தமிழ் வாக்குகளை இலக்கு வைத்து காய் நகர்த்தும் கோத்தபாய – பூமிகன்

இலங்கை அரசியலில் பலம்வாய்ந்த அணியாக இனங்காணப்படும் பொதுஜன பெரமுனையின் சனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்‌ச களமிறங்குகின்றார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக – சிங்கள மக்களின் ஹீரோவாக அவர் இருந்தாலும், தேர்தலில் வெற்றிபெறுவதற்கு பிரதான சவாலாக இருக்கப்போவது சிறுபான்மையினருடைய வாக்குகளை அவரால் பெற்றுக்கொள்ள முடியுமா என்பதுதான். முழுக்க முழுக்க சிங்கள வாக்குகளை மட்டுமே நம்பி களமிறங்கினால் வெற்றிபெற முடியாமல் போய்விடலாம் என்ற அச்சம் அவரிடம் ஏற்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. சிங்கள வாக்குகளைப் பாதிக்காமல், தமிழ் வாக்குகளை எப்படிக் கவர்வது என்பதுதான் இன்று அவர்களுக்குள்ள பிரச்சினை.

இதற்கான வியூகங்களை அமைப்பதில் மொட்டு அணியினர் அவசரமாக இறங்கியிருப்பதை கடந்த இரண்டு வார காலத்தில் காணமுடிந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, விக்கியுடன் இருக்கும் அணியினரோ, கஜன் தரப்போ தம்மை வெளிப்படையாக ஆதரிக்கப்போவதில்லை என்பது ராஜபக்‌சக்களுக்குத் தெரியும். அதனால்தான் அவசரம் அவசரமாக சிறிய பத்து அணிகளை அழைத்து அவர்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை அவர்கள் கடந்த வாரம் கைச்சாத்திட்டார்கள். 2005 சனாதிபதித் தேர்தலில் சுமார் ஒரு லட்சம் வாக்குகளால்தான் மகிந்த வெற்றிபெற்றிருந்தார். அதனால், எந்த ஒரு சிறிய கட்சியையும் புறக்கணித்துவிட அவர்கள் இப்போது தயாராகவில்லை. “சிறு துரும்பும் பற்குத்த உதவலாம்” என அவர்கள் நம்புகின்றார்கள்.

இதன் அடுத்த கட்டமாக இரண்டாம் நிலையிலுள்ள கட்சிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டன. கடந்த மூன்று வாரகாலமாக அவர்கள் கொழும்பில் முகாமிட்டு, மொட்டு அணியினருடன் இரவிரவாகப் பேசிவருகின்றார்கள். அதில் குறிப்பாக டக்ளஸ் தேவானந்தா, வரதராஜப் பெருமாள், பிரபா கணேசன், டாக்டர் விக்கினேஸ்வரன், உதயராஜா, அருண் தம்பிமுத்து போன்ற தமிழ்த் தரப்பினருடன் இடதுசாரிக் கட்சிகளும் அடக்கம். ஆறுமுகம் தொண்டமானின் அணியும் இவர்களுடனேயே நிற்கிறது. இவற்றைவிட, தீவிர இனவாதக் கட்சிகளாக அடையாளம் காணப்பட்ட விமல் வீரவன்ச தரப்பு, உதய கம்பன்பில தரப்புக்களும் இந்த முகாமில்தான் உள்ளன.mahi tamil2 தமிழ் வாக்குகளை இலக்கு வைத்து காய் நகர்த்தும் கோத்தபாய - பூமிகன்

இதில் முக்கியமான தமிழ்த் தலைமைகள் தனித்தனியாக மகிந்தவை சந்தித்து நீண்ட பேச்சுக்களை நடத்தியிருக்கின்றனர். டக்ளஸ், வரதர் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். இதன்போது அவர்கள் முக்கியமாகச் சுட்டிக்காட்டிய விஷயம், “கோத்தாவை தமிழ் மக்கள் முன்பாக சந்தைப் படுத்துவது கடினமானது” என்பதுதான். காரணம் கோத்தா ஏற்கனவே கடும்போக்கு சிங்கள அதிகாரியாக அடையாளம் காணப்பட்டவர். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர் மீது குற்றச்சாட்டுக்களும் உள்ளன. அதனால், “இவர்தான் எமது சனாதிபதி வேட்பாளர்” என அறிமுகப்படுத்துவதில் தமக்குள்ள சிரமத்தை அவர்கள் மகிந்தவுக்கு விளக்கியிருக்கிறார்கள்.

பொதுஜன பெரமுன வட்டாரங்களில் கணிப்பின்படி, சிங்கள வாக்குகளில் பெருமளவைத் தம்மால் பெறமுடியும் என அவர்கள் நம்புகின்றார்கள். அதாவது, சிங்கள வாக்குகளில் 55 வீதத்துக்கும் அதிகமானதை தம்மால் பெறமுடியும் என அவர்கள் கணிப்பிடுகின்றார்கள். சஜித் களமிறங்கினால் போட்டி கடினமானதாக இருக்கும் என்ற ஒரு கருத்தும் மொட்டு வட்டாரங்களில் உள்ளது. அவ்வாறான நிலையில், தமிழ் வாக்குகள் அவசியம் என்பதை அவர்கள் உணர்கின்றார்கள். உண்மையில் தமிழ் மக்களின் உணர்வுகள் எப்படியுள்ளது? அவர்களுடைய குறைந்தபட்ச ஆதரவையாவது தக்கவைப்பதற்கு என்ன செய்யலாம்? என்பதுதான் அவர்களுக்குள்ள பிரச்சினை.

அதற்காகத்தான் அவசரமாக சித்தார்த்தனையும், பின்னர் சுமந்திரனையும் கோத்தா அழைத்துப் பேசியிருக்கின்றார். தாம் சந்திக்கவில்லை என சுமந்திரன் பின்னர் சொன்னாலும், சந்திப்பு நடைபெற்றது உண்மை என கொழும்பிலுள்ள அரசியல் வட்டாரம் ஒன்று பின்னர் உறுதிப்படுத்தியது. இதன்போது, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் பேசப்பட்டதாக சொல்லப்படுகின்றது. குறிப்பாக, அரசியல் தீர்வு விடயத்தில் கோத்தா எந்தவொரு வாக்குறுதியும் கொடுக்கமாட்டார் எனத் தெரிகின்றது. “செய்யக் கூடியவைகளையே நான் சொல்வேன். செய்ய முடியாத எதனையும் நான் வாக்குறுதியாகக் கொடுக்கமாட்டேன்” என அவர் இதன்போது உறுதியாகக் கூறியிருக்கின்றார்.Mahinda Sampanthan Sumanthiran 330 seithycim தமிழ் வாக்குகளை இலக்கு வைத்து காய் நகர்த்தும் கோத்தபாய - பூமிகன்

“நான் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்ற விடயங்களையே பார்த்துக்கொள்வேன். அரசியலமைப்பு விவகாரங்களை அண்ணன் (மகிந்த) பார்த்தக்கொள்வார்” என்ற கருத்தை இந்த சந்திப்புக்களின் போது கோத்தா வெளியிட்டார். மகிந்த பிரதமராகப் பதவிக்கு வருவார் என்ற கருத்திலேயே தன்னுடைய நிலைப்பாட்டை கோத்தா வெளியிட்டார். “புதிய அரசியலமைப்பு தேவையானால் அதனை பாராளுமன்றம் தயாரிக்கலாம். அதில் நான் தலையிட மாட்டேன். அது பாராளுமன்றத்தின் பொறுப்பாக இருக்கும். இதில் பாராளுமன்றம் எடுக்கும் நிலைப்பாட்டை நான் ஏற்றுக்கொள்வேன்” என்பதுதான் தன்னுடைய அணுகுமுறை என கோத்தா விளக்கியதாகத் தெரியவந்திருக்கின்றது.

இதேவேளையில், தமிழ் மக்களைக் கவரக் கூடிய சில அறிவிப்புக்களை மகிந்த வெளியிடுவார் என மூலமாக எதிர்பார்க்கப்படுகின்றது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லாமல், வடக்கில் இடம்பெறும் பிரச்சாரக் கூட்டங்களிலேயே இந்த விபரங்களை அவர் அறிவிப்பார். தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய பேச்சுக்களின் அடிப்படையில் சில விடயங்களை மகிந்த தரப்பு தயாரித்து வைத்திருப்பதாகத் தெரிகின்றது. “மகிந்தவுடன் பல விடயங்களையிட்டும் பேசியுள்ளோம்.

அதில் சில விடயங்களை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.  அதற்றை நாம் சொல்வதை விட அவர்கள் சொல்வது பொருத்தமானதாக இருக்கும்” என இந்தப் பேச்சுக்களில் கலந்துகொண்ட வரதராஜப் பெருமாள் கொழும்பில் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருக்கிறார். “தேர்தலில் களமிறங்கும் இரண்டு வேட்பாளர்களில் ஒருவரை நாம் நேரடியக ஆதரிக்கப்போகின்றோமா? அல்லது மறைமுகமாக ஆதரிக்கப்போகின்றோமா? என்பதுதான் இன்றுள்ள கேள்வி” எனக் குறிப்பிடும் வரதர், “ஐ.தே.க. எதனையும் செய்யப்போவதில்லை.

அதனால் அவர்களை நாம் ஆதரிக்க முடியாது” எனவும் குறிப்பிடுகின்றார். “இதனால் மற்றப் பக்கத்தைத்தான் ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாங்கள் இருக்கிறோம். அதன்மூலமாக தமிழ் மக்களுக்கு அதிகபட்சம் எதனைப் பெற்றுக்கொடுக்க முடியுமோ அதற்காக முயற்சிக்கிறோம்” என தன்னுடைய நிலைப்பாட்டை வரதர் விளக்கியிருக்கிறார். வரதர் அணி கோத்தாவை ஆதரிக்கப்போகின்றது என்பது இப்போது பகிரங்கமாகியிருக்கின்றது.

“முன்னர் இருந்த சூழ்நிலை வேறு. இப்போது நிலை மாறிவிட்டது. மாகாண சபைகளை காத்திரமான முறையில் செயற்பட வைப்பேன்” என தம்மை ஆதரிக்கும் தமிழ்க் கட்சிகளிடம்  மகிந்த கூறியிருப்பதாகத் தெரிகின்றது. அரசியல் கைதிகள் விவகாரத்திலும், விரைந்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் சொல்லியிருக்கின்றார். இது போன்ற பல விஷயங்களை மகிந்த தரப்பு பகிரங்கமாக வெளிப்படுத்தலாம். கடந்த கால அனுபவங்களும் மகிந்த தரப்பை வழிநடத்தலாம் என்பதும் வரதரின் கருத்தாக இருந்தது. இந்த வியூகங்களின் மூலம் தமிழ் வாக்குகளை எந்தளவுக்கு கோத்தா அறுவடை செய்கின்றார் என்பதிலேயே அவரது வெற்றி தங்கியிருக்கின்றது.

இதன் மறுபுறத்தில் கோத்தா தரப்பு மற்றொரு வியூகத்தையும் வகுக்கின்றது. தமிழ் வாக்குகளைப் பெறுவதன் மூலம், சர்வதேச அரங்கில் தம்மீது சுமந்தப்படும் போர்க் குற்றங்களின் சுமையைக் குறைத்துவிடமுடியுமா என்பதுதான் கோத்தாவின் திட்டம். தமிழ் மக்களே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்னும்போது, குற்றச்சாட்டுக்கள் நீர்த்துப் போய்விடும் என அவர்கள் நம்புவதாகத் தெரிகின்றது. ஐ.தே.க.வை விட ராஜபக்‌ச தரப்புக்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகமாக இருக்கும் என்பது உண்மை. அதனையிட்டு அவர்கள் கரிசனையாக இருப்பதும் உண்மை. ஆனால், தமிழ் வாக்குகள் தமக்கு அதிகளவுக்குக் கிடைத்தால், அதனைச் சமாளிக்க முடியும் என கோத்தா தரப்பு நம்புகின்றது. அதனால், தமிழ் மக்கள் மிகவும் நிதானமாக தமது வாக்குச் சீட்டைப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.