துட்டகைமுனு நினைவுச் சின்னத்திற்கு முன்பாக பதவியேற்றுள்ளதால் கோத்தபயா நவீன துட்ட கைமுனுவா-சிவாஜிலிங்கம்

சிறிலங்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் கோத்தபயா ராஜபக்ஸவிற்கு, தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 100 நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று(18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இத்தகவலை வெளியிட்டார்.

தமிழர் இனப்பிரச்சினைக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படாது விட்டால், சர்வதேச ரீதியாக ஐ.நா. உதவியுடன் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் பொதுசன வாக்கெடுப்பு நடத்துமாறு பகிரங்கமாக கோருவோம் எனவும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகளில் ஈடுபட்ட போர்க் குற்றவாளியுமான கோத்தபயாவால் இனப்பிரச்சினைக்கு ஓர் நீதியான தீர்வு கிடைக்கும் வரை அவருக்கு வாழ்த்துக் கூறும் மனநிலையில் நானும் தமிழ் மக்களும் இல்லை.

ஜனநாயக நாட்டில் ஒருவர் ஜனாதிபதியாக பதவியேற்று 100 நாட்கள் வரையில் அவருக்கு எதிரான போராட்டங்களோ, கருத்துக்களோ, விமர்சனங்களோ முன்வைக்கப்படுவதில்லை. இதற்கமைவாக தற்போது பதவியேற்றுள்ள சிறிலங்கா ஜனாதிபதியான கோத்தபயா ராஜபக்ஸவிற்கும் 100 நாட்கள் நாம் அவகாசம் வழங்குகின்றோம். நூறு நாள் முடிவதற்குள் அவர் தமிழர் இனப்பிரச்சினைக்கு ஓர் சரியான தீர்வை எடுக்க வேண்டும். ஆகக் குறைந்தது ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி தீர்வையாவது முன்வைக்க வேண்டும்.

புதிய ஜனாதிபதி அநுராதபுரம் துட்டகைமுனு நினைவுச் சின்னத்திற்கு முன்பாக பதவியேற்றுள்ளதால் அவர் நவீன துட்ட கைமுனுவாக மாறப்போகின்றாரா?  அல்லது வாக்களித்தாலும் வாக்களிக்காது விட்டாலும் அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதியாக இருக்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனவும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.