பயணத்தடை, சொத்துக்களை முடக்குதல் – மிசேல் பசெலெடின் பரிந்துரைகள்

போர்க் குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்கா அரச அதிகாரிகள் மற்றும் படை அதிகாரிகளின் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்குதல் மற்றும் அவர்கள் மீதான பயணத்தடைகளை கொண்டுவருதல் போன்ற விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்பட்டவுள்ள அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரின் அறிக்கையானது சிறீலங்கா அரசுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதற்கான பதிலை சிறீலங்கா அரசு எதிர்வரும் 27 ஆம் நாளுக்கு முன்னர் அனுப்ப வேண்டும்.

இந்த நிலையில் அறிக்கையில் உள்ள விடயங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் சிறீலங்கா அரச அதிகாரிகள் மற்றும் படை அதிகாரிகள் மீதான பயணத்தடை மற்றும் அவர்களின் சொத்துக்களை முடக்குதல் போன்ற விடையங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் விசாரணையையும் ஆணையாளர் மிசேல் பசெலெட் பரிந்துரை செய்துள்ளார்.

அதேசமயம், சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரிக்கவும், விசாரணைகளை மேற்கொள்வதற்கும் அனைத்துலக பொறிமுறையை மேற்கொள்வது தொடர்பிலும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரின் அறிக்கையானது புலம்பெயர் சமூகத்தின் கருத்துக்களை அப்படியே பிரதிபலிப்பதாக சிறீலங்காவின் வெளிவிவகாரச் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

முன்னைய அறிக்கையை விட இது மிகவும் மோசமான அறிக்கை அதாவது வெளிநாட்டு நீதிபதிகள் தவிர்ந்த  30/1 தீர்மானத்தின் சரத்துக்கள் அனைத்தையும் நிறைவேற்றவேண்டிய கட்டயத்திற்கு சிறீலங்கா தள்ளப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.