துணிச்சல் மிக்க அரசியல் போராளி மாமனிதர் குமார் பொன்னம்பலம் – இன்று 21 ஆவது நினைவு தினம்

ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் மறக்கமுடியாத ஓர் அத்தியாயம் மாமனிதர் குமார் பொன்னம்பலம் 2000 ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு. இன்று இருபது ஆண்டுகள் கடந்து 21 வருடங்களாகிவிட்ட நிலையிலும் அவரை தமிழ் பேசும் மக்கள் எளிதில் மறக்க மாட்டார்கள்.

சிங்கத்தின் குகைக்குள் இருந்துகொண்டு புலியாக உறுமிய குமார் பொன்னம்பலத்துக்கு அவர் மரணமடைந்த பின்னர் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மாமனிதர் விருதுவழங்கிக் கௌரவித்தார். குமாரின் மனைவியும், பிள்ளைகள் இருவரும் நேரில் சென்று அதனைப் பெற்றுக்கொண்டார்கள்.

ஈழத்தமிழர் விடுதலை வேள்வியில் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து உழைத்துச் செயல்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அவரை நாம் இழக்க வேண்டிய துர்பாக்கிய நிகழ்வு ஏற்பட்டது.

அவருடைய தந்தையார் உலக மாமேதை ஜீ.ஜீ.பொன்னம்பலம் இலங்கை வரலாற்றில் ஒப்பாரும், மிக்காரும் அற்ற வழக்கறிஞசர். தமது வழக்குரைக்கும் திறமையை தென்கிழக்கு ஆசியா எங்கும் பதித்தமதியூகி. தமது ஆங்கில நாவன்மையால் ஐக்கிய நாடுகள், ஸ்தாபனத்தை கலக்கியவர். 1947இல் சோல்பரி கமிசன் முன்வாதிட்ட விடயங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டன.

ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் சிங்கள மேலாதிக்கம் எப்படி தொழிற்படும் என்பதை உணர்ந்து தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற கோசத்தை முழங்கச் செய்தார். சிங்கள மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் ஐம்பதுக்கு ஐம்பது என்ற கோரிக்கையை கொணர்ந்தவர். அதே வழியில் சட்டத்துறையிலும், அரசியலிலும் செயற்படுவதற்கு தமது புத்திரர் குமார் பொன்னம்பலத்தையும் வழிநடத்தினார்.

92 துணிச்சல் மிக்க அரசியல் போராளி மாமனிதர் குமார் பொன்னம்பலம் - இன்று 21 ஆவது நினைவு தினம்

குமார் பொன்னம்பலத்துக்கான மாமனிதர் விருதை அவரது மனைவியிடம் தேசியத் தலைவர் வழங்கிய போது…

தந்தை ஜீ.ஜீக்குப் பின்னர் கட்சியைப் பொறுப்பேற்றார் அமரர் குமார் பொன்னம்பலம் தந்தையார் மறைந்த பின் தமிழ் காங்கிரஸ் கட்சியை பொறுப் பேற்று வளர்த்தெடுத்தார். புகழ்பெற்ற வழக்கறிஞர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றதோடு பாரிஸ்டர் பட்டமும் பெற்றார். இவர் தமிழ் மக்களின் துயர் துடைப்பதற்காக பல வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றார். செம்மணி புதைகுழிகள் பற்றிய செய்திகள் வெளிவருவதற்கு காரணமாக இருந்த கிருஷாந்தி பாலியல் வல்லுறவு வழக்கு, மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலைகள் சம்பந்தப்பட்ட விசாரணைகளின் போது கொடுமைகள் புரிந்த இலங்கை இராணுவத்திற்கு எதிராக வாதிட்டு பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர்.

துணிச்சலுடன் களமிறங்கிய அரசியல், சட்டப் போராளி1996இல் பயங்கரவாத தடை சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகளை ஆஜராகுபவர்கள் பயங்கரவாதிகள் என்று மகுடம் சூட்டப்பட்ட வேளையில் தாம் தமிழீழவாதி எனக்கூறி எவ்வித லாபமும் கருதாமல் வழக்காடியவர் குமார் பொன்னம்பலம். அதுமாத்திரமன்றி சிறைகளில் வாடும் பிஞ்சு உள்ளங்களுக்கு குமார் அண்ணை எங்களை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையும் ஊட்டியவர்.

1983 ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய பயங்கரவன்முறை தமிழ் மக்களினது வாழ்க்கை நிலைகுலையலைத் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவதும் காணாமல் போவதும் அதிகரித்தன. சித்திரவதைகளும், பாலியல் வல்லுறவுகளும், கொலைகளும் சாதாரணமாக நடைபெறத் தொடங்கின.பயங்கரவாத எதிர் நடவடிக்கை என்று தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட உரிமை மீறல்களை தட்டிக்கேட்க யாரும் முன்வரவில்லை. அவற்றுக்காக நீதிமன்றத்தில் வாதாடி நியாயம் பெற்றார். பேரினவாதிகளின் எதிர்ப்புகளை செவிமடுக்காது. கொழும்பில் தமது குடும்பத்துடன் வாழ்ந்துகொண்டு சிங்கத்தின் குகையிலிருந்து உறுமிய புலி போல செயற்பட்டார். ஏனைய சட்ட வல்லுநர்கள் போல் வசதியாக, ஆடம்பரமாக வாழ நினைத்திருந்தால் வாழ்ந்திருக்கலாம். அதை விடுத்து எந்நேரமும் ஈழத்தமிழ் மக்களை சிந்தித்து நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிடினும் வெளியே சிறப்பாக செயலாற்றினார்.

உண்மைகளை அம்பலப்படுத்தியவர் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இலங்கையின் இனப்பிரச்சினையின் உண்மைச் சொரூபத்தை, தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் அடக்கு முறைகளை வெளிப்படுத்தலிலும் பெரும் பங்காற்றியவர். சர்வதேச அளவில் நடைபெறும் மனித உரிமை மாகாநாடுகள், கருத்தரங்குகள் பலவற்றில் கலந்து கொண்டு தமது சிறந்த ஆங்கில புலமையூடாக புள்ளிவிபரங்களோடு இனப்பிரச்சனைகளின் பல்வேறு பரிமாணங்களையும் சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தினார். இதன் காரணமாக அதிகார சக்திகளின் பலத்த கண்டனத்திற்கும், விமர்சனத்திற்கு, அச்சுறுத்தலுக்கும் ஆளானார். அதிகாரப் பீடத்தை மட்டுமல்ல, அதற்குப் பக்க பலமாக இருந்த தமிழ் கட்சிகளையும் அவர் கடுமையாக சாட்டினார். எங்களுக்குரிய உரிமைகளை அனுபவிக்க யாரிடமும் கைகட்டி நிற்கவோ, கெஞ்சிக்கேற்கவோ வேண்டிய அவசியமில்லை என்று உரக்கக் கூறியவர். தமக்கு உயிர் ஆபத்து இருக்கின்றது எனத் தெரிந்து கொண்டும் சளைக்காது தமிழ் மக்களுக்கு நியாயம் வேண்டிச் செயல்பட்டவர்.

பொன்னம்பலம்.800 துணிச்சல் மிக்க அரசியல் போராளி மாமனிதர் குமார் பொன்னம்பலம் - இன்று 21 ஆவது நினைவு தினம்சிங்கள, பெளத்த பேரினவாதத்திற்கு எதிராக தன்னந்தனியே குரல் கொடுத்தவர். சில சில்லறை அரசியல் செய்வோர் மிகுந்த பாதுகாப்புடன் நடமாடிய போதும் அவர் எவ்வித பாதுகாப்பும் இன்றி செயல்பட்டவர். எதிர்காலத்தில் நிலஅபகரிப்புக்கள் தமிழ் மக்களில் உரிமைகள் படிப்படியாகப் பறிபோகும் நிலை போன்ற பல ஆபத்துக்கள் இருப்பதை தீர்க்கதரிசியாக சொல்லிவந்தவர். அனைவரும் துணிவாக செயல்பட வேண்டும் என்று கூறிய தீர்க்கதரசி. நீதிக்காகவும், சமாதானத்திற்காகவும், சமூக விடுதலைக்காகவும் உயிருக்கும் அஞ்சாது தம்மையே அர்ப்பணித்த அவரது வாழ்வு சிறப்பானது.

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் துணைத்தலைவராக இருந்து சிறிது காலம் செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமரர் ஜி.ஜி.பொன்னம்பலம், அமரர் குமார் பொன்னம்பலம் ஆகியோரின் அரசியல் பங்களிப்பை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். அவரது குடும்பத்திலிருந்து அடுத்த தலைமுறை மூன்றாம் தலைமுறையால் மக்களுக்கும் இந்நாட்டுக்கும் செய்யப்பட போகின்ற அரசியல் பங்களிப்பு என்னவென்பதை தமிழ்மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.