தியாகி சிவகுமாரனின் நினைவேந்தலுக்கு சுகாதாரத்தை காரணம் காட்டி அனுமதி மறுப்பு

தியாகி பொன் சிவகுமாரனின் 47 வது நினைவு தினத்தில் இன்றுகாலை நினைவுத்தூபியில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அஞ்சலி செலுத்த முயற்சித்தபோது, மிக அத்தியவசிய தேவை தவிர்ந்தவைக்கு பயணத் தடை உள்ளமையினால் சுகாதார ரீதியிலான காரணங்களின் அடிப்படையில் மட்டுமே தாம் தடையேற்படுத்துவதாகத் பொலிஸார் தெரிவித்ததை அடுத்து பொது இடத்தைத் தவிர்த்து பிரத்தியேக இடத்தில் விளக்கேற்றி தவிசாளரால் அஞ்சலிக்கப்பட்டது.

இன்று தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தில்; சயனட் அருந்தி தன்னுயிரை ஆகுதியாக்கிய முதல் வித்து பொன் சிவகுமாரனின் 47 ஆவது நினைவு தினம் ஆகும். இத் தினத்தினை உத்தியோகபூர்வமாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை வருடாவருடம் அனுஸ்டித்து வருகின்றது. இந் நிலையில் நேற்றைய தினம் பொன் சிவகுமாரனின் சிலை மற்றும் நினைவுத்தூபி உள்ள பகுதிகள் பிரதேச சபையினால் சிரமதான செய்யப்பட்டது.

பகிரங்க நினைவேந்தலினை, கொரோனா அபாய பயணத்தடைகள் நீக்கத்தின் பின்னர் பிரிதொரு தினத்தில் உரிய ஏற்பாடுகளுடன் மேற்கொள்ள சபையின் கட்சித்தலைவர்கள் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் சிலைக்கு இன்றைய தவிசாளர் விளக்கேற்றி வைப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில,; தவிசாளர் இன்று காலை உரிய சிலை அமைந்துள்ள இடத்திற்கும் நினைவுத்தூபி அமைந்துள்ள இடப்பகுதியிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர். தவிசாளர் எவரையும் பொருட்படுத்தாமல் நினைவேந்தலுக்கான பொருட்களை எடுத்துச் சென்ற போது பொலிஸார் தவிசாளரைச் சூழ்ந்து கொண்டனர். விளக்கு ஏற்ற முடியாது என பொலிஸ் தரப்பும் அஞ்சலிப்பதை தடுக்க முடியாது என தவிசாளரும் வாதிட்டனர்.

இந்நிலையில் பிரசன்னமாகியிருந்த பொலிஸ் அதிகாரிகள், அரசின் பகிரங்க பயணத்தடை உள்ள நிலையில் நாம் அத்தியவசிய சேவைகளை சகலரும் அனுமதிக்கப்பட்டுள்ளோம். விளக்குக் ஏற்றுவது அத்தியவசிய சேவை கிடையாது. தொற்று தொடர்பான பயணத்தடை நீக்கப்பட்டதன் பின்னர் தாங்கள் பொது இடத்தில் செயற்படுவது குறித்து ஆராயுமாறும் கேட்டுக்கொண்டனர். இதற்குத் தவிசாளர் “நினைவேந்தல் பிரச்சினைகிடையாது. ஆனால் பொதுமக்கள் நன்மை கருதிய சுகாதார நோக்குடைய பயணத்தடை மட்டுமே காரணம் ஆயின் நாம் முரண்படவில்லை. என்றார். பொலிஸாரும் அமோதித்த நிலையில், பயணத்தடை நீக்கத்தின் பின்னர் நாம் பொது இடத்தில் மேற்கொள்வோம்” என தவிசாளர் வெளியேறிச் சென்றார்.

இதன் பின்னர் பொது இடத்தினைத் தவிர்த்து உரும்பிராயில் பிரத்தியேக இடத்தில் ஈகைச்சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டது.
பின்னர் கருத்துரைத்த தவிசாளர், அரசாங்கம் நினைவேந்தல்களை தடுக்கும் நோக்குடனேயே செயற்படுகின்றது. அதில் மாற்றுக் கருத்து கிடையாது. எனினும் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் நாட்டில் உள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்கும் பொறுப்பு சகலருக்கும் உள்ளது. அப் பொறுப்புணர்வை நாம் மீறியதாக இருக்கக் கூடாது என்பதற்காக பிரத்தியேக இடத்தில் அஞ்சலித்தேன். தொற்று அபாயநிலை கட்டுப்பாட்டுக்குள் வரும்போது பொதுஇடத்தில் ஏனையோருடன் சிவகுமாரனின் அஞ்சலி நிகழ்வு திட்டமிட்டவாறு இடம்பெறும் என்றார்.