Tamil News
Home செய்திகள் திரையரங்கு பணியாளர்கள் 7 பேர் உட்பட வடக்கில் 13 பேருக்கு கொரோனா உறுதி

திரையரங்கு பணியாளர்கள் 7 பேர் உட்பட வடக்கில் 13 பேருக்கு கொரோனா உறுதி

 

வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் 7 பேர் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல திரையரங்கில் பணியாற்றுபவர்கள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 309 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதில் 7 பேர் யாழ்ப்பாணத்தில் உள்ள திரையரங்கு பணியாளர்கள். அந்த திரையரங்கில் பணயாற்றுபவருடன் தொடர்புடைய ஒருவருக்கு தொற்றுள்ளமையை அடுத்து திரையரங்கு கடந்த இரண்டு நாளாக மூடப்பட்டுள்ளது.

அங்கு பணியாற்றுபவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 7 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் ஒருவர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டறியப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே தொற்றாளருடன் நேரடித் தொடர்புடையவர்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்றொருவர் யாழ். பல்கலைக்கழக மருத்து வபீடத்தில் கற்கும் மாணவன். இவர் காத்தான்குடியிலிருந்து வருகை தந்த நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர். இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று 451 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. ஏனைய இருவர் மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்கள். இவர்களில் ஒருவர் குழந்தையை பிரசவித்த தாயார் என்று மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Exit mobile version