Home உலகச் செய்திகள் தேவை எவ்வளவு உள்ளதோ அதுவரை தாக்குதல் தொடரும்- இஸ்ரேல் பிரதமர்

தேவை எவ்வளவு உள்ளதோ அதுவரை தாக்குதல் தொடரும்- இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல்-பாலத்தீனம் இடையிலான மோதல் ஏழாவது நாளாக தொடரும் நிலையில், காசாவில் இருந்து வரும் ஏவுகணை தாக்குதல்களுக்கு தாங்கள் வலிமையான பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  அறிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது.

காசா முனையை ஹமாஸ்  போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. மேற்குகரை பகுதியின் பாலஸ்தீன அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார். மேற்குகரையின் சில பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

822632 israelattack 1 தேவை எவ்வளவு உள்ளதோ அதுவரை தாக்குதல் தொடரும்- இஸ்ரேல் பிரதமர்

இதற்கிடையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரும் காவல்துறையினரும் நுழைந்து அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் காவல்துறையினருக்கும்   இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில் பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலையடுத்து காசா முனை மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இதனால், இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இரு தரப்பும் மாறிமாறி ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன.

காசா முனையில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து மேற்குகரை பகுதியிலும் பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதலை கட்டுப்படுத்த இஸ்ரேல் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து நேற்று காசா நகரில் வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் செயல்பட்டுவந்த கட்டடத்தை ஒரு நொடியில் தாக்கி தரைமட்டமாக்கியது இஸ்ரேல்.

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில் இதுவரை மொத்தம் 168 பேர் உயிரிழந்துள்ளனர். அதில்   ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவர்களும் பலியானதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், காசா மீதான தங்கள் தாக்குதல் இன்னும் முடியவில்லை என்றும் தேவை எவ்வளவு உள்ளதோ அதுவரை இந்த தாக்குதல் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இஸ்ரேலிய நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக பேசிய பிரதமர் நெதன்யாகு, “எங்கள் (இஸ்ரேல்) மீது தாக்குதல் நடத்தியவர்கள் தான் இந்த மோதலுக்கான குற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர நாங்கள் (இஸ்ரேல்) அல்ல” என்று கூறியுள்ளார்.

Exit mobile version