நம்பிக்கை தரும் அமெரிக்கா

அமெரிக்காவின் இன்றைய அரச அதிபர் மதிப்புக்குரிய பைடன் அவர்கள் “அமெரிக்கா பழைய நிலைக்கு வருகிறது” என்னும் தலைப்பில் அமெரிக்கா மனிதஉரிமைகளைப் பாதுகாக்கும் விடயத்தில் முன்பு போல உலகில் செயற்படும் என உறுதியளித்துள்ளது நம்பிக்கை தரும் உறுதி மொழியாக உள்ளது. இந்நேரத்தில் ஈழத்தமிழர்களின் மனித உரிமைப் பிரச்சினை என்பது அவர்களுடைய தன்னாட்சி உரிமையுடன் தொடர்பானது. ஆகையினால் அதனைக் கவனத்தில் எடுத்து மனித உரிமைகள் பேணல் இலங்கையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை உலகத் தமிழர்கள் அமெரிக்காவிடம் வலியுறுத்த வேண்டும்.

குடியேற்றவாதத்திலிருந்து ஈழத்தமிழர்கள் சுதந்திரம் பெற்ற 73ஆவது ஆண்டு 04.02.2021இல் நிறைவு பெற்றுள்ள இந்நேரத்தில், ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையை மீளப்பெறும் போராட்டமாகவே அது அமைந்தது என்ற வரலாற்று உண்மையை நாம் உலகுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

இலங்கை தீவு குடியேற்ற ஆட்சிக்குட்பட்ட காலம் முதலாக அதன் தேச இனங்களாக இருந்த ஈழத்தமிழர்களும், சிங்களவர்களும் தங்களுடைய தன்னாட்சியை மீள நிறுவப் போராடினார்கள்.  யாழ்ப்பாண அரசின் இறைமையை போர்த்துக்கேயரிடம் 1621 இல் இழந்த ஈழத்தமிழர்கள், அன்று முதல்  1948ஆம் ஆண்டுவரையான 327 ஆண்டுகள் போராடினர். பண்டாரவன்னியனைப் பிரித்தானியர் 1832இல் கைப்பற்றியதனால் தங்கள் இறைமையை இழந்த வன்னிச் சிற்றரசின் ஈழத்தமிழர்கள் 116 ஆண்டுகள் போராடினர். 1505இல் தமது இறைமையைப் போர்த்துக்கேயரிடம் இழந்த கோட்டே அரசின் கரையோரச் சிங்கள மக்கள், 443 ஆண்டுகள் போராடினர். 1815இல் பிரித்தானியர்களிடம் தமது இறைமையை இழந்த  கண்டி அரசின் கண்டிச் சிங்கள மக்கள் 133 ஆண்டுகள் போராடினர்.

சுருக்கமாகச் சொல்வதானால் தனித்தனி இறைமையுள்ள ஈழத்தமிழ் மக்களும் சிங்கள மக்களும் தங்கள் தங்கள் இறைமைகளை குடியேற்றவாதத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கு ஒன்றிணைந்து நடாத்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழ்பேசும் மக்களாக இலங்கையில் நீண்டகாலமாக வாழ்விட உரிமைகள் கொண்ட முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும் தங்கள் தங்கள் அரசியல் உரிமைகளுக்காக இணைந்த விடுதலை வரலாறாக இலங்கைத் தீவின் குடியேற்றவாதத்திற்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டம் அமைந்தது.

மொழிவழியாகத் தமிழ்  சிங்கள தேச இனங்களுக்கு ஒவ்வொரு பிரதிநிதித்துவத்தை அளித்தே 1833இல் பிரித்தானிய குடியேற்றவாத அரசு கோல்புறூக் கமரோன் அரசியலமைப்பை நிறுவி வரலாற்றில் அதுவரை இல்லாத வகையில் இலங்கையை ஒருநாடாக மக்களின் விருப்பு கேட்கப்படாத நிலையில் பிரகடனப்படுத்தியது. ஆயினும் 1923இல் மன்னிங்ஸ் அரசியல் சீர்திருத்தக் காலம் வரை 90 ஆண்டுகள் மொழிவாரிப் பிரதிநிதித்துவ முறைமைக்கு ஊடாகச் சிங்களப் பெரும்பான்மையைத் தவிர்த்தே பிரித்தானியா ஆட்சி செய்தது. ஆயினும் 1931இல் பிரித்தானியா அளித்த டொனமூர் அரசியல் சீர்திருத்தம் தேசஇனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படாத வகையிலான வாக்குரிமை முறையினை அறிமுகம் செய்தமையே சிங்களப் பெரும்பான்மை ஆட்சி இலங்கையில் தோன்ற வழிவகுத்தது.

தொடர்ந்து பிரித்தானியா 1948இல் சோல்பரி அரசியல் அமைப்பு 29 (2) துணை விதியின் மூலம் இலங்கையில் இனங்கள் மதங்களுக்கு எதிரான பாராளுமன்ற சட்டவாக்கத்திற்கு எதிராகப் பிரித்தானியப் பிரிவுக்கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யலாம் என்னும் காப்புரிமையை அளித்து இலங்கைக்குச் சுதந்திரத்தை அளித்தது. இந்த சோல்பரி அரசியலமைப்பை வன்முறைப்படுத்தி 1972இல் ஈழத்தமிழர்களின் விருப்புப் பெறப்படாத சிறீலங்கா அரச பிரகடனமே ஈழத்தமிழர்களை நாடற்ற தேசஇனமாக்கி இன்று வரையான மனித உரிமைப் பிரச்சினைகளின் மூலகாரணமாக உள்ளது. இதனை இன்றைய அமெரிக்க அரசு கவனத்தில் எடுத்து ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையை உறுதி செய்வதன் மூலமான மனித உரிமைகள் பேணலுக்கு சிறீலங்காவை எதிர்வரும் மனித உரிமைகள் ஆணையக அமர்வில் நெறிப்படுத்தினாலே அது பிரச்சினைக்கான இயல்பான தீர்வுக்கு வழிசமைக்கும்.

அதே நேரத்தில் மனித உரிமை கண்காணிப்பு என்னும் உலக அமைப்பும் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்த மிகத் தெளிவான அறிக்கையை வெளியிட்டதும் அல்லாமல் அதிக அளவு தமிழர்களைத் தனது குடிகளாகக் கொண்டுள்ள கனடா அரசு எதிர்வரும் மார்ச் மாத மனித உரிமைகள் குறித்த மனித உரிமை ஆணையக அமர்வில் உரிய முறையில் முடிவுகள் அமைய தலைமைப் பொறுப்புடைய நாடாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. இதனையே ஈழத்தமிழர்களை அதிக அளவில் குடிகளாகக் கொண்ட பிரித்தானியா உட்பட்ட ஐரோப்பிய அவுஸ்திரேலிய நாடுகளும் செய்ய வேண்டும் என்பது இலக்கின் எதிர்பார்ப்பாக உள்ளது.