திசையறிந்து பயணித்த தூரிகை – அன்பாதவன்

நானும் எனது நிறமும் – ஓவியர் புகழேந்தியின் தன்வரலாறு நூல் குறித்து.

தோழர்! தொடக்கத்திலே உங்கள் கரங்குலுக்கி தோளணைத்து வாழ்த்துகிறேன்.  வாழ்வின் கறுப்பு பிரதேசங்களையும் ஒளிர்ந்த காலங்களையும் மறைக்காமல் பதிவிட்டதற்காக வாழ்த்துக்கள் புகழேந்தி!

ஒரு சாமான்யனின் தன் வரலாறு எவ்விதத்தில் வாசகனுக்கு உதவும்…? சுயசரிதையில் அப்படி என்ன சுவாரஸ்யம் இருக்கக்கூடும் என்ற பல கேள்விகளோடு தான் ஓவியர் புகழேந்தியின் “நானும் எனது நிறமும்” நூலை வாசிக்கத்தொடங்கினேன்.  வாசித்து முடிக்கையில் தெளிந்தேன்.  இது கதையல்ல வரலாறு; சாதாரணன் ஒருவன் தன் முயற்சியில் சற்றும் மனந்தளராமல் வாழ்வின் ஏற்ற இறக்க அலைகளூடே எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்ற கதை!

தஞ்சை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த சிறுவன் தனது ஓவிய ஆர்வத்தால் எப்படி உயர்கிறான் என்பது ஒருபுறமெனில், தனது கலையை மக்களோடு இணைந்து போராட்டங்களில் பங்கெடுத்து மக்கள் பிரச்சினைகளைக் கோடுகளாய், வண்ணங்களாய்த் தீட்டி அதை மக்களிடமே பார்வைக்கு வைத்து பெற்ற விமர்சனங்களிலிருந்து தன்னைச் செழுமைப் படுத்திக் கொண்ட ஒரு தூரிகைக் கலைஞனின் தொடர் பயணமே இந்நூல்.

ஓவியர் புகழேந்தியின் ‘நானும் எனது நிறமும்’ என்கிற தன் வரலாற்று நூலை என் நோக்கில் மூன்றாக பிரிக்கிறேன்.

Wrapper Oviar Pugazhenthi a திசையறிந்து பயணித்த தூரிகை - அன்பாதவன்

  • ஒரு கிராமத்து சிறுவனின் பள்ளிப் படிப்புக்கானப் போராட்டங்கள்.
  • வளர்ந்து வாலிபனானது, விரும்பிய ஓவியத்துறைக்குள் நுழைய விரும்புபவன் வாழ்வில் எதிர்கொள்கிற பிர்ச்னைகள்; போராட்டங்கள்.
  • மக்கள் திரள் போராட்டங்களில் பங்கெடுக்கும் கலைஞன், தன் படைப்புகளை செழுமையாக்கி மக்களிடமே கொண்டு செல்லும் கலைவாழ்வு.

மண்ணில் பிறக்கும் எந்த ஒரு மனிதப் பிறவிக்கும் இருக்குமொரு வாழ்வடையாளம்.  அந்த அடையாளத் திக்கை அடைய அவன் தன் வாழ்வின் பயணத்தில் போராட்டங்களை, எதிர்ப்புகளை, பின் முதுகு குத்தல்களை, கூடவே தோள் தட்டல்களை, பாராட்டுகளை சந்தித்தாக வேண்டியது யதார்த்தம்.  சாதாரணன் உச்சிக்கு போய் உயர்நிலைப் பெறுவதில் தான் வாழ்வு வரலாறாகிறது.

ஜென் பவுத்த கதையொன்று நினைவில் நிழலாடுகிறது. சீடன் குருவிடம் வினவினான்: குருவே அதோ அந்த மலைமேல் எப்படி ஏறுவது…?

குரு பதில் பகர்ந்தார் :“உச்சியிலிருந்து துவங்கு”

இப்படித்தான், புகழேந்தி இலக்கு புரிந்தவராக தன் வாழ்வியல் பயணத்தை திசை தெரிந்து தொடங்கி, தொடர்கிறார்.  தோல்விகளிலிருந்து கற்றுக் கொள்கிறார்.  வெற்றிகளில் அமைதிப் புன்னகை பூக்கிறார்.

பள்ளிப் பருவ பால்ய காலத்தில் கார்பன் தாளை வைத்து ஓவியங்களைப் படியெடுத்தே புகழேந்தியின் ஓவியப் பயணம் தொடங்குகிறது.

வரலாற்று நூல்களின் ஆங்கில பிரபுக்களின் உருவங்களில் வசீகரித்து வரையத் தொடங்கிய சிறுவன் தான் பிற்காலத்தில் ஈழ விடுதலை உட்பட பல மக்கள் திரள் போராட்டங்களை எளியக் கோடுகளால் வலியப் படைப்புகளாக வழங்கினார்.

படிக்கும் காலத்தில் பயிர்த்தொழில் பழகி, பள்ளிக்கு தவறாமல் சென்று அங்கும் தான் முத்திரைப் பதித்தவர் பால்ய காலத்து வறுமை, கல்விக்கானப் போராட்டம், என எதையுமே மறைக்காமல் பதிவிடுவது ஓவியரின் நேர்மையைக் காட்டுகிறது.

படிக்கிற காலத்தில் ஓவியப் பணிகளுக்கு துணையாக சென்றால் குறுந் தொகை கிடைக்கும்,  ஆனால் அப்படி கிடைக்கிற பணம், படிப்பில் கவனம் செலுத்த வைக்காது என்பது புரிந்து ஓவியக்கல்வி கற்பதில் மட்டுமே தன் கவனத்தை செலுத்தி மிகச்சிறந்த ஓவியனாக புகழ் பெறுவது என்பது இன்றையத் தலைமுறைக்கு ஒரு பாடம்.

1983ம்‌ ஆண்டில் முதலாமாண்டு ஓவியக் கல்லூரி மாணவனாக இருக்கும்போதே ஈழப் போராட்ட ஆதரவுப் போராட்டத்தில் கலந்து கொள்வதன் மூலம் புகழேந்தியின் போராட்ட அரசியலும் தொடங்குகிறது.  சுமார் 16 வயது தொடங்கி இன்று வரை ஓவியரின் போராட்ட அரசியல் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

16 வயதில் ஓவியக் கண்காட்சி நடத்திய சாதனையும் புகழேந்தியின் தூரிகைக்கு பெருமை சேர்ப்பது.  1987ல் ஓவியத்துக்கான தேசிய, மாநில விருது கிடைக்கிறது.  ஊரே பாராட்டும் அந்த பெருமித நேரத்தில் ஓவியரின் தந்தையின் கூற்று மிக முக்கியமானது; ஒவ்வொரு கலைஞனும் மனதில் பதிய வேண்டியது.

“பணம் சம்பாதிப்பது குறித்து நீ யோசிக்காதே; எவ்வளவு வேண்டுமானாலும் நான்      தருகிறேன்.  நீ எனக்கு பெயரை சம்பாதித்து கொடு”! என்ன ஒரு நியாயமான ஆசை!

ஒரு  Humanist ஆக தன்னை வளர்த்துக் கொண்டவர் ஓவியர் புகழேந்தி என்பது இந்த நூலை வாசிக்கையில் உணர இயலும்.

ஹைதராபாத் பல்கலைக் கழக கல்விக் காலம் ஓவியரை உண்மையான பன்முக அரசியல், சமூக, கலை இலக்கியப் பண்பாட்டு தடத்தில் பயணிப்பவராக செதுக்கியதை பதிவு செய்துள்ளதும் சிறப்பே!  ஆனாலும் பல்கலைக் கழகங்களுக்கும் ஒரு சில கல்யாண குணங்கள் உண்டல்லவா! மாணவர்களை மதிப்பெண்களால் அடக்குவது, கட்டி வைப்பதென்று! அப்படியோர் சம்பவம் நிகழ்ந்தபோது ஓவியருக்குள் ஒரு உறுதி பிறக்கிறது.

“இவர்கள் போடுகின்ற மதிப்பெண் என் வாழ்க்கையைத் தீர்மானிக்க அனுமதிக்கக்     கூடாது என்று உறுதி பூண்டேன்.  அதேபோல் இவர்கள் இழைக்கும் அநீதியிலிருந்து     நீதியைக் கற்றுக் கொண்டேன்.  எனக்கொரு வாய்ப்பு வரும்போது நீதியை மட்டுமே    வழங்க வேண்டும்.  அதற்காக எதை இழந்தாலும் சரி என்ற உறுதியும் கொண்டேன்”

பல்கலைக் கழக காலத்தில் இந்த உறுதி பேராசிரியராக ஓவியக் கல்லூரிகளில் பணியாற்றும் இன்று வரை தொடர்வது குறிப்பிடத் தகுந்தது.

Master of Fine Arts – (MFA) எனும் உயர்கல்வியைப் போராடி பெற்றவரில் முதல்வர் இவரே எனலாம்! ஆனால் அதுவே பணிவாய்ப்புகளுக்கு தடையாக இருந்த அவலத்தையும் பதிவு செய்கிறார்.

திருமண வாழ்வின் முதல் நாளிலேயே இணையரிடம் காதலைக் கதைக்காமல், கணவன் மனைவிக்கிடையே நல்ல புரிதல் இருந்தால் மட்டுமே ஆணோ அல்லது பெண்ணோ, தான் சார்ந்த துறையிலும் பொது வாழ்விலும் சரியாகத் தொடர்ந்து பயணிக்க முடியும் என்கிற விதையை  ஊன்றுகிறார்.  அந்த நல்விதை விருட்சமாக வளர்ந்திருப்பதற்கு சாட்சி இந்நூலை “என் சாந்திக்கு” என சமர்ப்பணம் செய்திருப்பது.

ஒரு கட்டத்தில் சமூக, அரசியல் போராட்டங்களோடு தன்னையும் இணைத்துக் கொள்கிற ஓவியர், அந்த போராட்டக் காரணிகளை உள் வாங்கி மக்களுக்கான கோடுகளாக தீட்டி மக்களிடமே கொண்டு செல்கிறார்.  இப்படித்தான் கலைஞன் உருவாகிறான்.

ஈழ விடுதலைப் போராட்டம், குஜராத் நிலநடுக்கம், குஜராத் மதக் கலவரம், சுனாமி துயரம் போன்ற நிகழ்வுகளைக் கொண்ட புகழேந்தியின் ஓவியங்கள் மிக முக்கியமானவை.  கலைப் பதிவுகளாக வாழ்பவை.  புகழேந்தியின் ஓவியக் கண்காட்சி உலகின் பல நாடுகளிலும் நடைபெற்றதொன்றே அவர் புகழுக்கு சாட்சி!

472 பக்கமுள்ள இந்நூலை வாசித்ததும் தோன்றியவை இவை.   தேதி வாரியான குறிப்புகளும், நூலில் பதிவாகியுள்ள உண்மைகளும் (FACTS) சரியானத் திட்டமிடலைப் (Well Planned) புலப்படுத்துகிறது.

வாழ்வில் உயரத்துடிக்கும் ஒருவனுக்கு, குடும்பத்தின் வறுமையோ, சமூகத் தடைகளோ ஒரு பொருட்டல்ல.  போராடி வெற்றிக் கனியைப் பறித்து, சுவைக்கவும் முடியும். ஒரு படைப்பாளி தன்னைச் சுற்றிய நிகழ்வுகளை மிகச் சரியாக அவதானிக்க வேண்டும்; அதுவே அவனின் கலைப்பயணத்தில் உடன்வரும் உணவு, நீர், காற்று எனலாம்.

இந்நூலை வாசிக்கும் ஓவிய மாணவனுக்கு ஓவியத்தின் பல்வேறு நுட்பங்கள் புரிய வரும்.  ஓவிய உருவாக்கம் தொடங்கி சட்டகம், கண்காட்சி, போட்டிகள், விருதுகள், விற்பனை என ஓவியம் சார்ந்த அனைத்து சங்கதிகளுக்கும் குறிப்புகள் உள்ளது.

ஒரு படைப்பாளி சமகால அரசியல், சமூக நிகழ்வுகளில் தன்னை இணைத்துக் கொண்டு படைப்புகளை உருவாக்கும் போதே கவனிக்கப் படுகிறான்;  முழுப் படைப்பாளியாய் பரிணமிக்கிறான்;  கலைஞனாய் உயர்கிறான் என்பதற்கு புகழேந்தியும், ‘நானும் எனது நிறமும்’ நூலும் சரியான உதாரணங்கள்.

இத்துணைப் பெரிய நூலில், புகழேந்திக்கும், புகழேந்தியின் ஓவியப் பயணங்கள், போராட்டங்கள், தனிப்பட்ட வாழ்க்கை அனைத்தையும் இணைப்பது, வேராக இருப்பது ஒரு சொல்… ஆம்! ‘மனிதம்’ என்ற ஒற்றைச் சொல்லில் உயிர்க் கொண்ட நூலிது என்றால்  மிகையாகாது!