தேசியகீதமானது சிங்களத்திலும் தமிழிலும் பாடப்படவேண்டும் என்ற கல்வெட்டு இப்போதும் கூட சுதந்திரசதுக்கத்தில் இருக்கின்றது.

1949ஆம் ஆண்டிலே சுதந்திர சதுக்கத்திலே இருக்கின்ற சுதந்திரதின கட்டிட திறப்பு விழா நடைபெற்றபோது தேசியகீதமானது சிங்களத்திலும் தமிழிலும் பாடப்படவேண்டும் என்ற கல்வெட்டு அங்கு காணப்பட்டது அது இப்போதும்கூட சுதந்திரசதுக்கத்தில் இருக்கின்றது.தேசிய கீதம் பாடுவது என்பது நாட்டினை இணைக்கும் நடவடிக்கையே தவிர அது நல்லிணக்கத்தினை எந்தவகையிலும் குழப்பும் செயற்பாடு அல்ல என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதி தலைவர் பிரசன்னா இந்திரகுமார்,புளோட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.கேசவன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிழையான தகவல்களின் அடிப்படையில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனகபண்டார அவர்கள் தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதியும் பிரதமரும் இதனை கருத்தில்கொண்டு எதிர்வரும் சுதந்திர தின விழாவில் தமிழிலும் தேசிய கீதம் பாடுவதற்கான நடவடிக்கையினை எடுத்து இந்த நாட்டில் தொடர்ச்சியாக நல்லிணக்கத்தினை வாழவைப்பதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தேசிய கீதம் தமிழில் பாடப்படமாட்டாது என்ற செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது. பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாணசபை அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோன் அவர்கள் எதிர்வரும் சுதந்திரதின நிகழ்வில் தேசியகீதம் சிங்கள மொழியில் மட்டும்தான் பாடப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

அரசியலமைப்பு சட்டத்திலே இரண்டு மொழிகளில் தேசியகீதம் இருக்கின்றபோதிலும் கூட இரண்டுமொழிகளில் பாடுவது என்பது இரண்டு இனங்கள் இந்த நாட்டிலே இருப்பதை வெளிப்படுத்துவதாக அமையும் என்றும் இலங்கையிலிருக்கின்ற சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஒரே இனத்தவர்களே என்ற வகையில் தேசியகீதம் ஒரே மொழியில்தான் பாடப்பட வேண்டும் என்றவகையிலான ஏற்பாட்டை ஜனக பண்டார தென்னக்கோன் அவர்கள் செய்துவருவதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இது சம்பந்தமாக பல்வேறுவிதமான அபிப்பிராயங்கள்  வெளிப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

1949ஆம் ஆண்டிலே சுதந்திர சதுக்கத்திலே இருக்கின்ற சுதந்திரதின கட்டிட திறப்பு விழா நடைபெற்றபோது தேசியகீதமானது சிங்களத்திலும் தமிழிலும் பாடப்படவேண்டும் என்ற கல்வெட்டு அங்கு காணப்பட்டது அது இப்போதும்கூட சுதந்திரசதுக்கத்தில் இருக்கின்றது.

1952ல் டி.எஸ்.சேனநாயக்கா அவர்களின் ஆட்சிக் காலத்தில் இந்த விடயம் மிகச் சிறப்பாகத் தொடங்கப்பட்டது. மூன்று மொழிப் பத்திரிகைகளிலும் தேசிய கீதமானது தமிழிலும் சிங்களத்திலும் ஆங்கிலத்தில் சிங்கள உச்சரிப்புகளோடும் வெளியிடப்பட்டது. சுதந்திரதினத்தின்போது தேசியகீதம் சிங்களத்திலும் தமிழிலும் பாடப்பட்டது.

1954ஆம் ஆண்டிலே அப்பொழுதிருந்த பிரதமர் சிறிஜோன் கொத்தலாவ அவர்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்றபோது நடைபெற்ற நிகழ்விலே அது அரசவைபவம் என்ற அடிப்படையில் அங்கு தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது என்பது வரலாற்றிலே பொறிக்கப்பட்டிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து தமிழ்ப் பிரதேசங்களிலும் தமிழ்ப் பாடசாலைகளிலும் தேசியகீதம் தமிழில் பாடப்பட்டது.

1956ஆம் ஆண்டிலே தனிச் சிங்களச்சட்டம் கொண்டுவரப்பட்ட போதிலும்கூட அதனைத் தொட்ந்து வந்த ஆண்டுகளில் தமிழ்ப் பாடசாலைகளில் நாடெங்கிலும் தேசியகீதம் தமிழில் பாடப்பட்டுவந்திருக்கின்றது.

2010ஆம் ஆண்டு டிசெம்பர் 12ஆம் திகதி அமைச்சரவையில் அப்போதிருந்த உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன அவர்களால் ஒரு பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அதிலே வேறு எந்த நாடுகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேசியகீதம் இசைக்கப்படுவதில்லை என்ற அடிப்படையில் இனிமேல் தமிழில் தேசியகீதம் பாடப்படக்கூடாது என்ற அடிப்படையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த செய்தி பத்திரிகையில் வந்தபோது அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இல்லை அவ்வாறு தடை செய்யப்படவில்லை எனக் கூறியிருந்தார். அந்த விடயம் உத்தியோகபூர்வமானதல்ல என்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

பிழையான தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது. பல நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் அந்த நாட்டின் தேசியகீதம் பாடப்படுவதை நாம் காணலாம்.

பெல்ஜியம்,கனடா போன்ற நாடுகளில் மூன்று மொழிகளில் தேசியகீதம் பாடப்படுகின்றது. நியூசிலாந்துää சூரினா ஆகிய நாடுகளில் இரு மொழிகளில் தேசியகீதம் பாடப்படுகின்றது. தென்னாபிரிக்காவில் ஐந்து மொழிகளில் தேசியகீதம் பாடப்படுகின்றது. சுவிற்சர்லாந்திலே நான்கு மொழிகளில் தேசியகீதம் பாடப்படுகின்றது.

2010ஆம் ஆண்டிலே குறித்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும்பொழுது சிங்கப்பூரிலே பாடுவது போன்று ஒரே மொழியிலே தேசிய கீதம் பாடவேண்டும் என்று அமைச்சர் கூறினார். சிங்கப்பூரிலே 75சதவீதம் சீனர்கள் வாழ்கின்றனர். ஆனால் சிங்கப்பூரிலே தேசிய கீதம் மலாய் மொழியில் பாடப்படுகின்றது. அதேபோன்று இந்தியாவிலும் ஒரு மொழியில்தான் தேசிய கீதம் பாடப்படுகின்றது. ஆனால் அங்குள்ள சிறுபான்மை மக்களின் மொழியான வங்க மொழியில் தான் தேசியகீதம் பாடப்படுகின்றது.

ஆகவே இந்த விடயங்களை அடிப்படையாகக்கொண்டு நாம் பார்க்கினற்றபோது 2016ஆம் ஆண்டிலே 68ஆவது சுதந்திரதினம் கொண்டாடப்பட்டபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தொடங்கிவைத்த சுதந்திரதின விழாவிலே அங்கு சிங்களத்திலும் பின்பு தமிழிலும் தேசியகீதம் பாடப்பட்டது. இதன் தொடக்க நிகழ்விலே மைத்திரிபால சிறிசேன அவர்கள் 26வருடங்களாக பிரிந்து கிடந்த நாட்டினை தான் இணைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். ஆகவே தேசிய கீதம் பாடப்படுவதென்பது நாட்டை இணைக்கின்ற செயலே தவிர நல்லிணக்கத்தை எந்த வகையிலும் குழப்புகின்ற செயலல்ல.

1978ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியலமைப்பிலே தமிழ் மொழியும் சிங்கள மொழியுமு; ஆட்சி மொழிகள் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆகவே தேசியகீதம் பாடப்படுவதி;ல் சமஅந்தஸ்து தமிழ் மொழிக்கு வழங்கப்பட வேண்டும். தமிழ் அரசியலமைப்புச்; சட்டத்திலே தமிழ் தேசிய கீதம் அச்சொட்டாக மொழி பெயர்க்கப்பட்டது மட்டுமல்ல இசைகூட ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இசைக்குறிப்புகள் சொல்லப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

பிழையான தகவல்களின் அடிப்படையில் ஜனகபண்டார தென்னக்கோன் அவர்கள் இந்த முயற்சியை எடுத்துக்கொண்டிருக்கின்றார் என நாங்கள் கருதுகின்றோம். இந்த விடயம் அரங்கிற்கு வருவதற்கு முன்பு சுதந்திரதினத்திலே தேசியகீதம் சிங்களத்தில் மட்டும் பாடப்படுவதற்கு முன்பதாக ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களும் இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு தமிழிலும் தேசியகீதம் பாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது இந்த நாட்டில் தொடர்ச்சியாக நல்லிணக்கத்தை வாழவைப்பதற்கான விடயமாக இருக்கும்.