தமிழ் மக்களுக்கெதிரான சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலும் எதிர்கால வழிமுறைகளும் – கணநாதன்

இலங்கைத் தீவில் 2009ஆம் ஆண்டு இறுதிப் போரின் போது சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்கள், மனிதநேயச் சட்டங்கள் கடுமையாக மீறப்பட்டு, நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இன அழிப்பு ஆகியவற்றுக்கான பொறுப்புக்கூறல், ஒரு தசாப்தம் தாண்டியும் எதுவித முன்னேற்றமுமின்றி தேக்க நிலையை அடைந்துள்ளது.

இன்று சர்வதேச உறவுகளில் சர்வதேச சட்டங்களானது பெரும்பாலும் வலுமிக்க அரசுகளின்  பூகோள நலன்களின் அடிப்படையில் தமக்குச் சாதகமாக தேர்ந்து பிரயோகிக்கும் முறைமையையே பின்பற்றி வருகின்றன. இவ்வரசுகளின் ஆதிக்கத்தின் கீழ் இயங்கும் ஐக்கிய நாடுகள் சபையும் கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் போர்க் குற்றங்கள், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இன அழிப்பு போன்றவற்றுக்கான பொறுப்புக் கூறலில் இருந்து தவறியுள்ளதுடன், கடுமையான பின்னடைவுகளையும் சந்தித்துள்ளது.

இலங்கைத் தீவைப் பொறுத்தவரையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் உடன்படிக்கையின்  உறுப்புரிமை இன்மையாலும் இந்து சமுத்திரத்தில் அதன் பூகோள அரசியல் அமைவு காரணமாகவும் வழமையான சர்வதேச நீதிமன்றங்கள் மூலமான முயற்சிகளும் தடைப்பட்டுப் போயுள்ளன. இவ்வாறானதோர் சூழலில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் மேற்கு நாடுகளாலும், அவர்கள் சார்ந்த அமைப்புகளாலும் தமது நலன்களுக்கேற்றவாறு சிறீலங்கா அரசின் மீது அழுத்தங்களை ஏற்படுத்தி தமக்கேற்றவாறான நகர்வுகளை மேற்கொள்வதற்கான வழிமுறைகளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் இச்செயற்பாடுகள் பொறுப்புக் கூறல் தொடர்பாக காத்திரமான சர்வதேச சட்ட அரசியல் விளைவுகளை ஏற்படுத்த முடியாத ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை சபையினுள் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக முடக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக 2009ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையின் முப்பதிற்கும் அதிகமான அமர்வுகளில் வலுவற்ற தீர்மானங்களாகவும், நிபுணத்துவ அறிக்கைகளாகவும், ஆவணப்படுத்தல்களாகவும், விசாரணை அறிக்கைகளாகவும், கண்டனங்களாகவும், முன்மொழிவுகளாகவுமே தொடர்ந்து கொண்டுள்ளது. இறுதியாக இவ்வருடம் மார்ச் மாத அமர்விலும் சான்றுகளை சேகரித்து ஆவணப்படுத்தி எதிர்காலப் பயன்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை ஆணையகத்திற்கான ஓர் கோரிக்கையைக் கொண்ட தீர்மானமாகவே வெளிப்பட்டிருந்தது. (Mandate to collect, consolidate and preserve evidence).

625.300.560.350.160.300.053.800.500.160.90 தமிழ் மக்களுக்கெதிரான சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலும் எதிர்கால வழிமுறைகளும் - கணநாதன்

இவ்வாறானதோர் இக்கட்டான நிலைமையில் இலங்கைத் தீவுத் தமிழ் மக்களும், புலம்பெயர் தமிழ் மக்களுமே நிதி வளங்களையும், நிபுணத்துவ அறிவையும் திரட்டி பல்வேறு மனிதவுரிமைக் கட்டமைப்புகள் ஊடாக பல்வேறு முன்முயற்சிகளை பல்வேறு தளங்களில் மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலைமையில் இன்று அனைத்துத் தமிழ் மக்களுமே தவறான வழிகாட்டுதல்களிலிருந்தும், எதிர்பார்ப்புகளிலிருந்தும் மறைமுக அரசுகளுக்கான நிகழ்ச்சி நிரல்களுக்காக செயற்படும் அமைப்புகள் குறித்தும் விழிப்புடன் சர்வதேச நீதிமன்றங்களை நோக்கிய தமது முன் முயற்சிகளை காத்திரமான முறையில் நெறிப்படுத்தும் கடப்பாட்டினைக் கொண்டுள்ளார்கள்.

இது குறித்து தாயகத்திலும், புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் சர்வதேச சட்டத்துறை சார்ந்த, சர்வதேச உறவுகள் சார்ந்த  பலரும் ஆரோக்கியமான பல கூட்டுச் செயற்பாடுகளையும், ஆய்வுகளையும், கருத்தமர்வுகளையும் தொடர்ச்சியாக முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் சர்வதேசக் குற்றங்களுக்கான ஈழத்தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறும் சர்வதேசப் பொறிமுறைகளையும் நீதிமன்றங்கள் தொடர்பாகவும், தீர்ப்பாயங்கள் குறித்தும் சர்வதேச பிராந்திய குற்றவியல் சட்டங்கள் குறித்தும் எமக்கான வாய்ப்புகளைக் கண்டறியும் முயற்சியாக இக்கட்டுரைத் தொடர்கள் அமைகின்றன.

இதன் ஓர் அங்கமாக இக்கட்டுரை சர்வதேச நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் குறித்தும், சர்வதேச பிராந்திய குற்றவியற் சட்டங்கள் குறித்தும் ஓர் அறிமுகமாக அமைகின்றது. சர்வதேச சட்டங்களில் குறிப்பாக சர்வதேச மனிதவுரிமை சட்டங்களும் (International Human Rights Law), சர்வதேச மனிதநேயச் சட்டங்களும் (International Humanitarian Law), சர்வதேச குற்றவியற் சட்டங்களும்  (International Criminal Law) முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் பிராந்திய சட்டங்களை நோக்குமிடத்து ஐரோப்பிய மனிதவுரிமைகளுக்கான உடன்படிக்கை (European Convention on Human Rights) மற்றும் கடந்த வருடம் ஐரோப்பிய ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உலகளாவிய மனிதவுரிமைச் சட்டம்  (EU Global Human Rights Sanctions Regime) ஆகிய சட்டங்கள் முக்கிய மனிதவுரிமைச் சட்டங்களாகவுள்ளன.

இவை ஐரோப்பிய பிராந்திய சட்டங்களாகவிருப்பினும் உலகளாவிய ரீதியில் சிறப்பான நிலைமைகளில் பிரயோகிக்கப்பட முடியும். இவற்றுள் முதலாவதாக சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்கள் (International Human  Rights Law- IHRL) குறித்தும் அது குறித்தான சர்வதேச விசாரணைப் பொறிமுறைகள் குறித்தும் ஆய்வுக்கு உட்படுத்துவோம். இங்கு சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதநேயச் சட்டங்களும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டு நிற்பினும், பல்வேறு சட்ட நியமங்களில் ஒற்றுமைகளையும் கொண்டுள்ளன.

சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்கள் பெரும்பாலும் சர்வதேச நியமங்களையும், விதிகளையும் கொண்ட  (international rules) உடன்படிக்கைகள் மூலமாகவும் சர்வதேச வழமைகள் (customs) ஊடாகவும் உருவாக்கப்படுகின்றன. இவை உடன்படிக்கைகள் மூலமாக ஏற்படுத்தப்படுவதால் வன் சட்டங்கள் (hard law) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றுள் பல உடன்படிக்கைகள் மூலமாக ஏற்படுத்தப்படாத சட்ட நியமங்களும் உள்ளன. இவை மென் சட்டங்கள் (soft law)ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

International Criminal Court தமிழ் மக்களுக்கெதிரான சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலும் எதிர்கால வழிமுறைகளும் - கணநாதன்

சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்களின் முக்கிய மூலங்களாக இருப்பவை மனிதவுரிமை உடன்படிக்கைகளாகும். முக்கியமான சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் (International  Covenants on Civil and Political Rights) மற்றும் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகள் (Economic, Social and Cultural Rights) (1966), அத்துடன் இனப்படுகொலை தொடர்பான உடன்படிக்கை (Conventions on Genocide) (1948), இனப்பாகுபாடு  (Racial Discrimination) (1965), பெண்களுக்கு எதிரான பாகுபாடு (1979), சித்திரவதை (1984) மற்றும் குழந்தைகளின் உரிமைகள் (1989), மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பாதுகாப்பதற்கான ஐரோப்பிய உடன்படிக்கை  (European Convention for the Protection of Human Rights and Fundamental Freedoms) (1950), மனிதனின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய அமெரிக்கப் பிரகடனம் (1948) மற்றும் மனித உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை (Convention on Human Rights) (1969) மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஆபிரிக்க சாசனம் (African  Charter on Human and Peoples’ Rights) ஆகியவை முக்கிய பிராந்திய சட்ட நியமங்களாகவுள்ளன. இவையனைத்தும் சர்வதேச உடன்படிக்கைகள் மூலமாக உருவாக்கப்பட்டு உள்ளமையால் வன் சட்டங்கள் (hard law) என்ற வகைக்குள் அடங்கும்.

சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்களை மேற்பார்வை செய்யும் அல்லது அதன் நடைமுறையைக் கண்காணிக்கும் அமைப்புகள் ஐக்கிய நாடுகளின் சாசனத்தால் (UN Charter) அல்லது முக்கிய சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்களால் உருவாக்கப்பட்ட கண்காணிப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளன. முக்கியமாக ஐ.நா. மனித உரிமைகள் சபையானது ஐக்கிய நாடுகளின் சாசனத்ததால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் “சிறப்பு நடைமுறைகள்” (Special Procedures) அதாவது மனிதவுரிமை விடயம் (thematic) அல்லது நாடு சார்ந்த  (Country specific) சிறப்புத் தூதுவர்கள் (special rapporteurs) மற்றும் பணிக்குழுக்கள் (working Groups) தங்கள் ஆணைகளுக்குள் மனித உரிமை சூழ்நிலைகளை கண்காணித்தல் மற்றும் அறிக்கையிடல் பணிகளை மேற்கொண்டுள்ளன.

இவற்றைவிட முக்கிய சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்கள் அவற்றின் கண்காணிப்பு மற்றும் நடைமுறையை உறுதிப்படுத்துவதற்கான உடன்படிக்கைகள் மூலம் ஏற்படுத்தப்பட்ட நிபுணர் குழுக்களைக் கொண்டுள்ள அமைப்புகளைக் கொண்டுள்ளது. (committees of independent experts). மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. இது மனித உரிமைகளின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான முதன்மைப் பொறுப்பைக் கொண்டுள்ளது. ஐ.நாவின் மனித உரிமை இயந்திரங்களின் செயல்திறனை மேம்படுத்துவதும், ஐ.நா. அமைப்பு ரீதியாக மனித உரிமைகளை ஒருங்கிணைப்பதும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச திறனை வளர்ப்பதனையும் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் மேற்கொள்கின்றது.

PicsArt 02 22 09.27.21 தமிழ் மக்களுக்கெதிரான சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலும் எதிர்கால வழிமுறைகளும் - கணநாதன்

கீழ்வரும் ஐந்து கட்டமைப்புகளும் ஐக்கிய நாடுகளின் சாசனத்தினால் (UN Charter) உருவாக்கப்பட்டவை. (Charter based bodies).

Charter-based bodies

  • Human Rights Council
  • Universal Periodic Review
  • Commission on Human Rights (replaced by the Human Rights Council)
  • Special Procedures of the Human Rights Council Special Rapporteurs
  • Human Rights Council Complaint Procedure

கீழ்வரும் பத்து கண்காணிப்பு அமைப்புகளும்  (human rights treaty bodies) அவற்றுக்கான பத்து மனிதவுரிமை உடன்படிக்கைகளை (international human rights treaties) கண்காணிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

Treaty-based bodies

  • Committee on the Elimination of Racial Discrimination (CERD)
  • Committee on Economic, Social and Cultural Rights (CESCR)
  • Human Rights Committee (CCPR)
  • Committee on the Elimination of Discrimination against Women (CEDAW)
  • Committee against Torture (CAT)
  • Committee on the Rights of the Child (CRC)
  • Committee on Migrant Workers (CMW)
  • Subcommittee on Prevention of Torture (SPT)
  • Committee on the Rights of Persons with Disabilities (CRPD)
  • Committee on Enforced Disappearances (CED)

மேற்கூறிய பத்துக் கண்காணிப்பு அமைப்புகளும் நாடுகள் சார்ந்து இப்பத்து மனிதவுரிமை உடன்படிக்கைகளின் மீறல்கள் குறித்து விசாரித்துத் தீர்ப்பளிக்கும் பொறிமுறையைக் கொண்டுள்ளன. இதனால் இவை ஏறக்குறைய ஓர் நீதிமன்றத் தீர்ப்புக்கு ஒப்பான தீர்ப்புகளை வழங்குவதற்கான அதிகாரங்களைக் கொண்டுள்ளன. (Semi Judical bodies). தமிழ் மக்கள் இக் கண்காணிப்பு நிபுணர் குழுக்களை (Committees) அதன் விசாரணைப் பொறிமுறைகள் செயற்படும் முறைகளைத் தெளிவாக அறிந்து கொள்வதன் மூலம் தாயகத்தில் கடந்த காலங்களிலும் தற்போதும் மீறப்படும் மேற்கூறிய மனிதவுரிமை மீறல்கள் குறித்து சிறீலங்காவின் நீதி மன்றங்களின் புறக்கணிப்புகளையும், இழுத்தடிப்புகளையும் சரியான முறையில் உறுதிப்படுத்துவதன் மூலமாக வழக்கு முறைப்பாடுகளாக இங்கு சமர்ப்பிக்க முடியும். ஆனால் இவை சர்வதேச குற்றங்களை விசாரிப்பதற்கான முழுமையான பொறி முறைகளாக இருக்க மாட்டாது. இது சர்வதேச மனிதநேயச் சட்டங்கள் குறித்தான மீறல்கள் தொடர்பாக விசாரணைப் பொறிமுறைகள் சார்ந்தவை.

அடுத்து வரும் தொடரில் ஐரோப்பிய மனிதவுரிமை உடன்படிக்கை குறித்தும், புதிதாக உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உலகளாவிய மனிதவுரிமைச்  சட்டம் (EU Global Human Rights Sanctions Regime) அதன் தீர்ப்பெல்லை  (Jurisdictoin) குறித்தும் உலகளாவிய பொது நியாயாதிக்கம் (Universal Jurisdiction) அது தமிழ் மக்களுக்கு எதிரான சர்வதேச குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலில் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்தும் ஆராய்வோம். மேலும் இவை குறித்தான ஐரோப்பிய மனிதவுரிமைகள் நீதிமன்றினை (European Court of Human Rights) எவ்வாறு அணுக முடியும் என்பது குறித்தும் சிந்திப்பது பொருத்தமானது.

ஆக்கம்

Kannanathan

Master of International Relations

Geneva School of Diplomacy and International Relations