தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு கோட்டாபய தயாரில்லை! சுமந்திரன் எம்.பி.

“நாடு முன்னேறவேண்டுமாயின் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்று ஏற்படுத்தப்படவேண்டும். அவ்வாறானதொரு தீர்வை ஏற்படுத்துவதற்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் அரசு பேச வேண்டும்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தியிருக்கிறோம். ஆனாலும், இந்த அரசு பேரினவாதப் போக்கோடுதான் செயற்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயற்பாடுகள் நம்பிக்கை கொடுப்பனவாக இல்லை.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

“புதிய அரசு பதவிக்கு வந்த பிறகு முக்கியமானதாரு விடயத்தை நாங்கள் சொல்லியிருக்கின்றோம். அதாவது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாபதிக்கு வாக்களித்தவர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

சிங்கள பௌத்தர்கள் மட்டுமே அவருக்கு வாக்களித்திருக்கின்றனர். மற்றைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. ஆகையால் அதில் பெரிய முக்கியமான விடயமொன்று அடங்கியிருக்கிறது.

அதாவது எந்தச் சிறுபான்மைச் சமூகமும் அவரில் நம்பிக்கை வைக்கத் தயாராக இருந்திருக்கவில்லை. தமிழ் மக்கள் சம்பந்தமாக இந்த நாட்டிலே என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றதென்பது ஜனாதிபதிக்கு நன்றாகவே தெரிந்த விடயம்.

ஆனபடியினால்தான் அவர் தெரிவு செய்யப்பட்ட நாளில் இருந்து பல தடவைகள் எங்கள் விடயங்களைச் அவருக்கு சொல்லி வந்திருக்கின்றோம்.

அவருக்குச் சிங்கள பௌத்த மக்கள் வாக்களித்திருந்தாலும் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்காமல் தங்கள் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டும் தான் தெரிவு செய்து அனுப்பியிருக்கிறார்கள்.

ஆகையால் இந்த நாடு முன்னேற வேண்டுமாக இருந்தால் – இந்த நாட்டிலே இருக்கின்ற இனப்பிரச்சினை சரியான முறையில் அணுகப்படவேண்டுமாக இருந்தால் ஜனாதிபதி முதலிலே தமிழ் மக்களின் பிரதிநிதிகளோடு பேச்சு நடத்த வேண்டும்.

இதை நாங்கள் அவருக்குச் சொல்லியிருக்கின்றோம். அவர் நாடாளுமன்றத்துக்கு வந்த நாள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா நேரடியாகவும் அவருக்கு இதனைச் சொல்லியிருந்தார்.

அதற்கு நிச்சயமாக உங்களுடன் பேசுவோம் என்று ஜனாதிபதியும் சொல்லியிருக்கின்றார். ஆனால். அதற்கான எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கின்றபோதுதான் நாங்கள் அடுத்த அடுத்த எங்கள் நகர்வுகளைச் செய்வோம். தற்போது மிக முக்கியமான நாடாளுமன்றத் தேர்தலொன்று வர இருக்கின்றது.

அந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களுடைய பலம் சரியான விதத்திலே பதிவு செய்யப்பட வேண்டும். எங்கள் பலத்தை நாங்கள் தொடர்ந்து காண்பித்தால்தான் நாங்கள் எதிலும் முன்னேற முடியும்.

ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான இந்த அரசின் செயற்பாடுகளைப் பொறுத்தவரை பெரும்பாலும் அவர்கள் பேரினவாதப் போக்கோடுதான் செயற்படுகிறார்கள் என்பதை நாங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம்.

ஜனாதிபதி வழங்கும் நியமனங்கள், அவரது அணுகுமுறைகள் எங்களுக்கு நம்பிக்கை கொடுப்பனவாக இருக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.