தூதரகத்தின் வலியுறுத்தலினால் அரசாங்கம் மௌனம் காத்ததா? சீன கப்பல் குறித்து சஜித் கேள்வி

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அணு மூலக்கூறுகளுடன் சர்வதேச கப்பலொன்று வந்ததாகக் கூறப்படுவது தொடர்பிலும் அக்கப்பலுக்குரிய நாட்டின் தூதரகத்தின் வலியுறுத்தலுக்கு கட்டுப்பட்டு அரசு இதனை கண்டுகொள்ளாது மௌனம் காப்பதாக கூறப்படுவது தொடர்பிலும் அரசு உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சின் ஊக்க மருந்து தடை தொடர்பான விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அணு மூலக்கூறுகளுடன் வந்துள்ளதாக்க கூறப்படும் கப்பல் குறித்து கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பகிரப்பட்டு வருகின்றது. 20 ஆம் திகதி அ ம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சர்வதேச கப்பலொன்று அணு மூலக்கூறுகளுடன் உள்நுழைந்துள்ளது. இதனை இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கண்டறிந்துள்ளது என்பதே அந்த செய்தி. இது உண்மையான செய்தியென நாம் நம்புகின்றோம், தவறான செய்தி என்றால் அது குறித்து அரசு அறிவிக்க முடியும். ஆனால் இலங்கை கடற்படைக்கு கூட இந்த கப்பலை பரிசோதனை செய்ய அனுமதிக்கவில்லை என கூறப்படுகின்றது.

துறைமுகத்தில் இருந்து இந்த கப்பலை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. ஆனால் இப்போது வரையிலும் இந்த விடயத்தில் அரசு மௌனமாகவுள்ளது. ஒரு வெளிநாட்டு தூதரகத்தின் வலியுறுத்தலுக்கு கட்டுப்பட்டே அரசு இவ்வாறு செயற்பட்டு வருகின்றது எனக் கூறப்படுகின்றது. எனவே இந்த செய்தியின் உண்மை தன்மையை நன்கு ஆராய்ந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அணு மூலக்கூறுககள் எமது நாட்டுக்குள் கொண்டுவருவது என்பது பாரிய அச்சுறுத்தல் . எனவே அரசு உடனடியாக இதனை ஆராய்ந்து அவ்வாறானதொரு கப்பல் வந்துள்ளது உண்மை என்றால் உடனடியாக கப்பலை வெளியேற்ற வேண்டும், அல்லது இலங்கை கடற்படையை கொண்டு சோதனையிட அனுமதிக்க வேண்டும்” என்றார். ஆனால் சஜித் பிரேமதசாவின் இந்த ஒழுங்குப் பிரச்சினைக்கு அரச தரப்பில் யாரும் பதிலளிக்கவில்லை.