பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பின் உதவி செய்ய இன்டபோல் தயாராக உள்ளது

சர்வதேச அளவில் பொதுவான பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. எனினும் இலங்கைக்கு 21/4 தாக்குதல்களின் பின்னர் தற்போதும் அவ்வாறான அச்சுறுத்தல் உள்ளதா என்பதை இலங்கையின் விசாரணையாளர்கள் கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும்.

அவ்வாறு தமக்கு அச்சுறுத்தல் உள்ளதென அவர்கள் தெரிவித்தால் அவர்களுக்கு நாம் உதவி செய்யத் தயாராக இருக்கின்றோம். உதவி கோரினால் எம்மால் முடியுமான அளவு அச்சுறுத்தலை முறியடிக்க உதவி செய்வோம் என சர்வதேச பொலிஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் ஜேர்ஜன் ஸ்டொக் தெரிவித்திருக்கின்றார்.

21/4 தொடர் தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து இன்டர்போலின் உடன் நடவடிக்கைக் குழு இலங்கையில் தங்கியிருந்து, குறித்த பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணை உட்பட நடவடிக்கைகள் எடுப்பது பற்றி ஆராய சர்வதேச பொலிஸ் அமைப்பின் செயலாளர் இலங்கைக்கான விஜயம் ஒன்றை நேற்று (27.08)மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் இங்கு வந்த அவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு உயர் மட்ட தலைவர்களை சந்தித்த பின்னர் மாலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஊடகவியலாளர்களை சந்தித்தார்.