தென்பகுதி அரசியல் கட்சிகளிடம் இருந்து கூட்டமைப்பு பாடத்தை கற்றுக்கொள்ளுமா?-அகரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 18 வருடங்கள் கடந்தும் இன்று வரை தேர்தல் திணைக்களத்தில் ஏன்? ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து அதற்கான ஒரு பொதுச் சின்னம் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை.

மாமனிதர் தராக்கி சிவராமும் அருடன் சேர்ந்த ஊடகவியலாளர்களும் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன்,பொட்டம்மான் உட்பட ஏனைய போராளிகளுடன் கலந்துரையாடி தமிழ் மக்களினுடைய உரிமையை வென்றெடுப்பதற்கு இராணுவரீதியிலான பலத்திற்கு சமனான அரசியல் பலம் ஒன்று பாராளுமன்றத்திற்குள்ளேயும்,வெளியேயும்,சர்வதேசத்திலும் எமக்கு வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக ஈழவிடுதலைக்காக போராடிய ஈ.பி.ஆர்.எல்.எப்,ரெலோ,தமிழர் விடுதலைக் கூட்டணி,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரால் 2001ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர்.

பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் ஆனந்தசங்கரி,சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட உட்கட்சி முரன்பாடு காரணமாக உதயசூரியன் சின்னமும்,கட்சியும் நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டது அதன் பின்னர் 28வருடங்களாக தந்தை செல்வநாயகத்தினால் முடக்கிவைக்கப்பட்டிருந்த தமிழரசுக் கட்சியையும் அதன் வீட்டுச் சின்னத்தையும் பாவிக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் அதற்கான ஒரு பொதுச்சின்னம்,புரிந்துணர்வு-ஒப்பந்தம்,யாப்புக் கொண்ட ஒரு முறையான கட்டமைப்பாக செயற்படவேண்டும் என்று பங்காளிக் கட்சிகளால் வலியுறுத்தப்பட்டும் தமிழரசுக் கட்சினுடைய தான்தோன்றித்தனத்தால் இன்று வரை கூட்டமைப்பு சட்டபூர்வமற்ற ஒரு கட்சியாகவே செயற்படுகின்றது.

ஐக்கியம்,ஒற்றுமை பற்றி பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் மேற்குறிப்பிடப்பட்ட கட்டமைப்புக்களை கொண்டு ஒரு கொள்கை ரீதியான கூட்டமைப்பை முன்னெடுத்து இதுவரை தாங்கள் இழைத்த இராஜதந்திர தோல்விகளுக்கு மக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்புக் கேட்கும் பட்சத்திலே தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளமுடியும். தவறும் பட்சத்தில் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவும் தமிழரசுக் கட்சியை வளர்ப்பதற்கும் இவர்கள் தன்னிச்சையாகவும் சர்வாதிகாரத்தனமாகவும் முடிவெடுப்பதற்காக தமிழ் மக்கள் இனியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நம்ப தயாரில்லை.

தேர்தல் ஆணையாளர் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படலாம் என்ற அறிவித்தலை விடுக்கவுள்ளார்.சம்பந்தன்,சுமந்திரன் உண்மையான ஒற்றுமையை விரும்புபவர்களாக இருந்தால் தேர்தல் திணைக்களத்தில் கூட்டமைப்பை பதிவு செய்து ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதற்காக  கட்சிகளின் ஒற்றுமைக்கான அழைப்பைவிடத் தயாரா?

அத்தோடு இரண்டாவது வழிமுறையாக கூட்டமைப்பில் இருக்கும் பதிவு செய்யப்பட்ட இரண்டு அரசியல் கட்சிகள் சேர்ந்து தமக்கான பொதுச் சின்னத்தை கோரும் பட்சத்தில் தேர்தல் ஆணையாளர் அவ் பொதுச் சின்னத்தை வழங்குவதற்கும் சட்டத்தில் இடமுண்டு.

மேற்குறிப்பிடப்பட்ட எவற்றையும் செய்யாமல் தேர்தல்காலத்தில் மட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாக இருக்கவேண்டும் ஒற்றுமையை குலைக்க கூடாது கூட்டமைப்புக்கள் இருந்து யாரையும் நாங்கள் வெளியேற சொல்லவில்லை என்று உண்மைக்கு புறம்பான பசப்பு வார்த்தைகளை கூறுவது தமிழ் மக்களை மீண்டும் முட்டாள்களாக்கப்பாக்கின்றார்களா என்று கேள்வி எழுகின்றது.

இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த தென்பகுதியை சேர்ந்த இரண்டு பிரதான கட்சிகளான ஜக்கிய தேசியக் கட்சி,சிறிலாங்கா சுதந்திரக் கட்சி இவர்களுடன் மக்கள் விடுதலை முன்னணியும் தேர்தல் காலங்களில் தங்களுடைய கட்சி சின்னம் எல்லாவற்றையும் ஒரு பக்கம் வைத்துவிட்டு மேற்குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு கட்சிகளும்; பத்துக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளுடனும் சிவில் அமைப்புக்களுடன் இணைந்து ஒரு கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திட்டு ஒரு பொதுச் சின்னம் அதற்கான பெயரிலே போட்டியிடுக்கின்றார்கள்.இறுதியாக நடந்த ஜனாதிபதித்தேர்தலிலே பொதுஜனபெரமுன,புதிய ஜனநாயக முன்னணி,தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் தங்களுக்குள் எப்படி ஒரு கூட்டமைப்பாக செயற்படவேண்டும் என்பதை காட்டியுள்ளனர் அத்துடன் இது போன்று பல நாடுகளிலும் கூட்டாட்சி முறை உள்ளது.

திரு சம்பந்தன்,சுமந்திரன்,மாவை சேனாதிராசா போன்றவர்கள் தாம் எழுபது வருடம் பழமைவாய்ந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்றும் முதிர்ச்சி அடைந்த அரசியல்வாதிகள் என்றும் கூறிக்கொள்வபர்கள் மேற்குறிப்பிடப்பட்ட தென்பகுதி அரசியல் கட்சிகளிடம் இருந்து கூட்டமைப்பாக எப்படி செயற்படுவது என்ற பாடத்தை இனியும் கற்றுக்கொள்ளவில்லை என்றால்  தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்குகின்ற தகுதி இவர்களுக்கு துளியவும் கிடையாது என்றே கூறவேண்டும்.

ஆகவே சுயநலக்கட்சி அரசியல் கடந்து  கூட்டமைப்பு விட்ட தவறுகளை திருத்திக்கொண்டு சட்டரீதியாக,வெளிப்படத்தன்மை,கட்டமைப்புடன் செயற்படக்கூடிய ஒரு புதிய கூட்டமைப்பைக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். இவர்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றப்போகின்றவர்கள் யார்?பொறுத்திருந்து பார்ப்போம்.