Tamil News
Home செய்திகள் திருத்தப்பட்ட தீர்மானத்தில் உள்ள மாற்றங்கள் என்ன?

திருத்தப்பட்ட தீர்மானத்தில் உள்ள மாற்றங்கள் என்ன?

பிரித்தானியா தலைமையிலான இணைக்குழு நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தின் இறுதி வரைபு இன்று (5) வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அவர்களின் பரிந்துரைகளில் எவையும் சேர்க்கப்படவில்லை என்பதுடன், தமிழ் மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் சிறீலங்கா அரசு ஈடுபட்டது என்பதையும் பிரித்தானியா, கனடா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் இணைந்து மறைத்துள்ளன.

எனினும் சில திருத்தங்கள் தீர்மானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதில் புதிதாக சேர்க்கப்பட்ட விடயங்கள் வருமாறு:

சிறீலங்கா மக்கள் சுதந்திரமாக மனித உரிமைகளை அனுபவிக்கும் நிலை ஏற்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டதை சிறீலங்காவில் உள்ள எல்லா நபர்களும் என மாற்றப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாள் சிறீலங்கா அரச தலைவர் மற்றும் ஐ.நா செயலாளர் நாயகம் ஆகியவர்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைவாக எல்லா இனமக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற கருத்து சேர்க்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கும், நீதிகோரலுக்கும் ஐ.நா மற்றும் அனைத்துலக அமைப்புக்களின் உதவிகளை பெறவேண்டும் என கூறப்பட்டதில் அமைதியை நிலைநாட்டுவதற்கும் என்ற வசனமும் சேர்க்கப்பட்டுள்ளது (இது இந்தியா மேற்கொண்ட திருத்தம்)

2015 ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுக்கும் இடையில் சிறீலங்கா அரசுக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் இடையில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இருந்ததாக முன்னர் குறிப்பிடப்பட்டதில் ஆண்டுகளும், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் என்பதில் ஆக்கபூர்வமான என்ற சொல்லும் நீக்கப்பட்டுள்ளது.

தீர்மானத்தில் உள்ளவற்றை சிறீலங்கா நிறைவேற்ற வேண்டும் எனவும், சிறப்பு நடைமுறையின் பரிந்துரைகளை கருத்தில் எடுக்க வேண்டும் எனவும் புதிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை சிறீலங்காவில் எல்லா தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் என மாற்றப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரச தலைவரால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழு முன்னைய ஆணைக்குழுவின் அறிக்கைகளை பரிசீலினை செய்ய வேண்டும் என்ற கருத்து சேர்க்கப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை ஆய்வு செய்வது என்ற பந்தியில் மனித உரிமை மீறல்கள் மற்றும் அதனுடன் இணைந்த குற்றங்கள் என்ற சொற்பதம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணையாளர் அலுவலகம் ஆதராங்களை சேகரிப்பது என்ற சொல்லும் இணைக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் மனித உரிமைகள் சீரழிந்து வருவதாக தெரிவிக்கப்படும் பந்தியில் தமிழ் மற்றும் முஸ்லீம் சிறுபான்மை மக்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் ஊடக சுதந்திரம் மறுக்கப்படுவதாகவும், போர் நினைவாலையங்கள் அழிக்கப்படுவதாகவும் புதிய சொற்கள்; சேர்க்கப்பட்டுள்ளன.

கொரோனோ நோயினால் மரணிக்கும் முஸ்லீம் மக்களின் உடல்களை எரிப்பது என சிறீலங்கா அரசு முடிவெடுத்திருந்தது என தெரிவிக்கப்பட்ட முன்னைய பந்தியில் இருந்து சிறீலங்கா அரசு முடிவெடுத்தது என்ற சொல் அகற்றப்பட்டுள்ளது. (இது சிறீலங்கா அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க மேற்கொள்ளப்பட்டது).

 

Exit mobile version