Tamil News
Home செய்திகள் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்: IMF குழு வலியுறுத்தல்

நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்: IMF குழு வலியுறுத்தல்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாகக் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் சிறப்பான முறையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருவதாகவும், விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின் கீழான முதலாவது மதிப்பீடு இடம்பெறவுள்ள எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையைப் பூர்த்திசெய்யவேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதிய சர்வதேச நாணய நிதிய ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் அரசாங்கம் நம்பத்தகுந்ததும், நேர்மறையானதுமான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும், அதனைத் தாம் சந்தேகிக்க விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாகப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் சுமார் 3 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான இறுதிக்கட்ட இணக்கப்பாடு கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி எட்டப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாகப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் சுமார் 3 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான இறுதிக்கட்ட இணக்கப்பாடு கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி எட்டப்பட்டது.

இந்நிலையில் இலங்கையுடனான தமது இணக்கப்பாடு மற்றும் தமது விஜயத்தின் நோக்கம் என்பன குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் திங்கட்கிழமை (15) மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இச்சந்திப்பில் சர்வதேச நாணய நிதிய ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன், சர்வதேச நாணய நிதிய ஆசிய, பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் பீற்றர் ப்ரூயர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி சர்வற் ஜஹான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அங்கு கருத்து வெளியிட்ட கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் வருமாறு:

கோவிட் – 19 வைரஸ் பரவல், உக்ரேன் – ரஷ்யப்போர் ஆகிய நெருக்கடிகளின் தொடர்ச்சியாக 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய பொருளாதாரம் பாரிய சவாலுக்கு முகங்கொடுத்துள்ளது.

பூகோள வட்டிவீதங்கள் ஓரளவுக்குத் தளர்வடைந்து வருகின்றபோதிலும், அவை இன்னமும் சாதகமான மட்டத்தை அடையவில்லை.

இந்நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியம் மிகவும் முக்கியமானதும், தளம்பலானதுமான நிலையில் உள்ளது. இப்பிராந்தியமானது உலகப்பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சுமார் 70 சதவீதமான பங்களிப்பை வழங்கிவருகின்றது.

இப்பூகோள பொருளாதார நெருக்கடிகள் இலங்கையின் பொருளாதாரத்திலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவை குறிப்பாக வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினர் உள்ளடங்கலாக இலங்கை மக்களின்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நாம் உணர்கின்றோம்.

அந்தவகையில் இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியடைவதற்கு உதவும் நோக்கில் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்குவதற்குக் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்தது. இத்தீர்மானம் கடனுறுதிப்பாடு, விலையுறுதிப்பாடு, நிதியியல் உறுதிப்பாடு, சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்கள், கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் ஆகிய முக்கிய காரணிகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டது.

அந்தவகையில் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டின் பிரகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளில் குறிப்பிடத்தக்களவானவற்றை இலங்கை அரசாங்கம் பூர்த்திசெய்துள்ளது.

ஏனைய நிபந்தனைகளை பரந்துபட்ட முறையில் நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.

மேலும் பாரிய நெருக்கடியிலிருந்து மீட்சியடைந்து, பொருளாதார வளர்ச்சிப்பாதையில் நாட்டைக் கொண்டுசெல்வதற்கானதொரு வாய்ப்பாகவே சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைக் கருதவேண்டும்.

எனவே அதனை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கமும், நாட்டுமக்களும் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டியது அவசியமாகும் என்று வலியுறுத்தினார்.

Exit mobile version