Tamil News
Home செய்திகள் தீர்மானத்தை வலுவற்றதாக்க முயற்சி?

தீர்மானத்தை வலுவற்றதாக்க முயற்சி?

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தை வலுவற்றதாக்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

பிரித்தானியாவினால் சமர்ப்பிக்கப்படும் தீர்மானத்தில் 90 தொடக்கம் 95 விகிதமான பரிந்துரைகள் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மிசேல் பசெலற் இனால் வெளியிடப்பட்ட அறிக்கையை தழுவியதாக இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதனை பிரித்தானியத் தரப்பும் உறுதி செய்திருந்தது.

எனினும் கடந்த வாரம் சிறீலங்காவில் உள்ள பிரித்தானியத் தூதுவர் சாரா ஹட்டன், கனேடிய தூதுவர் டேவிட் மைகினோன் மற்றும் ஜேர்மன் தூதுவர் கோஜர் சேபேட் ஆகியோர் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா, அமைச்சர் ஜி.எல்.பீரீஸ், அமைச்சர் மகிந்த சமரசிங்கா மற்றும் வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே ஆகியோரை சந்தித்திருந்தனர்.

அதன் பின்னர் அவர்கள் கடந்த வியாழக்கிழமை(11) சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சவை சந்தித்திருந்தனர். இதனை தொடர்ந்து தீர்மானத்தின் சரத்துக்கள் தொடர்பில் அவர்கள் மீளாய்வு செய்ய வாய்ப்புக்கள் உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

எனவே இது தொடர்பில் தயாகத்தில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளும், புலம்பெயர் தமிழ் சமூகமும் இணைத்தலமை நாடுகளுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என அரசியல் அவதானி ஒருவர் இலக்கு ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

Exit mobile version