Tamil News
Home செய்திகள் நாட்டின் கல்வித்துறையும் அரச பல்கலைக்கழகங்களும் எதிர்கொள்ளும் நெருக்கடி

நாட்டின் கல்வித்துறையும் அரச பல்கலைக்கழகங்களும் எதிர்கொள்ளும் நெருக்கடி

2022 ஆம் ஆண்டிலே நாட்டிலே தீவிரமாகிய‌ பொருளாதார‌ நெருக்கடி இன்று வரை தொடர்கிறது. வறிய மக்களையும், உழைக்கும் வர்க்கத்தினரையும், போரிலே பேரிழப்புக்களைச் சந்தித்த வடக்குக் கிழக்கினைச் சேர்ந்த‌ சமூகங்களையும், மலையக மக்களையும், சாதிய ரீதியாகப் பல நூற்றாண்டுகளாக அடக்குமுறைகளைச் சந்தித்த மக்களையும் இந்த நெருக்கடி தொடர்ந்தும் தீவிரமாகப் பாதித்து வருகிறது.

இந்த நெருக்கடியின் தாக்கம் நாட்டின் கல்வித் துறையிலும், அரச பல்கலைக்கழகங்களிலும் இன்று மிகவும் மோசமாக உணரப்படுகிறது. நாட்டில் இலவசக் கல்வி முறை நடைமுறையில் இருந்தாலும், நெருக்கடியினைத் தொடர்ந்து, எமது பல்கலைக்கழகங்களிலே பயிலும் மாணவர்கள் தமது உணவு, போக்குவரத்து, மின்சாரம், இருப்பிடம் போன்றவற்றுக்காகச் செலவிடும் தொகை தற்போது பாரிய அளவிலே உயர்ந்திருக்கிறது.

பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வியினை இடைநிறுத்தும் போக்கினையும், குறைந்த காலத்திலே பூர்த்தி செய்யக் கூடிய பட்டப்படிப்புகளுக்குத் தம்மை மாற்றிக் கொள்ளும் போக்கினையும், வெளிநாடுகளுக்குச் செல்லும் போக்கினையும், கல்வி பயிலும் காலத்திலே சுரண்டல்களுக்கு மத்தியிலே தொழில் செய்து தமது குடும்பங்களைப் பராமரிக்க வேண்டிய கட்டாய நிலைமையினையும் நாம் தற்போது அவதானிக்கிறோம். இதனால் எமது மாணவர்களின் கல்வி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

இலங்கையிலே அரச‌ பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் தொகையிலே அண்மைய ஆறு வருடங்களிலே 50% அதிகரிப்பு ஏற்பட்டிருப்பினும், கல்விக்கான அரசின் முதலீட்டின் அளவு 50% இனால் குறைவடைந்திருக்கிறது. அரசின் வரிவிதிப்புக் கொள்கைகள் காரணமாகவும், நாணய மாற்று வீதத்திலே ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் விளைவாக‌ உயர்கல்விக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கான பிணைப் பணத்தில் ஏற்பட்டிருக்கும் பாரிய அதிகரிப்பின் காரணமாகவும், அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவின் காரணமாகவும், நாட்டின் அரச பல்கலைக்கழகங்களிலே கற்பிக்கும் விரிவுரையாளர்கள் தமது பல்கலைக்கழகப் பதவிகளைத் துறந்து நாட்டை விட்டு அதிக எண்ணிக்கையில் வெளியேறிக் கொண்டிருக்கிறனர்.

சில விரிவுரையாளர்கள் அரசினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட லீவுத் தளர்வுகளினை அடுத்து, நீண்ட கால லீவிலே வெளிநாடுகளுக்குச் செல்லுகின்றனர். இந்த நிலைமைகள் காரணமாக அரச பல்கலைக்கழகங்கள் ஆசிரியர், ஊழியர் பற்றாக்குறையினை எதிர்கொண்டவாறு உள்ளன. புதிய விரிவுரையாளர்களை உள்ளீர்ப்பதற்குப் பல தடைகளும் கட்டுப்பாடுகளும் அமுலிலே இருக்கின்றமையினால் பல்கலைக்கழகங்களின் நிலைமை மோசமடைந்து செல்லுகிறது.

பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துமனையில் மருத்துகள், ஆய்வுகூடத்துக்குத் தேவையான கருவிகள், இரசாயன பதார்த்தங்கள், கம்பியூட்டர்கள் போன்றவற்றினைக் கொள்வனவு செய்யவோ, திருத்தவோ போதிய நிதி இன்றி எமது பல்கலைக்கழகங்கள் நாளாந்தம் திண்டாடிக் கொண்டிருக்கின்றன. அதேபோல அதிகரித்து வரும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய‌ கட்டடங்களையும், விடுதிகளையும் அமைக்கவும், பழைய கட்டடங்கள், விடுதிகளைத் திருத்தவும் பல்கலைக்கழகங்களிடம் பணம் இல்லாத நிலையும் அவதானிக்கப்படுகிறது. இதனால் இலங்கையின் அரச‌ பல்கலைக்கழகங்களினால் வழங்கப்பட்டு வரும் கல்வியின் தரம் குறைவடைவதற்கான அபாயம் உருவாகியுள்ளது.

இவ்வாறு அரச பல்கலைக்கழகங்களிலே ஒரு நெருக்கடியான சூழலினை உருவாக்கி வரும் அரசாங்கம், அதே சமயத்திலே தனியார் பல்கலைக்கழகங்களையும் கல்வி நிறுவனங்களையும் உருவாக்கும் முயற்சிகளிலும், கல்வியினை ஒரு வியாபாரப் பண்டமாக்கும் வகையிலான‌ கொள்கைகளை உருவாக்கும் முயற்சிகளிலும் அதிக நாட்டம் காட்டி வருகிறது. இதனால் நாட்டின் இலவசக் கல்வித்துறை ஓர் அபாயமான நிலைக்குத் தள்ளப்படுகிறது.

மறுபுறத்திலே, உள்நாட்டுக் கடன் சீரமைப்பு என்ற பெயரில், பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளடங்கலாக அனைத்து உழைக்கும் மக்களின் சேமிப்பாக ஈ. பி. எஃப் கணக்குகளிலும், ஏனைய ஓய்வூதிய நிதியங்களிலும் இருக்கும் பணத்தினைக் கொள்ளையிடும் அரசின் முயற்சி கல்வித் துறையின் மீதும், நாட்டின் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் மீதும் விழுந்த ஒரு பாரிய அடியாக அமைந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணைக்கு இணங்க அரசினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார நிகழ்ச்சித் திட்டங்கள் கல்வித்துறைக்கும் ஏனைய துறைகளுக்கும் ஒரு நெருக்கடியான சூழ்நிலையினையே தோற்றுவித்துள்ளன. அரசின் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக மாணவர்களும், உழைக்கும் வர்க்கத்தினரும் மேற்கொண்டு வரும் போராட்டங்களை நசுக்கும் வகையிலே புதிய சட்டங்களை உருவாக்கவும் அரசு முயற்சித்து வருகிறது.

நாட்டின் கல்வித்துறையும், அரச பல்கலைக்கழகங்களும் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து நாட்டு மக்கள் மத்தியிலே விழிப்புணர்வினை உருவாக்கும் வகையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் பல விழிப்பூட்டல் கூட்டங்களையும், ஊடகவியாலாளர் சந்திப்புக்களையும், பிரசார நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் சார்பிலே இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

நாடும், கல்வித் துறையும் இன்று எதிர்நோக்கும் சவால்களை முறியடித்து, மக்கள் சமத்துவத்துடனும், ஜனநாயகத்துடனும் வாழ்வதற்கும், இலவசக் கல்வித் துறையினைப் பாதுகாத்துப் பலப்படுத்தவும் நாம் சமூகமாகக் கூட்டிணைவுடன் செயற்படுவதும், போராடுவதும் அவசியம். இலவசக் கல்வித் துறையின் மீட்சிக்காக எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்திலே கல்விக்காக ஒதுக்கப்படும் தொகையிலே அதிகரிப்புச் செய்யப்பட வேண்டும்.

அதே போல பொருளாதார‌ நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்விலே முன்னேற்றம் ஏற்படும் வகையிலான நலன்புரித் திட்டங்களுக்கு அரசு கூடியளவு நிதியினை ஒதுக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வென்றெடுக்கவும், எமது நாட்டினையும், கல்வித் துறையினையும் பீடித்திருக்கும் நெருக்கடியினை முடிவுக்குக் கொண்டு வரவும், அரச அடக்குமுறைகளை முறியடிக்கவும், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரின் ஆதரவினையும், ஒத்துழைப்பினையும் நாம் எதிர்பார்த்து நிற்கிறோம்.

ஊடக அறிக்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

யாழ்ப்பாணம்.

07 செப்டெம்பர் 2023

Exit mobile version