நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீதான சிங்களத்தின் அச்சம் ஏன் ?

2009ல் ஆயுத மோதல்களின் முடிவுக்கு பின்னராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக இருக்கின்ற வி.உருத்திரகுமாரன் அவர்களே, எஞ்சியுள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களின் ஒருவரென சிங்கள அரச கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரான பேராசிரியர் றோகன் குணரட்ண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து வெளிவருகின்ற ஆங்கில ஊடமொன்று பதில் அளித்துள்ள அவர், வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆவணங்களின் அடிப்படையில் பல அமைப்புக்களும், பலரும் தடைசெய்யப்பட்டனர்.

அதில் குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் முக்கிய பணியாற்றிய வி.உருத்திரகுமாரன் அவர்களே, தற்பபோது எஞ்சியுள்ள முக்கிய விடுதலைப்புலிகளின் ஒருவராக அமெரிக்காவில் காணப்படுகின்றார் என்றும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எனும் முன்னிணி அமைப்பை அவர், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஒஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் முன்னெடுத்து வருகின்றார் என்றும் எச்சரித்துள்ளார்.

இதேவேளை புலம்பெயர் தமிழர்களின் அரசாங்கமாக இயங்குகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, இலங்கையின் வடக்கு – கிழக்கில் தமிழீழத்தை உருவாக்குவதனை இலக்காக கொண்டு செயற்படுகின்றது என்றும், இதனை சர்வதேச நாடுகள் தடை செய்ய வேண்டும் என்று ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபைக்கு வந்துள்ள முன்னாள் இராணுவ அதிகாரிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீதும், அதன் பிரதமர் மீதும் தமது அச்சத்தையும், எதிர்ப்பையும் சிங்கள தலைவர்கள் பலரும் தொடர்சியாக வெளியிட்டு வருகின்ற நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசியற்துறை, 2009 மே மாத்தில் பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்த சிங்கள அரசு, தமிழர்களின் சுதந்திர வேட்கையினை இல்லாது செய்து விடலாம் என நினைத்திருந்தது.

ஆனால் அந்த சுந்திர வேட்கையினையும் தாகத்தினையும் உயிர்ப்போடு வைத்திருக்கும் வகையில், சரியாக ஒரு மாத காலத்தில் (யூன் 2009) அறிவிக்கப்பட்டட நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, இன்று பத்து ஆண்டுகளாக வலிமையான ஒரு தேசிய அரசியல் இயக்கமாக வளர்ந்துள்ளது. இந்த வலிமையினை உணர்ந்தபடியால்தான் சிங்கள் கொள்கை வகுப்பாளர்களும் , தலைவர்களும் அச்சப்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளது.