பஞ்சாப் மாநிலத்தில் 112 பேர் கைது

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கடும்போக்கு சீக்கிய மதப் பிரச்சார் ஒருவரை அதிகாரிகள் தேடும் அதிகாரிகள், அவரின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் 112 பேரை கைது செய்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் இத்தேடுதல் ஆரம்பிக்கப்பட்டது. நேற்று இரண்டாவது நாளாக தேடுதல்கள் தொடர்ந்த நிலையில் குறைந்தபட்சம் 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

30 வயதான அம்ரித்பால் சிங் என்பவரே தேடப்படுகிறார். சீக்கியர்களுக்காக காலிஸ்தான் எனும் நாடு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என இவர் கோரி வருகிறார்.

கடந்த மாதம்  அம்ரித்பால் சிங்கும் அவரின் ஆதரவாளர்களும் வாள்கள், கத்திகள் மற்றும் துப்பாக்கிகளை ஏந்திச் சென்று, காவல் நிலையமொன்றை முற்றுகையிட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், அம்ரித்பால் சிங் தேடும் நடவடிக்கை நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டது.

நேற்றுமுன்தினம் 78 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் சட்டம், ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுத்தும் முயற்சிகளைத் தடுப்பதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாபில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பைச் சார்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் இந்திய தூதரக அலுவலகத்தினுள் நுழைந்து அங்கே இருந்த மூவர்ணக் கொடிகளை அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.