பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் – இந்தியா மீது சிறீலங்கா ஊடகம் பாய்ச்சல்

ஜம்மு – கஸ்மீரில் சரத்து 370 ஐ நீக்கிய இந்தியாவுக்கு வடக்கு கிழக்கில் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் படி கேட்கும் உரிமை கிடையாது என சிறீலங்கா ஊடகம் இந்திய அரசு மீது தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா சிறீலங்கா அரச தலைவரிடம் முன்வைத்துள்ளது. சிறீலங்காவின் புதிய அரச தலைவர் கோத்தபாய ராஜபக்சா அங்கு பயணம் மேற்கொண்ட போதே இந்தியா இதனைத் தெரிவித்துள்ளது.

ஆனால் ஜம்மு – கஸ்மீரில் சரத்து 370 ஐ நீக்கிய இந்திய அங்கு வாழும் மக்களை உரிமை அற்றவர்களாக மாற்றியுள்ளது. பதின்மூன்றாவது திருத்தச்சட்டமும், சரத்து 370 என்பன ஏறத்தாள ஒரே மாதிரியானவை. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஜம்மு – கஸ்மீர் இந்தியாவின் சட்டத்தின் கீழ் வந்துள்ளது. அதனை புதுடில்லியே நிர்வகிக்கும்.

அங்கு அபிவிருத்திககளை இந்தியாவே மேற்கொள்ளும், அங்குவாழும் மக்களுக்கு காணி அதிகாரம் கிடையாது. அதனை தான் சிறீலங்காவும் கூறுகின்றது. வடக்கு கிழக்கு அபிவிருத்திகளை சிறீலங்கா அரசே மேற்கொள்ளும், தமிழ் மக்களுக்கு தேவையானவையை வழங்குவோமே தவிர அரசியல் அல்ல.

மாகாண சபையின் தற்போதைய அதிகாரங்களை தவிர எதனையும் கொடுக்க முடியாது. அது தனியரசுக்கான வழியை ஏற்படுத்தும் என சிறீலங்கா ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.