Tamil News
Home செய்திகள் திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இருந்த இலங்கைத்தமிழ் கைதி உயிரிழப்பு

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இருந்த இலங்கைத்தமிழ் கைதி உயிரிழப்பு

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் கைதியாக சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை, மட்டக்களப்பைச் சேர்ந்த முகமது அலி என்ற கைதி இன்று உயிரிழந்துள்ளார். இந்த முகாமில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்  உட்பட 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் தங்களை விடுதலை செய்யக்கோரி மன்னார் மீனவர்கள் 5 பேர் உட்பட இலங்கைத் தமிழர்கள் 78 பேர் கடந்த 9ஆம் திகதி தொடக்கம் 16 நாட்களாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தங்களை பொய் வழக்கில் கைது செய்துள்ளனர். அந்த வழக்கிலும் தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில் அடைத்துள்ளனர். பிணை கிடைத்தாலும் வேறு வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன்வைத்து, தங்களை விடுவிக்குமாறும் கோரியிருந்தனர்.

கடந்த மாதம் 24ஆம் திகதி ஒரு நாள் போராட்டம் நடத்தினர். ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனாலும் விடுதலை செய்யவதற்காக நடவடிக்கை எடுக்காததால் கடந்த 9ஆம் திகதி முதல் காத்திருப்புப் போராட்டத்தை தொடர்கின்றனர்.

போராட்டத்தில் இலங்கை மட்டக்களப்புப் பகுதியைச் சேர்ந்த முகமது அலியும் பங்கேற்றார். இவர் கடந்த 19ஆம் திகதி உடல் நலக்குறைவால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், முகமது அலி (52) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்புப் பகுதியைச் சேர்ந்த முகமது அலி, எழுத்தாளர். பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். இலக்கிய ஆர்வம் உள்ளவர்.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக இந்தியா வந்ததாக இராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிந்தும் 4 மாதங்களாக விடுவிக்கப்படாமல் இருந்ததாக சிறப்பு முகாம்வாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Exit mobile version