தலைமைப் பிரச்சினைக்குத் தீர்வைக் காணாவிட்டால் பாதகமான நிலை: பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பிரச்சினைக்கு பொதுத் தேர்தலுக்கு முன்னர் தீர்வைப் பெற்றுக்கொள்ளாவிட்டால், சாதகமான பெறுபேற்றை எதிர்பார்க்க முடியாது என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“நான் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியபோதிலிருந்து, பிழையான வழியில் செல்லக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.

ஜனநாயக ரீதியாகத்தான் நாம் செயற்பட்டோம். இருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை நான் செயற் குழுவின்போது விமர்சித்தேன் என்ற காரணத்தினால்தான் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன்.

அதாவது, புதிய தலைமைத்துவமொன்றை ஐக்கிய தேசியக் கட்சியினர் விரும்புகிறார்கள் என்று கூறிய காரணத்திற்காகத்தான் நான் நீக்கப்பட்டேன். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிரச்சினைகள் உள்ளமை உண்மைதான். எனினும், பெரும்பான்மையான உறுப்பினர்கள் சஜித் பிரேமதாஸவுக்குத்தான் ஆதரவளிக்கிறார்கள். எனவே, நாமும் அவருக்கு சார்பாகத்தான் செயற்பட வேண்டியுள்ளது.

இந்தப் பிரச்சினைக்குப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் தீர்வினைக் காணவேண்டும். அப்படியில்லை என்றால், பொதுத்தேர்தலிலும் சிறப்பான பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியாது. நான் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருடன் எந்தக் காரணம் கொண்டும் முரண்பட்டமை கிடையாது. எனக்கும் அவருக்கும் தனிப்பட்டரீதியாகப் பிரச்சினைக்கூட இல்லை. இருப்பினும், அவரது செயற்பாடுகள் தவறு என்ற காரணத்தினால்தான் தற்போது எதிர்ப்பினை வெளியிடுகிறேன்” என்றார்.