தியாகி திலீபன் அவர்களின் இறுதி நாள் நிகழ்வில் இணையவுள்ள வவுனியா நடைபவனி

தியாகதீபம் திலீபன் நினைவின் நடைபயணத்தில் கலந்து கொண்ட மக்கள் அனைவரையும் இறுதி நாளான நாளை (26) வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் நாவற்குழி சந்தியில் ஒன்றுகூடுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

திலீபனின் கோரிக்கைகள் நிறைவேறவும் தமிழ் மக்களின் அபிலாசைகள் வெற்றி பெறவும் அனைத்து சமூக தரப்புக்களையும் ஒன்றிணையுமாறும் அவர் கோரியுள்ளார்.

திலீபன் அவர்கள் முன்வைத்த 5 கோரிக்கைகளில் தமிழ் மக்களின் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும், பௌத்தமயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், என்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த நடைபவனி வவுனியாவில் இருந்து கடந்த 21ஆம் திகதி ஆரம்பமாகி  இன்று தென்மராட்சி புத்தூர் சந்தியை வந்தடைந்துள்ளது.

நாவற்குழி சந்தியை வந்தடையும் நடைபவனி திலீபனின் நினைவுத் தூபி நோக்கி பயணிக்கும்.  நாளை காலை 8 மணியளவில் நாவற்குழியில் ஆரம்பமாகும் பேரணி காலை 10 மணியளவில் நல்லூர் வீதியில் திலீபன் அவர்கள் உண்ணா நோன்பிருந்து தியாகச் சாவடைந்த இடத்திற்கு போய் சேரும் எனவும் மணிவண்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

திலீபன் அவர்களின் கோரிக்கை வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவும், அவரின் இறுதி வேண்டுகோளான “மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் அமையட்டும்” என்பதற்கமைய, எமது சுதந்திரத்தை விரும்பும் அனைத்து மக்களும் நாளை நாவற்குழியில் ஒன்றுகூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.thileepan தியாகி திலீபன் அவர்களின் இறுதி நாள் நிகழ்வில் இணையவுள்ள வவுனியா நடைபவனி