‘நாம் ஒற்றுமையாக செயற்பட்டுள்ளோம்’ -மாவை. சேனாதிராசா பேட்டி

தற்போதைய அரசியல் நிலைமைகள் பற்றியும், தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலுக்காக ஏனைய தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகளுடன் இணைந்து போராடி, நினைவு நிகழ்வை முன்னெடுத்தது பற்றியும் இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை. சேனாதிராசா அவர்கள் ‘இலக்கு’ ஊடகத்திற்கு அளித்த பிரத்தியேக நேர்காணலை இங்கு தருகின்றோம்.

  1. பத்து தமிழ்க் கட்சிகளை தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுடன் ஒன்றிணைத்திருக்கின்றீர்கள். இந்த ஒற்றுமை, வெறுமனே அவ்வப்போது வரக்கூடிய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான ஒன்றாக மட்டும் இருக்கப் போகின்றதா? அல்லது ஒரு அமைப்பு ரீதியானதாக, இதன் செயற்பாடுகள் அமையுமா? இதில் உங்களுடைய திட்டம் என்ன?

பதில்:

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை தடை செய்வதற்கான ஏற்பாடுகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருவதை நாம் அறிந்திருந்தோம். அந்த வகையில், வடக்கு கிழக்கு முழுவதும் பரவலாக நீதிமன்றங்களின் ஊடாக  எமக்கு எதிராக தடைகளை போட்டு வந்தார்கள். குறிப்பாக தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் தலைவர்கள் என தனித்தனியாகவும் தடைகளை அறிவித்து வந்தனர்.

20842138 1620742784637004 3637015010297480725 n 'நாம் ஒற்றுமையாக செயற்பட்டுள்ளோம்' -மாவை. சேனாதிராசா பேட்டி

இந்த நிலையில் தான், நாம் அனைவரும் இணைந்து குறித்த தடைக்கு எதிராகப் போராட வேண்டும் என முடிவெடுத்தோம். உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செய்யும் உரிமையை தடை செய்யாமல் அங்கீகாரம் வழங்க வேண்டும் எனக் கோரி, தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து, 14 பேர் கையெழுத்திட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதத்தை அனுப்பியிருந்தோம். அவர்களிடமிருந்து பதில் கிடைக்காத காரணத்தினால், இறுதியாக உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்தோம். அதற்கும் பல தடைகள் போடப்பட்டன. அதையும் மீறி நாம் அந்த போராட்டத்தை சாவகச்சேரியில் முன்னெடுத்தோம். அதனைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு தழுவிய செயற்பாட்டு முடக்க போராட்டத்தை முன்னெடுத்து, அதில் வெற்றி கண்டோம்.

கட்சிகளின் ஒற்றுமையை வரவேற்ற வடக்கு கிழக்கை சோந்த 4 மாவட்ட ஆயர்கள் இணைந்து எமக்கு ஒரு கடிதத்தினை அனுப்பி வைத்தனர். நாம் ஒற்றுமையாக செயற்பட்டுள்ளோம் எனவும், மக்களும் இதையே எதிர்பார்க்கிறார்கள் எனவும் தெரிவித்து ஒற்றுமையான செயற்பாட்டை  தொடர்ந்து வழிநடாத்துங்கள் என கோரியிருந்தார்கள். அது உற்சாகமாக இருந்தது. அதன் அடிப்படையில் தமிழ் மக்களின் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய மீண்டும் கட்சிகள்  ஒன்று கூடினோம்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஒன்றுபட்டு ஆராய்ந்து, அதன்படி செயற்படுவதாக தீர்மானித்துள்ளோம். இது ஒரு கட்டமைப்பாக செயற்படுவதற்கு குழு அமைத்துள்ளோம்.

unnamed 1 'நாம் ஒற்றுமையாக செயற்பட்டுள்ளோம்' -மாவை. சேனாதிராசா பேட்டி

  1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கடந்த காலங்களில் இணைந்திருந்த கட்சிகளைத்தான் இப்போது நீங்கள் மீண்டும் இணைத்திருக்கின்றீர்கள். தமிழரசுத் தலைமை மீது அவர்களுக்கு கடுமையான அதிருப்திகள் ஏற்கனவே இருக்கின்றது. அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும் வகையில் என்ன செய்யப் போகின்றீர்கள்?

பதில்:

உடனடியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆரம்பத்தில் அனைவரும் ஒன்றுகூடினோம்.   எதிர்காலத்தில் எவ்வாறு இயங்குவது என்பது பற்றித் தான் நாம் கலந்துரையாடினோம். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை, அரசியல் தீர்வு, ஜெனீவாத் தீர்மானங்கள் பற்றி ஒன்றாக எதிர் நோக்குவோம் என்ற தீர்மானத்தைத் தான் எடுத்துள்ளோம்.

விமர்சனங்கள் பொதுவானவை. அது தொடர்பான விவாதங்கள் இருந்தாலும், அதற்கும் அப்பால், பொதுமக்களின் நலன் சர்ந்து இயங்குவதற்காக ஒன்றுகூடியுள்ளோம் என்பதே உண்மை. தற்போது சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சி வந்துள்ளது. எனவே அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்றே நாம் பேசி வருகிறோம்.

எம்மீதுள்ள விமர்சனங்களுக்கு அப்பால், தமிழ் மக்களின் விடுதலைக்காக ஒன்றாக இருப்பதற்கே நாம் இணைந்துள்ளோம். ஓன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதே எமது நம்பிக்கையும், தேவையுமாக உள்ள காரணத்தினால், எம்மீதுள்ள விமர்சனங்களை சீர்படுத்தி, எதிர்காலத்தில் அவ்வாறு விமர்சனங்கள்  இல்லாமல் செய்து, அனைவருடனும் சேர்ந்து செயற்படுவதே எமது நோக்கம்.

  1. இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை. அனந்தி சசிதரன் வெளிநடப்புச் செய்ததாகச் சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் அனைத்துக் கட்சிகளையும் ஓரணிக்குள் கொண்டு வருவது எப்படிச் சாத்தியமாகும்?

பதில்:

கூட்டங்களுக்கு சமுகமளிக்காதவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். குறிப்பாக அண்மையில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டேன். அடுத்து ஏனைய கட்சித் தலைவர்களுடனும் பேசவுள்ளோம்.

கடந்த கால கசப்பான  சம்பவங்கள் தெரிந்திருந்தாலும், அதற்குத் தீர்வுகளை காண்பதுடன், ஒன்றாக செயற்பட வேண்டிய அவசியத்தை தமிழ் மக்கள் கோரியுள்ளார்கள். அதன் அவசியத்தை புரிந்து நாம் ஒன்றுபட வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

  1. இந்தியப் பிரதமர் மோடியுடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது உட்பட ஏனைய விடயங்களில் இந்தியாவினால் அழுத்தம் கொடுக்க முடியும் என நீங்கள் நம்புகின்றீர்களா?

பதில்:

இலங்கையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இந்தியாவுக்கு கடமைப் பொறுப்பு உள்ளது.  அண்மையில் இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அர்த்தமுள்ள வகையில் அரசியல் தீர்வைக்  கொண்டு வருவது தொடர்பாகவும், இனப்பிரச்சினைத் தீர்வு குறித்தும் மோடி பேசியுள்ளார். அத்துடன்  ஜனநாயக உரிமைகள் தொடர்பில் பேசியுள்ளமையும் தமிழ் மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா அயல்-நட்பு நாடகவும், பல உடன்பாடுகளை எம்முடன் செய்துகொண்ட  நாடாகவும் இருப்பதால், இனப்பிரச்சினை,  பொருளாதரப் பிரச்சினை என்பவற்றில் தலையீடு செய்து, தீர்வு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்களுடன் நாம் இது தொடர்பில்  தொடந்து பேச வேண்டியும் உள்ளது. அப்போதுதான் எமக்கான தீர்வு சாத்தியமாகும்.

  1. இன்றைய சூழலில் இந்த அரசு கொண்டுவரப்போகும் அரசியலமைப்பு, தமிழ் மக்களுடைய அபிலாசைகளைத் தீர்க்கும் என நம்புகின்றீர்களா? இல்லையெனில், உங்களுடைய பிரதிபலிப்பு என்னவாக இருக்கும்?

பதில்:

நம்பிக்கை தரும் எனக் கூற முடியாது. அது பாராளுமன்றில் வரும்போது எவ்வாறு உருவாக்கப் பேகிறார்கள் என்பதை பொறுத்துத்தான் அரசுடன் பேச முடியும். ஓன்றுபட்டு எமது கருத்தை முன்வைப்போம். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த அரசு பெரும்பான்மையினரின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ளது. குறித்த பெரும்பான்மையைப் பயன்படுத்தி  அவர்கள் இனப்பிரச்சினையைத் தீர்க்க நினைத்தால், தீர்க்க முடியும் என்ற எடுகோளை சர்வதேசத்துக்கு முன்னால் கூற விரும்புகிறோம். அத்துடன் வரவிருக்கும் அரசியலமைப்பில் கட்டாயம் அரசியல் தீர்வு உள்ளடக்கப்பட வேண்டும் என்றும்  தெரிவித்து வருகிறோம்.

IMG 7676 'நாம் ஒற்றுமையாக செயற்பட்டுள்ளோம்' -மாவை. சேனாதிராசா பேட்டி

6.இன்றைய சூழலில் ஈழத் தமிழ்த்தேசிய அரசியல் இராசதந்திர நகர்வுகள் எத்தகைய மூலோபாய, தந்திரோபாய திட்டங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்?

பதில்:

எமது  பிராந்தியத்தின் முக்கியத்துவம் கருதி, அயல் நாட்டு இராஜதந்திரிகள் பேச்சுக்களை முன்னெடுத்து வருகிறார்கள்.  மனித உரிமை பேரவைத் தீர்மானம் கடந்த வருடங்களை விட தற்போது  மற்றமடைந்துள்ளது. குறித்த தீர்மானம் எவ்வாறு எமக்கு  உதவியாக இருக்கப் போகிறது என்ற கேள்விகளுக்கு மத்தியில், உலக அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள், நிபுணத்துவம் வாய்ந்தவர்கள், எமது தமிழ் கட்சித் தலைவர்கள் மற்றும்   சர்வதேச சமூகத்துடன் நாம் பேச வேண்டும். அவர்களுடன் எந்தவகையான மூலோபாய, தந்திரோபாய நடவடிக்கைகளை செயற்படுத்தலாம் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம். எதிர்காலத்தில் அவர்களின் கருத்துக்களை சரியாக திட்டமிட்டு  செயற்படுத்தினால்தான் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் என்பது எமது நம்பிக்கை.