Home செய்திகள் படை அச்சுறுத்தல்களை மீறி தாயகத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்

படை அச்சுறுத்தல்களை மீறி தாயகத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்

இன்றைய நாள் மாவீரர் நாள். எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிரை தியாகம் செய்த எமது மாவீரர்களை நினைவுகூரும் உன்னதமான நாள்.

இந்நாளை தமிழ் மக்கள் நினைவுகூருவதை தற்போது ஆட்சிக்கு வந்த புதிய ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவின் அரசாங்க படையினர் அச்சுறுத்தியும், அடாவடித் தனமாகவும் தடுக்க முயன்றனர். இவர்களின் தடைகளையும் மீறி தாயகத்தில் உள்ள தமிழ் மக்கள் மாவீரர்களை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

கொடிகாமம் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள்

Kodikamam படை அச்சுறுத்தல்களை மீறி தாயகத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்கொடிகாமம் துயிலும் இல்லம் முன்பாக வடமாகாணசபை முன்னாள் உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் மாவீரர் நினைவு நிகழ்வுகளை அனுஸ்டிக்க முற்பட்ட போது, இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டது. எனினும் மாவீரர் நினைவு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதாக சிவாஜிலஜங்கம் தெரிவித்தார்.

வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்

வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாகவும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட போது, இராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இந்த மாவீரர் துயிலும் இல்லம் படையினரால் இடித்து அழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இராணுவ முகாமிற்கு அருகாமையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதாகவும், மக்கள் அச்சமின்றி நிகழ்வில் கலந்து கொண்டதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகம்

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்றும் இன்றும் நிகழ்வுகளுக்கு தடை செய்யப்பட்டிருந்த போதும், அத்தடையையும் மீறி நேற்று இரவு 12 மணியளவில் தேசியத் தலைவர் அவர்களின் பிறந்த நாள் விழாவை கேக் வெட்டிக் கொண்டாடியிருந்தனர்.

அதேவேளை இன்று பிற்பகல் 2 மணியுடன் யாழ்.பல்கலைக்கழகம் மூடப்படுவதாகவும், அனைத்து கல்வி சார், கல்விசாரா உத்தியோகத்தர்கள் வெளியேற வேண்டும் என்றும் பேராசிரியர் க.கந்தசாமி பணித்துள்ளார்.

இன்று காலை 2 பேருந்துகளில் பொலிசார் வரவழைக்கப்பட்டு, பல்கலைக்கழகம் முன்பாக குவிக்கப்பட்டிருந்தனர்.

இருந்தும் அனைத்து தடைகளையும் மீறி, மாணவர்கள் பல்கலைக்கழக கதவை உடைத்து உள்நுழைந்து, மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டிருந்தனர்.

நிகழ்வுகள் ஏற்பாடு செய்ததைப்போன்று நடைபெற்றது. மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

முல்லைத்தீவு கடற்கரை

முல்லைத்தீவு கடற்கரையில், கடலில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து சுடரேற்றுவது வழக்கம்.

இம்முறை நினைவுச் சுடர் ஏற்றுவதற்காக நேற்றைய தினம் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது, தடுத்து நிறுத்துமாறு பொலிசார் கட்டளை பிறப்பித்தனர். இந்த பணியை மேற்கொண்டிருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் இளஞ்செழியனிடம் பொலிசார் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

வித்துடல்கள் புதைக்கப்படாத இடத்தில் மாவீரர் நினைவு நிகழ்வு மேற்கொள்ள தேவையில்லை என கூறிய பொலிசாரிடம், கடலில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து இந்த இடத்தில் சுடர் ஏற்றப்படுவதாகவும், கடந்த 5 வருடங்களாக இந்த நிகழ்வு நடந்து வருவதாகவும் இளஞ்செழியனால் பொலிசாருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மாவீரர் நினைவு இல்லங்களில் படையினர் இருப்பதால், நினைவு நிகழ்வுகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டதோடு, இந்த விடயம் தொடரபாக இளஞ்செழியன் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்களைத் தொடர்பு கொண்டு விளக்கமளித்ததைத் தொடர்ந்து சிவமோகன் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய தலைமை அதிகாரியுடன் தொடர்பு கொண்டு நினைவு நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் இளஞ்செழியன் தெரிவித்தார்.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் தற்போது இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதால், மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக சுடர் ஏற்றி, மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மாவீரர் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன.

கிழக்கு பல்கலைக்கழகம்

வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்திலும் மாவீரர் நினைவு உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு, உயிர் நீத்தவர்களுக்கு மலர்தூவி, சுடரேற்றி, மௌன அஞ்சலி செலுத்தினர்.

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு துயிலும் இல்லம்

அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு துயிலும் இல்லத்தில் மாவீரர்நாள் நிகழ்வு பணிகள் இன்று காலை மேற்கொள்ளப்பட்டது. இங்கும் பாதுகாப்புத் தரப்பினர் பல நெருக்கடிகளை கொடுத்த பின்னரே அனுமதியை வழங்கினர்.

துயிலும் இல்லம் மஞ்சள் சிவப்பு நிள கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றது. அனைத்து தரப்பினரும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். நல்லூர்

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபி முன்பாக மாவீரர் நாள் அஞ்சலி இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் நினைவு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Exit mobile version