நானே வேறு வடிவில் வருவேனே;புட்டினின் புதிய அவதாரம்- வேல் தர்மா

இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் நாட்டு மக்களுக்கு 2020 ஜனவரி 15-ம் திகதி உரையாற்றிய போது இரசியாவின் அரசியலமைபு மாற்றப்படும் என்றார். கடந்த இருபது ஆண்டுகளாக இரசியாவின் தலைமை அமைச்சராகவும் அதிபராகவும் மாறி மாறி பதவி வகித்து தனது இறுக்கமான பிடியில் வைத்திருக்கும் 67 வயது நிரம்பிய புட்டீனின் ஆட்சிக்காலம் 2024-ம் ஆண்டுடன் முடிவடைகின்றது.

இரசியாவின் தற்போதைய அரசியலமைப்பின் படி ஒருவர் இரண்டு தடவை மட்டுமே அதிபராகப் பதவி வகிக்க முடியும். முன்பு ஓர் இரசிய அதிபரின் பதவிக் காலம் நான்கு ஆண்டுகள் என இருந்தது அதை தனது பதவிக்காலத்தை அதிகரிக்க ஆறு ஆண்டுகளாக நீடித்தார் புட்டீன்.

1999-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 9-ம் திகதி இரசியாவின் அதிபர் பொறிஸ் யெல்ஸ்ரின் தனது தற்காலிக தலைமை அமைச்சராக விளடிமீர் புட்டீனை நியமித்தார். அப்போதைய இரசியப் பொருளாதார நெருக்கடியை பொருளாதாரம் படித்தவரான புட்டீன் திறைமையாகக் கையாண்டதால் தனக்கு அடுத்த அதிபராக புட்டீனே வருவார் என யெல்ஸ்ரின் அறிவித்தார். புட்டீன் தற்காலிக தலைமை அமைச்சராக பதவியேற்ற சில நாட்களில் இரசியத் தலைநகர் மாஸ்க்கோவில் உள்ள குடியிருப்பு தொடர்மாடிகளில் நடந்த குண்டு வெடிப்புக்களுக்கு காரணமாகவிருந்த செஸ்னியத் தீவிரவாதிகளுக்கு எதிராக அவர் எடுத்த கடும் நடவடிக்கைகள் இரசிய மக்களிடையே அவரது மதிப்பை உயர்த்தியது.

இரசிய ஆட்சி முறைமைச் சவால்கள்

1993-ம் ஆண்டு வரையப்பட்ட இரசிய அரசியலமைப்புச் சட்டப்படி இரசியாவின் ஆட்சி முறைமை தலைவரால் நடத்தப்படும் கூட்டாட்சி குடியரசு. ஆனால் தனிமனித ஆதிக்கம், ஊழல் போன்றவற்றால் அது மாசு படுத்தப்பட்டுள்ளது. மக்களால் நேரடியாகத் தேர்தெடுக்கப்படும் அதிபருக்கு அதிக அதிகாரங்கள் உண்டு. பாராளமன்றத்தின் அனுமதியுடன் தலைமை அமைச்சரை அதிபர் நியமிப்பர். பாராளமன்றம் இரு அவைகளைக் கொண்டது. கீழவைக்கான உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு மாநில அரசுகளும் இரு உறுப்பினர்களை மேலவையான கூட்டாட்சிச்  சபைக்குத் தெரிவு செய்யும். இரசியர்கள் பொதுவுடமை ஆட்சியின் கீழ் 70 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு மக்களாட்சி முறைமை பற்றிய அனுபவம் குறைவு. அதனால் ஒரு தனிப்பட்ட மனிதரின் அடக்கு முறையின் கீழ் வாழ்வது அவர்களுக்கு சிரமமல்ல. ஆனால் ஊழல் குறைந்ததும் பொறுப்புக் கூறும் தன்மை மிக்கதுமான ஒரு நிர்வாகக் கட்டமைப்பை புட்டீனால் உருவாக்க முடியவில்லை.

பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடக் கூடிய மக்களாட்சி முறைமை இரசியாவில் இருக்கின்றது. ஆனால் அக்கட்சிகள் எவ்வளவு சுதந்திரமாகச் செயற்படுகின என்பது கேள்விக்குறியே. புட்டீனை எதிர்த்த அலெக்ஸி நவன்லி சிறையில் அடைக்கப்பட்டார் விமர்சித்த பொறிஸ் நெமொ மர்மமான முறையில் கொல்லப்பட்டார். புட்டீன் பெரும்பாலான ஊடகங்களைக் கட்டுப்படுத்துகின்றார்.49149074 303 நானே வேறு வடிவில் வருவேனே;புட்டினின் புதிய அவதாரம்- வேல் தர்மா

2001-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புட்டீனின் ஐக்கிய இரசியக் கட்சி இரசியப் பாராளமன்றத்தின் 450 தொகுதிகளில் 335ஐக் கைப்பற்றி வைத்திருக்கின்றது.  பழைமை வாதத்தையும் தேசிய வாதத்தையும் கலந்த கொள்கையுடைய கட்சி இரு கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டது. சில கட்சிகள் பல கட்சி முறைமை இருக்கின்றது என்பதைக் காட்டுவதற்காக போலியாக புட்டீனால் உருவாக்கப்பட்டுள்ளன என்ற குற்றச் சாட்டையும் மேற்குலக அரசியல் ஆய்வாளர்கள் முன் வைக்கின்றார்கள்.

புதிய அமைச்சரவை

இருபது ஆண்டுகளாக தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் புட்டீன் இன்னும் இரசியாவின் பொருளாதாரப் பிரச்சனையை முற்றாகத் தீர்க்கவில்லை. இரசியாவில் வங்குரோத்து அடையும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2018-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019-ம் ஆண்டு 57% அதிகரித்திருந்தனர். இருபது மில்லியன் இரசியர்கள் வறுமைக் கோட்டின் கீழ் இருக்கின்றார்கள். இரசியாவின் பொருளாதாரப் பிரச்சனைக்குத் தான் காரணமல்ல என்று இரசியர்களுக்கு உணர்த்தும் பொருட்டு இரசியாவின் முழு அமைச்சரவையையும் புட்டீன் பதவி விலகச் செய்து புதிய தலைமை அமைச்சராக அதிகம் அறியப்படாத மிக்கையில் மிஷுஸ்டீனை நியமித்தார். இவர் இரசியாவின் வருமானவரித்துறைக்கு பொறுபான உயர் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர்.

இரசிய வருமானவரித்துறையை எண்மியமயப்படுத்தி (Dgitalization) இரசிய அரச நிதியின் நிலையை சீர் செய்தவர். புட்டீனைன் அமைச்சரவை மாற்றத்தை பாராளமன்றத்தின் 434 உறுப்பினர்களில் 383 பேர் ஆதரித்து வாக்களித்தனர். யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. இரசியாவின் பொருளாதாரத்தை சீர் செய்யும் நோக்குடனே புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டது. அது 416பில்லியன் பெறுமதியான தேசியத் திட்டங்களை நிறைவேற்றப் போகின்றது. “எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் எமது நாட்டின் உலகத் தராதரத்தையும் இத்திட்டங்கள் உயர்த்தும்” என்றார் புட்டீன்15802828755e3133fb9e8726.09937621 நானே வேறு வடிவில் வருவேனே;புட்டினின் புதிய அவதாரம்- வேல் தர்மா

2018-ம் ஆண்டு இரண்டாவது தடவையாகவும் அதிபராகப் பதவி ஏற்ற விளடிமீர் புட்டீன் 2024-ம் ஆண்டு வரை பதவியில் இருக்கலாம். அதன் பின்னர் அவரது நிலை என்னவாகும் என்ற கேள்விக்கு புட்டீன் கொடுக்கும் பதில் பின்னரும் நானே வேறு வடிவில் வருவேனே. ஆம் 2024இன் பின் அதிபராகப் பதவி வகிக்க முடியாத புட்டீன் தலைமை அமைச்சரின் அதிகாரங்களை அதிகரிக்கும் வகையில் இரசியாவின் அரசியலமைப்பைத் திருத்தப் போகின்றார்.

அதன் பின்னர் அவரே தலைமை அமைச்சராக இருப்பார். 2020 ஜனவரி 15-ம் திகதி நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில் இதை வெளியிட்டுள்ளார். இரசியாவின் சீர்திருத்தச் சபையின் அதிகாரங்களும் அதிகரிக்கப்படவுள்ளன. 2024-ம் ஆண்டின் பின்னர் புட்டீனே அதன் தலைவராகவும் பணியாற்றலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.  புட்டீனின் வலது கரமாக நீண்ட காலம் இருந்தவரும் புட்டீனுக்குப் பின் அவரது இடத்தை நிரப்பக் கூடியவராகக் கருதப்பட்ட தலைமை அமைச்சர் மெட்வேடேவ் இப்போது ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

இரசியாவில் ஓர் அரசியல் சீர்திருத்தம் அவசியம் என்பதை மேற்கு நாட்டினர் மட்டுமல்ல இரசியாமீது மிகுந்த பற்றுள்ள இரசியர்களும் கடந்த பல ஆண்டுகளாகக் கூறிவருகின்றனர். ஆட்சியாளர்களின் பொறுப்புக் கூறல் பொறிமுறைமை மேம்படுத்தப் பட வேண்டும் என்பது பலராலும் உணரப்பட்டுள்ளது. இரசியப் பாராளமன்றத்திற்கு அதிக அதிகாரம் கொடுப்பது அதன் முதற்படி.

சதுரங்க விளையாட்டிலும் ஜூடோ சண்டையிலும் தேர்ச்சி பெற்ற முன்னாள் உளவுத்துறை அதிபரான புட்டீன் சிரியாவில் தனது நகர்வுகளைச் சாமர்த்தியமாக்ச் செய்து தனது எதிரிகளைத் திணறடித்தார்.

GettyImages putin நானே வேறு வடிவில் வருவேனே;புட்டினின் புதிய அவதாரம்- வேல் தர்மா

 

அதே போல் புட்டீன் தனது பொருளாதார அறிவை இரசிய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பயன்படுத்த வேண்டும். அவரது புதிய அரசியலமைப்பு சதுரங்க விளையாட்டில் அரசரைப் பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தும் CASTLING போல் புட்டீனைப் பாதுகாப்பான அதிகார நிலைக்கு உயர்த்தாமல் இரசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் கூடிய வகையில் அமைய வேண்டும். இரசியாவின் முன்னாள் சதுரங்க உலகச் சம்பியன் கஸ்பரோவ் புட்டீன் தன்னை இரசியாவின் உச்சத் தலைவராக்க முயல்கின்றார் எனக் குற்றம் சாட்டுகின்றார்.