் ஆலயம் என மீண்டும் அமைக்கப்படவேண்டும் எனவும்  அதனை உறுதிசெய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிபதி பொலிசாருக்கு கட்டளையிடடார் .

 மேலும் இரண்டு தரப்பும் தலா இரண்டுலட்ஷம் ரூபா பெறுமதியான பிணைமுறியின் செல்லலாம் எனவும் மன்று கட்டளையிட்டது .

 இந்த வழக்கு கடந்த 4 மாதங்களாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்புவழங்கப்பட்டுள்ளது . பழையச்செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் உற்சவத்தை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த 14.01 .2019 அன்று செம்மலை கிராம மக்கள் சென்றவேளை குறித்த பிள்ளையார் ஆலய வளவை அபகரித்து குருகந்த ரஜமஹா விகாரை என்ற விகாரையையும் பிரம்மாண்ட புத்தர் சிலையையும் அமைத்துள்ள பௌத்த பிக்குவும் தென்பகுதியிலிருந்து வருகைதந்த ஒரு குழுவினரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தனர் . இதனை தொடர்ந்து பொலிஸார்  தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததோடு சமாதான குலைவு ஏற்பட்ட்தாக தெரிவித்து வழக்கு ஒன்றை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர் .

 அதன் பிரகாரம் விசாரணைகள் பல்வேறுகட்ட்மாக இடம்பெற்றுவந்தநிலையில் குறித்த பிரதேசம் தொல்லியல் பிரதேசம் எனவும் அங்கே ஒரு விகாரை இருந்ததாகவும்  தொல்லியல் திணைக்களத்தால் மன்றுக்கு தெரியப்படுத்தப்பட்டது . இதன் தொடர்சியாக தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மன்றில் முன்னிலையாகி குறித்த பகுதி தொல்லியல் பிரதேசம் எனவும் ஆனால் விகாரை அமைப்பதற்கான அனுமதியை தாம் வழங்கவில்லை எனவும் மாறாக சிபாரிசை வழங்க முடியும்எனவும்  தெரிவித்திருந்தார் .  மேலும் இப்பகுதியில் ஒரு பிள்ளையார் ஆலயம் மிக நீண்டகாலமாக இருந்துவருகின்றமை தொடர்பில் பிள்ளையார் ஆலய தரப்பால் பல சான்றாதாரங்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .

மேலும் இது தொடர்பில் சிரேஸ்ட சட்டவளரான அன்ரன் புனிதநாயகம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இன்றைய தினம் நீராவியடிப் பிள்ளையார் கோவில் தொடர்பான கட்டளை மன்றினால் வழங்கப்பட்டது.

குறித்த கட்டளையின் பிரகாரம் முதலாம் இரண்டாம் பகுதியினர் பிணை முறி ஒன்றினை நிறைவேற்றிச் செல்லுமாறு மன்று கட்டளை ஒன்றைப் பிறப்பித்திருந்தது.

முதலாம் பகுதியினர் குறித்த இரண்டாம் பகுதியினரின் வழிபாட்டிற்கு எந்தவித இடையூறையும் செய்யக்கூடாதெனவும், ஏதாவது அபிவிருத்தி வேலைகள் செய்வதாக இருந்தால் உரிய உள்ளூராட்சித் திணைக்களம், உள்ளூராட்சிச் சட்டங்களுக்கு அமைவாக கட்டடங்களை அமைக்கவேண்டும் எனவும்.

அதேபோல் இரண்டாம் பகுதியினர் தங்களுடைய வழிபாடுகளை சுயமாக செய்ய முடியுமெனவும், இரண்டாம் பகுதியினருடைய வழிபாட்டிற்கு முதலாம் பகுதியினர் எந்தவிதமான இடையூறும் செய்யக்கூடாது எனவும்

இரண்டாம் பகுதியினர் ஏதாவது, அதாவது நீராவியடிப் பிள்ளையார் கோவிலைச்சேர்ந்த பரிபாலன சபையினர் அந்தக் கோவிலில் ஏதாவது கட்டடங்கள் கட்டுவதானால் உரிய அனுமதிகளைப்பெற்று தங்களுடைய வேலைகளைச் செய்யலாம் எனவும், இரண்டு தரப்பினரும் இன்றைய நாள் தலா இரண்டு இலட்சம் உரூபாய் பெறுமதியான பிணை முறியில் செல்லுமாறும் நீதிமன்று கட்டளையிட்டது.

இந்தப் பிணைமுறியின் நிபந்தனைகளை மீறினால் நீதிமன்று உரிய தண்டனை வழங்குமெனவும் மன்று கட்டளையிட்டது.

இன்றைய தினம் குறித்த கட்டளையானது முதலாம் பகுதியினருக்கு சிங்கள மொழியிலே வழங்கப்பட்டதன் பின்னர் இரு பகுதியினரையும் வழக்கேட்டிலும், குறித்த பிணை முறியிலும் கையெழுத்துட்டுமாறும் மன்றுகட்டளையிட்டது. என்றார்.

Exit mobile version