Tamil News
Home செய்திகள் நாம் பேரினவாத கட்சிகளையே நிராகரிக்கின்றோம்,சிங்கள கட்சிகளை அல்ல – சிவாஜிலிங்கம்

நாம் பேரினவாத கட்சிகளையே நிராகரிக்கின்றோம்,சிங்கள கட்சிகளை அல்ல – சிவாஜிலிங்கம்

நாம் தென்னிலங்கையில் உள்ள சிங்கள கட்சிகளை நிராகரிக்க வில்லை. பேரினவாத கட்சிகளையே நிராகரிக்கின்றோம். நாம் எமக்காக குரல் கொடுக்கும் சில முற்போக்கு அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து இயங்குகின்றோம். வடக்கில் உள்ள நாம் தென்னிலங்கையில் உள்ள இவ்வாறான கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதன் ஊடாக தென்னிலங்கை மக்களுக்கு எமது நிலைப்பாட்டினை தெளிவாக கூற முடியும். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ். பாடி விருந்தினர் விடுதியில் அவர் நேற்று (25) நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் தெற்கில் களமிறங்கியுள்ள அஜந்தா பெரேரா வடக்கும் தெற்கும் சிறந்த உறவுப் பாலமாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லாமல் உள்ளார்.

நான் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலே போட்டியிட்ட போது கூட கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன வடக்கு கிழக்கு மலையகம் என அனைத்து இடங்களிலும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டார். ஆகவே, தமிழர்களின் சுய நிர்ணய உரிமை இருக்கின்றது என்று ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு சில முற்போக்கு இடது சாரிகள் தெற்கில் இருக்கின்றனர்.

பல சந்தர்ப்பங்களில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தமிழர்களின் நலன் தொடர்பில் அக்கறையாக இருந்து வந்தார். எனினும் இந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவினை வழங்கியுள்ளார். இதனால், நாம் அவருடன் தோள் கொடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம். ஆனால் அஜந் பெரேரா, சிறிதுங்க ஜெயசூரிய ஆகியோர் இப்போதும் எம்மக்களுக்கான உரிமையை வலியுறுத்தி வருகின்றனர்.

நாம் தென்னிலங்கையில் உள்ள சிங்கள கட்சிகளை நிராகரிக்க வில்லை. பேரினவாத கட்சிகளையே நிராகரிக்கின்றோம். நாம் எமக்காக குரல் கொடுக்கும் சில முற்போக்கு அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து இயங்குகின்றோம். வடக்கில் உள்ள நாம் தென்னிலங்கையில் உள்ள இவ்வாறான கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதன் ஊடாக தென்னிலங்கை மக்களுக்கு எமது நிலைப்பாட்டினை தெளிவாக கூற முடியும்.

நாட்டினை பிளவுபடுத்த விட மாட்டேன் என முன்னாள் பாதுகாபப்பு செயலரும் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியுள்ளார். யார் நாட்டை பிளவு படுத்துகின்றார்கள். தமிழ் மக்களை கொன்று குவித்து விட்டு எங்களின் கழுத்தை பிடித்து வெளியில் தள்ள நினைத்தால் எதிர்காலச் சந்ததி என்ன செய்வார்கள்? என ஆருடம் கூற முடியாது.

ஆகவே, ஒரு நாட்டில் உள்ளக சுய உரிமை மறுக்கப்பட்டால் வெளியக சுய உரிமையை கோர மக்களுக்கு உரிமை இருக்கின்றது. ஆகவே, எதிர்காலத்தில் சர்வதேசத்தின் தலையீடுகள் எவ்வாறு அமையும் என்று கூட தெரியவில்லை.

எனவே, இலங்கைக்குள்ளேயே தீர்வினை பெறுவதற்கு அரச தலைவர் தேர்தலில் நிற்கும் யாராக இருந்தாலும் வெற்றிபெற்ற பின்னராவது பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். ஆனால் தேர்தலில் கோட்டாபய வெற்றி பெற முன்னரே இவ்வாறு அகந்தையாக தீவிரமாக சொல்பவர்கள் வெற்றி பெற்ற பின்னரும் நாட்டிலும் உலக அளவிலும் போராட நிர்ப்பந்திக்கப் படுகின்றோம் என்றே கூற வேண்டும். அதன் படி எமது உரிமை போராட்டம் தொடரும் எனவும் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version