தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்கின்றார் ரணில் – இழுபறிக்கு முடிவு

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஊடாக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் செல்லஉள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் இதுவரை வெற்றிடமாக காணப்பட்டு வருகிறது. பாராளுமன்றத் தேர்தல் நிறைவு பெற்று எட்டு மாதங்கள் நிறைவு பெற்று நிலையில் குறித்த நியமனத்தின் ஊடாக பாராளுமன்றம் செல்பவரை தீர்மானிக்க முடியாது இழுபறி நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில்தான், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதத்துக்குள் தனது கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை ஏற்றுக்கொள்வார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஒருமித்த முடிவின் பேரில் ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த தயாராகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.