Tamil News
Home செய்திகள் நாடு முழுவதையும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பரப்புக்குள் கொண்டு வரும் வஞ்சக நடவடிக்கை

நாடு முழுவதையும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பரப்புக்குள் கொண்டு வரும் வஞ்சக நடவடிக்கை

தொல்லியல் துறையில் பக்கச்சார்பற்ற நடைமுறை பேணப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும். இத்துறைக்கென நியமிக்கப்படுவோர் துறைசார் நிபுணர்களாக இருக்க வேண்டும்,நாட்டின் பன்மைத்துவத்தைப் பிரதிபலிக்கக்கூடிய விதத்தில் இத்துறையில் நியமனங்கள் அத்தியாவசியமாதனதாகும். அதைவிடுத்து நாடு முழுவதையும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பரப்புக்குள் கொண்டு வரும் வஞ்சக நடைமுறையாகவே தொல்லியல் துறை இலங்கையில் கையாளப்படுகிறது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

தொல்லியல் துறை தொடர்பில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கையாளுவதற்கான ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. இதன் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி கமால் குணரட்ண அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

இவ்விடயம் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது. பொதுத் தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில் இவ்வாறான நியமனங்கள் செய்யப்பட முடியுமா? எந்தவொரு நியமனமும் இக்காலத்தில் செய்யப்பட முடியாது என்பதே பொதுவான விதியாகும். காரணம் அது வாக்காளரைக் கவர்வதற்கான அனுமதிக்கப்பட முடியாத ஒரு செயல் என்பதும்ää இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாதிருக்கும் என்பதுமேயாகும்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் இவ்விடயங்கள் தொடர்பில் மிகவும் அலட்சியமாக,சட்டங்களை மதிக்காத வகையில் அல்லது அசட்டைத் துணிவோடு, குறிப்பிடப்பட்ட இக்காலத்தில் செய்யப்பட முடியாத பல செயல்களைத் தொடர்ந்து செய்தவண்ணமே இருக்கின்றார்.

தொல்லியல் இடங்கள் தொடர்பான விடயங்கள் தொன்மங்களைக் கண்டறிதல் என்பவற்றுக்கு அப்பால் இலங்கை முழுவதையும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பரப்புக்குள் கொண்டு வருகின்ற வஞ்சகத் தனமான ஒரு நடைமுறையாகவே இலங்கையில் தொடர்ச்சியாகக் கையாளப்பட்டுக் கொண்டு வருகின்றது.

உண்மையில், மிகவும் அவதானத்தோடும் நிதானத்தோடும் உண்மையைக் கண்டறியும் இத்துறையில் பக்கச்சார்பற்ற நடைமுறை பேணப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பது இன்றியமையாத ஒரு விடயமாகும். இவ்வகையில் இத்துறைக்கென நியமிக்கப்படுவோர் துறைசார் நிபுனர்களாக இருக்க வேண்டும் என்பதும் முதன்மையான விடயமாக இருக்க வேண்டிய அதேவேளை இலங்கையின் பன்மைத்துவத்தை பிரதிபலிக்கக்கூடிய விதத்தில் இத்துறையில் நியமனங்கள் இடம்பெறுதலும் அத்தியாவசியமாதனதாகும்.

நடைபெற்றிருக்கும் நியமனமானது மேற்குறித்த எந்த நியமங்களையும் பின்பற்றாத ஒன்றாகவே அமைகின்றது. பொதுத் தேர்தல் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள இவ்வேளையில் தனது கட்சிக்கு பௌத்த சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் வகையில் ஜனாதிபதி அவர்கள் நடந்து கொள்கின்றார் என்பது வெளிப்படையானதாகும். பதவிக்கு வந்த பின்னர் பல்வேறு துறைகளிலும் இராணுவ அதிகாரிகளை நியமித்து தன்னைச் சுற்றிவர இராணுவத்தினரால் ஒரு கவசத்தை அமைத்துக் கொள்கின்றார் ஜனாதிபதி என்கின்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. இதன் காரணமாக ஜனாதிபதித் தேர்தல் வெற்றியிலே ஜனாதிபதி அவர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த வியத்மக குழுவினர் கூட இந்த இராணுவ வளையம் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ளார்கள் என்று சொல்லப்படுகின்றது. அண்மையில் சுகாதார அமைச்சு அத்துடன் மகாவலி அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சுகளுக்கான செயலாளர்களாக முன்னாள் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்களது அதிருப்தியிலிருந்து அவர்களை மீட்டெடுத்து தனது ஆதரவுப் பங்காளிகளாக ஆக்குவதில் ஜனாதிபதி அவர்கள் கொண்ட அக்கறை தான் தொல்லியல் தொடர்பிலான இந்த நியமனம் என்று சொல்லப்படுகின்றது.

இந்த நாட்டின் உண்மையான பூர்வீகம் தொல்லியல் ஆதாரங்களோடு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதிலே மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் இலங்கையின் தொல்லியல் ஆய்வு நிறுவனமானது இந்த வகையில் இயங்கவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டே கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற புதிய அரசியலமைப்பு ஆக்க செயற்பாட்டில் நாங்கள் இவ்விடயம் தொடர்பில் அவதானமாயிருந்தோம். அரசியலமைப்பு வரைபின் உருவாக்கத்தில் அடுத்த அங்கமாக வனத்திணைக்களம், வனசீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை,தொல்லியல்துறை என்பன தொடர்பான சட்டங்கள் மீளாயப்பட்டு இவை தொடர்பில் மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கக் கூடிய வகையிலான ஏற்பாடுகள் செய்யப்படுவதற்கான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம்.

வரைபின் இறுதி அங்கமாக இவ்விடயம் கையாளப்பட இருந்த வேளையிலே தான் ஒக்டோபர் 26 அரசியல் உறுதியின்மை நிகழ்வு ஏற்பட்டது. முழுக்க முழுக்க புதிய அரசியலமைப்பை வரவிடாது தடுக்கும் ஒரு செயலாக நாம் அதனைப் பார்த்தோம். இச்செயற்பாட்டின் தொடர்ச்சியான நிகழ்வுகளில் ஒன்றாகவே இந்த தொல்லியல் தொடர்பான ஜனாதிபதி செயலணி அமைகின்றது.

பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்ப முடியாத மக்களைக் கூட்டி எதிர்ப்புத் தெரிவிக் முடியாத இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அவர்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவது நாகரிக உலகம் அரசு மீது இன்னுமொரு கேள்வியைத் தொடுப்பதற்கு காலாய் அமையும்.

இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் மொட்டுக் கட்சியிலும் அதற்கு ஆதரவு வழங்கக் கூடிய கட்சிகளிலும் வேட்பாளர்களாக நிற்பவர்களும் அவற்றின் தலைவர்களும் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். மேற்குறித்த விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் மொட்டுக் கட்சிக்கு ஆதரவு வழங்கும்படி மக்களை கேட்டுக் கொள்வதில் என்ன தார்மீக நியாயம் இருக்கின்றது என்பதை இவர்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

பொய்மையால் மூடப்படவுள்ள எமது பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு தடையாக இருக்கும் தங்கள் சிந்தனைகளில் அவர்கள் தெளிவடைய வேண்டும். தமிழ் மக்களை தமிழர் அரசியல், தமிழர் பாரம்பரியம், வடகிழக்கில் தமிழர்களின் இருப்பு என்கின்ற விடயங்களின் பால் அக்கறையோடும்ää உறுதியோடும் செயற்படுகின்ற அரசியல் சக்திக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தங்களுடைய அரசியற் சிந்தனைகளை இந்தக் கடைசி நேரத்திலாவது சரியான திசைக்கு திருப்பும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

Exit mobile version