தமிழ் மக்களுக்கு இது வரையில் எந்த நீதியும் கிடைக்கவில்லை – இரா.சாணக்கியன்

யுத்தம் மௌனிக்கப்பட்டு 12வருடங்கள் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்களுக்கான எந்த நீதியும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. ஆனாலும் நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான எமது போராட்டத்தினை நாங்கள் ஒருபோதும் கைவிடப் போவதில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

‘இலக்கு’ வார இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக் கணக்கான எமது உறவுகள் கொல்லப்பட்டார்கள். அவர்களை நினைவு கூருவது எமது அடிப்படை உரிமை.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நீதி இதுவரையில் கிடைக்கவில்லை. சர்வதேசத்தின் ஊடாக இந்த மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்ந்தும் நாங்கள் முயற்சிகளை மேற்கொள்வோம்.

முள்ளிவாய்க்கால் என்பது யுத்தத்திற்கு அப்பால் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட ஒரு களமாகவே பார்க்கப்பட வேண்டும்.

இராணுவத்தினரால் ஒரு பக்கம் படுகொலைகள் நடாத்தப்பட்ட நிலையில், உணவுகளை தடை செய்தும் ஆயிரக் கணக்கான பொது மக்களை கொலை செய்தனர். இவ்வாறான செயற்பாடுகள் இன்று சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அவர்கள் ஊடாக இந்த மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

யுத்தம் மௌனிக்கப்பட்டு 12வருடங்கள் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்களுக்கான எந்த நீதியும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. ஆனாலும் நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான எமது போராட்டத்தினை நாங்கள் ஒருபோதும் கைவிடப் போவதில்லை.

எனக்கு தற்போது 30வயது முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நீதி கிடைக்கும் வரையில் எமது போராட்டம் தொடரும்.