தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று தடை

எதிர்மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஆவணங்களை சமர்ப்பித்து பொலிஸாரின் வாதத்துக்கு சரியான சட்ட ஏற்பாடுகளை முன்வைக்காத நிலையில் பொலிஸாரின் கடும் ஆட்சேபனை விண்ணப்பம் நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எனினும் இன்றைய தினம் முன்னிலையாகாத எதிர் மனுதாரர்கள் தரப்பு நாளை நகர்த்தல் பத்திரம் அணைத்து வழக்கை மீள அழைத்து பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட குற்றவியல் நடைமுறை சட்டக்கோவைக்கு எதிராக தமது கடும் ஆட்சேபனையை முன்வைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய, நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை கோரி யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸாரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் நினைவேந்தலுக்கு எதிராக கோப்பாய் பொலிஸாரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று தனித் தனியே வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.

நல்லூர் நினைவுத் தூபியில் நினைவேந்தல் நடத்தக் கோரி மனுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திகுமார், கஜேந்திரன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் ஆனல்ட், முன்னாள் மாகாணச சபை அமைச்சர் அனந்தி சசிதரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க. சுகாஸ், த.காண்டீபன், மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன், தமிழரசுக்கட்சி இளையோர் சங்கத்தலைவர் கே.பிருந்தாபன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி இளையோர் அமைப்பு தலைவர் கி.கிருஸ்ணமேனன், நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் பொன் குணரத்தினம், ராகவன் யதுர், அரசியல் செயற்பாட்டாளர் க.விஸ்னுகாந்த், வாசுகி சுதாகரன்,காளிரூபன்,சுவிகரன், காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் தலைவர் யோ.கனகரஞ்சினி,செயலாளர் ஆ.லீலாதேவி ஆகிய 20 பேரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கழகத்தில் நினைவேந்தலை நடத்தத் தடை கோரிய மனுவில் பல்கலைக்கழக துணைவேந்தர், கலைப்பீட மாணவர் ஒன்றியம், மாணவர் ஒன்றியத் தலைவர் உள்ளிட்டோரின் பெயர்களும் முன்வைக்கப்பட்டன.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஊடாக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக் கோவை 106ஆம் பிரிவின் கீழ் குழப்பம் ஏற்படும் என்று பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் இன்று தனித்தனியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

“திலீபனின் நினைவேந்தலை நடத்த அனுமதித்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க துணை நிற்கும். அத்தோடு சமூகத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். முன்னைய அரசு போல் அல்லாமல் தற்போதைய அரசு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்களை நினைவு கோருவதற்கு அனுமதியளிக்காது” என்று மன்றுரைத்த பொலிஸார், அதற்கான ஆவணங்களையும் மன்றில் சமர்ப்பித்தனர். மேலும் அனுமதியின்றி வெளிநாட்டில் இருந்து வருகைதந்த பலர் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள இருப்பதால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர்.

எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க.சுகாஷ் ஆகியோர் நீண்ட சமர்ப்பணத்தை மன்றில் முன்வைத்தனர்.

பொலிஸாரால் ஆவணங்கள் தமிழில் முன்வைக்கப்படவில்லை. தியாக தீபம் திலீபன், தமிழ் மக்களின் விடுதலைக்காக உணவு ஒறுப்பில் இருந்து உயிர்கொடை வழங்கியவர் உள்ளிட்டவற்றை எதிர்த்தரப்பு மன்றில் சமர்ப்பித்து சமர்ப்பணம் செய்தனர்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான், எதிர்த்தரப்பு ஆவணங்களை சமர்ப்பிக்காத நிலையிலும் சட்ட ஏற்பாட்டுக்கு உள்பட்டு சமர்ப்பணத்தை முன்வைக்காத நிலையிலும் பொலிஸாரின் கடும் ஆட்சேபனையை ஏற்று தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை உத்தரவு வழங்கியது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோர் சார்பிலும் பொது நோக்காக சில தரப்புகளாலும் இந்த வழக்கில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் அணைத்து மீள அழைக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதன்போது பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட சட்ட ஏற்பாட்டின் காரணமாக தியாக தீபன் நினைவேந்தலை தடை விதித்தால் சமூகத்தில் குழப்ப நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என தமது வாதத்தை முன்வைக்க உள்ளனர். அத்தோடு தியாக தீபன் திலீபனின் நினைவேந்தலை நடத்த அனுமதியளித்து 2018 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று வழங்கிய உத்தரவும் நாளை முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.