‘நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காதவரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகள் தான்’ -அருட்தந்தை மா.சத்திவேல்

நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காத வரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகள் தான்  என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் கைதிகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக ‘இலக்கு’ மின்னிதழுக்கு கருத்து தெரிவித்த அவர்,  “அரசியல் கைதிகள் இன்று அரசியல் அநாதையாக்கப்பட்டிருக்கின்றார்கள். இதற்கான காரணம் ஒட்டுமொத்த அரசியல் தமிழ்த் தலைமைகளுமே.

சிவில் சமூகங்கள்  பொறுப்பேற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். அதாவது அரசியல் கைதிகளின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. குறிப்பாக கடந்த ஆட்சிக்காலத்தில் தீர்த்திருக்கலாம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலில் இதற்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.

தமிழ் அரசியல் தலைமைகளால் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த அரசியல் தலைமைகள் கொரோனாவினைக் காரணம் காட்டுகிறார்களே தவிர, அரசியல் கைதிகளைப் பார்ப்பதனையோ, அன்றாட தேவைகளையோ  கவனிப்பதும் இல்லை.

அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்தப்படுபவர்கள் தான் முன்னொரு காலத்தில் அரசியலை முன் நகர்த்தியவர்கள். இவர்கள் பலமாக இருந்ததனால் தான் பேச்சுவார்த்தை முன்னர் நடந்திருந்தது. இவ்வாறு பலமாக இருந்ததனால் வெவ்வேறு நாடுகளில் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள். அந்தளவு ஒரு பலமான சக்தியாக இருந்த அரசியல் கைதிகளை இன்று யாரும் கண்டுகொள்ளாத  நிலையில்தான் அவர்கள் அகதிகளாக இருக்கிறார்கள்.

தற்போது இருக்கும் அரசாங்கம் அரசியல் கைதிகளே இல்லை என கூறுகின்றார்கள் என்றால், அவர்களுக்கான விடுதலையே இனி இல்லை. இந்த அரசியல் கைதிகள் இருக்கும் வரைக்கும் இந்த பயமுறுத்தல்கள் இருந்து கொண்டேதான் இருக்கும்.

அண்மையில் பெருந்தோட்டத்துறையில் இடம்பெற்ற ஒரு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவரைக்கூட பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார்கள். அப்படியானால் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இனிமேல் நீக்கப்படப்போவதும் இல்லை.

அரசியல்  கைதிகளுக்கான விடுதலை நடைபெறப்போவதுமில்லை, அரசியல் கைதிகளோ அவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவோ நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காத வரைக்கும் அவர்கள் – அரசியல் கைதிகள் – அகதிகள் தான்.  அவர்களுக்கு வீடுமில்லை, அரசியல் கட்சிகளும் இல்லை,  உதவி கேட்க நபர்களும் இல்லை.

வெளிநாட்டில் உள்ள சில அமைப்புக்கள் இவர்களின் வழக்கிற்கு உதவி செய்வதாகக் கூறுகிறார்கள். ஆனால் உதவி செய்யலாம். இது வழக்குடன் சம்பந்தப்பட்டதல்ல. இது அரசியலோடு சம்பந்தப்பட்ட விடயம். அந்தவகையில் அரசியல் ரீதியாக இவர்களுக்கு விடுதலை இல்லை என கூறினால், இவர்கள் அரசியல் அகதிகள் தான். நாடற்ற மக்கள்  வேறு நாடுகளில் தங்கியிருப்பதுபோல் இவர்களும் எந்தவொரு அங்கீகாரம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

அரசியல் கைதிகள் தமது கோரிக்கையை, அரசாங்கத்திடம் வைப்பதா? அரசியல் தலைமைகளிடம் வைப்பதா? சிவில் சமூகத்திடம் வைப்பதா? பொதுமக்களிடம் வைப்பதா? என தெரியாது அரசியல் அகதியாகவும், அரசியல் அநாதைகளாகவும் இருக்கின்றார்கள்” என்றார்.