தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை அனுஸ்டிக்க தொடரும் தடைகள்

நாட்டில் ஜனநாயக நிலைமையினை ஏற்படுத்துமாறு கோரியும், தமிழர்களுக்கு இந்த நாட்டில் சுமுகமான சூழல் ஏற்படவேண்டும் என்று மட்டக்களப்பில் இன்று முன்னெடுக்கப்படவிருந்த ஜனநாயக செயற்பாட்டிக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு வழங்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஆலய வளாகம் ஒன்றில் பூசையொன்றினை செய்து எமது போராட்டத்தினை நடாத்தவிருந்தோமே தவிர எந்த தனிமனிதரையும் நினைவுகூர நடவடிக்கையெடுக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இன்று காலை எனக்கு நீதிமன்றம் ஊடாக மேலும் ஒரு தடையுத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளது.ஒரு மாதத்திற்குள் ஐந்து தடவைகள் எனக்கு நீதிமன்றம் ஊடான தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

தடையுத்தரவுக்கு மேலாக தன்னை வந்துசந்திக்குமாறு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் எனக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்.பொலிஸ் அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை தெரியாதா என்பது கேள்வியாகவுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே தியாக தீபம் திலிபன் நினைவு தினங்களை செய்யக்கூடாது என்பதற்கான தடையுத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தது.

அதன் காரணமாக அந்தநினைவு தினங்களைச்செய்யாமல் நாட்டின் ஜனநாயகத்திற்காக நாங்கள் உண்ணாவிரதம் அனுஸ்டிக்கப்போகின்றோம் என்று எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக, இன்றைய தினம் வடக்கில் உண்ணாவிரதம் அனுஸ்டிக்கப்படும் நிலையில், நாங்களும் மட்டக்களப்பு கல்லடியில் அவ்வாறான நிகழ்வினை ஏற்பாடுசெய்தோம்.

அதில் எந்தவொரு தனிநபரையும் நினைவுகூரும் நிகழ்வாக இல்லாமல் இந்த நாட்டில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்படவேண்டும் இந்த நாட்டில் தமிழர்களுக்கு சுதந்திரமான நிலை அமையவேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்து பூஜையொன்றினை ஏற்பாடுசெய்து அந்த கோவில் வளாகத்திற்குள் எமது கோரிக்கையினை முன்னிறுத்த இருந்தோம்.

ஆனால் அந்த நிகழ்வினையும் இடைநிறுத்துமாறு காத்தான்குடி பொலிஸாரினால் தடையுத்தரவு பெறப்பட்டு எனக்கும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரவணபவனுக்கும் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் பிரதேச செயலாளருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கும் உதவி பொலிஸ் அத்தியட்சகரை வந்து சந்திக்குமாறு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்பொழுது வேடிக்கையான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

நாங்கள் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை செய்யவேண்டுமாகவிருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆலயங்கள் இருக்கின்றன அவற்றில் எங்களது ஆதரவாளர்களைக்கொண்டு நினைவேந்தல்களை செய்திருக்கமுடியும். ஆனால் நாங்கள் சட்டத்தினை மதிக்கும் ஒரு கட்சியென்ற ரீதியில் நாங்கள் எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. சிறுபிள்ளைத்தனமாக தடையுத்தரவுகளைப் பெற்று பொலிஸார் செயற்படுகின்றனர்.

நாங்கள் பொலிஸை எதிர்த்து நீதிமன்றத்தினை எதிர்த்து செய்கின்றோம் என்பதை விட இந்த அரசாங்கம் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுகின்றது என்பதை நாங்கள் வெளிப்படுத்தவேண்டும்.

ஒரு ஆலயத்தில் பூஜைசெய்வதை விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்தி அதற்கான தடையுத்தரவு பெறப்படுகின்றது என்றால் இந்த நாட்டில் ஜனநாயகம் எந்தளவுக்கு உள்ளது என்பது அனைவருக்கும் புரிந்துகொள்ளமுடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்தவர்கள் இன்று சிந்திக்கவேண்டும். உங்களது உறவுகளை நினைவுகூருவதை கூட இந்த அரசாங்கம் தடைசெய்கின்றது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.