Tamil News
Home ஆய்வுகள் தமிழ் மக்களின் நில அபகரிப்பு அந்த இனத்தின் அடையாளங்களை அழிக்கும் செயலாகும் -இரா. சாணக்கியன்

தமிழ் மக்களின் நில அபகரிப்பு அந்த இனத்தின் அடையாளங்களை அழிக்கும் செயலாகும் -இரா. சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சற்தரை விவகாரம் இன்று யாரும் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு வித்திட்டவர்கள், இந்த மேய்ச்சற்தரை விவகாரம் குறித்து பேசும் நிலையென்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

இன்று மேய்ச்சல் தரைகள் அபகரிக்கப்பட்டு அங்குள்ள பண்ணையாளர்கள் துரத்தப்பட்டுள்ள நிலையில், தினம் தினம் அவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த மேய்ச்சற்தரை விவகாரம் குறித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள் ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.

கேள்வி – மட்டக்களப்பு மேய்ச்சல் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் கட்சிகள் கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது ஏன்?

பதில் – மட்டக்களப்பு நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக தமிழ்க் கட்சிகள் மட்டும்தான் கவனம் செலுத்தியிருக்கின்றதே தவிர, வேறு எந்தக் கட்சியும் கவனம் செலுத்தவில்லை. அதிலும் குறிப்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டுமே ஏதோவொரு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. பாராளுமன்றத்தில்கூட நான்தான் ஒரு ஒத்திவைப்பு பிரேரணையை கொண்டுவந்து அமைச்சரிடம் அது தொடர்பில் கேள்வியெழுப்பியதனால், அமைச்சர் இந்த வருடம் மேய்ச்சற்தரைப் பகுதியில் பயிர் செய்யும் நடவடிக்கையை தடைசெய்வதாக வாக்குறுதி அளித்திருக்கின்றார்.

அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராகிய நானும் கோவிந்தன் கருணாகரம் அவர்களும்தான் கொழும்பில் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய எம்.ஏ.சுமந்திரன் அவர்கள்தான் இலவசமாக அதற்காக ஆஜரானார். வேறு எந்தக் கட்சியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகக் குறைந்தது ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு நாங்கள் சட்டவிரோதமானதொரு தீர்மானத்தை எடுத்துத்தருமாறு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கேட்டிருந்தும்கூட தங்களுடைய தனிப்பட்ட அரசியல் இலாபங்கள் இல்லாமல் போகும் என்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்கூட அதனை கவனத்தில் எடுக்காதிருக்கின்றனர்.

தமிழ்த் தேசியத்துடன் பயணிக்கின்ற கட்சிகள்கூட குறிப்பாக சைக்கிள் கட்சியினர் பார்வையாளர்களாக சுற்றுலாப்பயணம் வந்ததுபோல அதனை வந்து பார்த்துச் சென்றதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. விக்னேஸ்வரன் ஐயாவின் கட்சி சார்பாக எவரும் மேய்ச்சற்தரைப் பிரச்சினையை பார்க்கவுமில்லை.

கேள்வி – சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கை தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நடவடிக்கையாக நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில் – தமிழ் மக்களின் பொருளாதாரம் மட்டுமல்ல தமிழ் மக்களின் நில அபகரிப்பு அந்த இனத்தின் அடையாளங்களை அழிக்கும் செயலாகவே இதனை பார்க்கின்றேன்.

கேள்வி – தமிழ் அரசியற் கட்சிகள் மேய்ச்சற்தரை விடயம் தொடர்பாக எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன?

பதில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணைக்கு சென்றிருக்கின்றோம். 23ஆம் திகதி 2ஆம் தவணை வருகின்றது. நானும் அதற்கு முன்னிலையாக வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் கிராமசேவையாளர் தொடங்கி இந்த நாட்டின் ஜனாதிபதி வரை அனைத்து அதிகாரிகளையும் அமைச்சர்களையும் பிரதமரையும் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடி இவ்விடயத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரினோம்.

கேள்வி – மேய்ச்சற்தரை பிரச்சினை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இதுவரை உங்களிடம் எவ்வாறான முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன? அதற்கான நடவடிக்கைகள் என்ன?

பதில் – தொடர்ச்சியாக முறைப்பாடுகள் வந்துகொண்டிருக்கின்றன. அண்மையில் சில கன்றுக்குட்டிகளைக்கூட களவாடியதாக சில புகார்கள் வந்திருக்கின்றன. அதேநேரம் சில பண்ணையாளர்களை தாக்கிய மகாஓயா காவல்துறையினர் அவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்ய முயற்சித்தபொழுது மனித உரிமை ஆணையாளர் அம்பிகா அவர்களுடன் தொடர்பை மேற்கொண்டு முறைப்பாடுகளை செய்திருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச உறுப்பினர் முரளி அவர்கள் இதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைக்கூட ஏற்பாடு செய்திருந்தார். இந்த விடயங்கள் தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியாக பண்ணையாளர்களுடன் தொடர்பில் இருக்கின்றோம்.

கேள்வி – தமிழர்களின் வாழ்வுரிமையையும் எதிர்கால சந்ததியின் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும் இந்நடவடிக்கைகட்கு எதிரான சட்ட மற்றும் மக்கள் போராட்டத்தை ஒழுங்கமைக்கும் வகையிலான மக்கள், சட்டவல்லுனர்கள், சமூக தலைவர்களை உள்ளடக்கிய ஓர் அமைப்பின் மூலம் நாட்டிலும், பன்னாட்டு நிறுவனங்களூடும்  போராட்டங்களை முன்னெடுக்கும் முயற்சி ஏதாவது மேற்கொள்ளப்பட்டுள்ளதா? இல்லையெனில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கான தடங்கல்கள் ஏதாவது உண்டா?

பதில் – பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டத்தின் பத்து விடயங்களில் ஒரு விடயமான மகாவலி அதிகாரசபையினால் காணி அபகரிக்கப்படுவதற்கு எதிராக இலட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கியிருக்கின்றோம். பத்து அம்சங்களில் ஒரு அம்சமாகவே நாங்கள் அதனை முன்வைத்திருந்தோம். இதுதொடர்பான மாபெரும் போராட்டங்கள் இலங்கைக்குள் தொடர்ச்சியாக நடக்கும். இந்தப் போராட்டங்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் சிவில் சமூகங்கள், ஏனைய அரசியற்கட்சிகள், பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தந்திருந்தார்கள். இவர்களுடைய பங்களிப்போடுதான் இது நடந்தது. இன்று இந்த பிரச்சினைக்காக அனைவரும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளார்கள். இதனை அனைவரும் முன்கொண்டு செல்லும்போது இந்த பிரச்சினை சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்க்ககூடியதாகயிருக்கும். இவ்வாறான முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம். இதற்கு அனைவரும் பக்கதுணையாக செயற்பட முன்வர வேண்டும். இது தொடர்பான நேர்மறையான விமர்சனங்கள் இருந்தால் அவற்றினை பேசி தீர்த்து நாங்கள் தொடர்ந்து முன்னேறிச் செல்லவேண்டும்.

கேள்வி – மேய்ச்சற்தரை தொடர்பில் தற்பொழுது நிலைமை எவ்வாறு இருக்கின்றது?

பதில் – தற்போது நிலைமை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டிருக்கின்றது. தற்போதும் சில பகுதிகள் பயிர்ச்செய்கைக்காக துப்பரவு செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இன்னும் நிலைமை மோசமாகிக்கொண்டே செல்லும். மட்டக்களப்பில் மட்டுமல்ல வடக்கு கிழக்கில் இருக்கின்ற எமது நிலங்களை பாதுகாத்துக் கொண்டிருப்பது பண்ணையாளர்கள் தான். அந்த பால் பண்ணையாளர்களை அழிப்பதனூடாக தமிழ் மக்களின் காணிகளை அழிக்கின்ற நோக்கமாகவே இதனை நாங்கள் பார்க்க வேண்டும்.

வேடிக்கையான விடயம் என்னவென்றால் உலகமே இயற்கை பாலுற்பத்தியை பயன்படுத்த வேண்டும் என்ற நிலைக்கு வரும்பொழுது இலங்கையில் ஒரு முக்கியமான அமைச்சர் சமல் ராஜபக்ச அவர்கள் வெளிநாட்டிலிருந்து பால் மாடுகளை இறக்குமதி செய்து அதற்கு விட்டமின், போசாக்குள்ள உணவுகளை கொடுத்து கூடியளவு பால் கறக்கலாம் என்கிறார்.

உலகமே இயற்கை பாலுற்பத்திகளை பயன்படுத்த வேண்டும் என்று சொல்கின்றபோது இலங்கை மட்டும் 20வருடங்கள் பின்நோக்கி சென்று இயற்கை பாலை விடுத்து செயற்கையான ஓமோன்கள் கொடுக்கப்பட்டு பெறப்பட்ட பாலை வழங்கி இலங்கை வாழ் மக்களின் சுகாதாரத்தைப் பற்றி சிந்திக்காமல் காணியை பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு செயற்படுகின்றது.

கேள்வி – மேய்ச்சற்தரைகள் அபகரிக்கப்பட்டதன் பின்னர் கால்நடை வளர்ப்பாளர்களின் நிலைமை எவ்வாறிருக்கின்றது?

பதில் – அவர்களின் நிலைமை மோசமாக இருக்கின்றது. அண்மையில் சில வயதான பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக சிங்களவர்களுடன் முரண்பட முடியாது என்பதால் தங்களுடைய கால்நடைகளை மிகக் குறைந்த விலைக்கு விற்றுள்ளனர். பாதுகாப்பிற்கென அங்கு வந்துள்ள விசேட அதிரடிப் படையினர் சிலர் சட்டவிரோதமாக அங்கு குடியேறியிருக்கின்றவர்களின் உறவினர்களாக இருக்கின்றனர். அவர்கள் பண்ணையாளர்களை தாக்கிய காரணத்தால் அவர்கள் வைத்தியசாலைகளுக்கு செல்லவேண்டிய நிலைகூட வந்திருக்கின்றது. தற்பொழுது பண்ணையாளர்களின் நிலைமை கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

கேள்வி – இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?

பதில் – நாங்கள் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மட்டுமே இந்த நாட்டில் எடுக்க முடியும். ஒரு தவறினை செய்வதினை அறியாதவர்களை நாங்கள் தவறு நடக்கின்றது என்று கூறி திருத்திக்கொள்ள முடியும். அந்த முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்திருந்தோம். ஜனாதிபதி வரைக்கும் இதனை நாங்கள் கொண்டுசென்றிருந்தோம். அவர்கள் இதனை தெரிந்துதான் செய்கின்றார்கள். தெரிந்து செய்வது தவறு அல்ல, அது திட்டமிட்ட சதி. அந்த சதிக்கு அரசியல் ரீதியான நீதியை எதிர்பார்க்க முடியாது. எனினும் நாங்கள் நீதிமன்றங்களை நாடியிருக்கின்றோம்.

கேள்வி – இந்த மேய்ச்சற்தரை பிரச்சினை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன?

பதில் – மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அரச தரப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்காக செயற்படாமல் அவர்களின் எஜமானர்களான மொட்டுக்கட்சிகளின் தலைமைகளுக்காக செயற்படுகின்றனர். மேய்ச்சற்தரைப் பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டுள்ள பலர் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களித்தவர்களும் உள்ளனர். ஆனால் அவர்களின் பிரச்சினைகள் குறித்து தொலைபேசியில் கூட பேசுவதற்கு தயாரில்லையென பண்ணையாளர்கள் என்னிடம் தெரிவித்தனர். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரை சந்திக்கமுடியாது எனவும் கூறுகின்றனர். மயிலத்தமடுவில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் சட்ட விரோதமான செயற்படுகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அதற்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுமாறு கோரியபோது தமிழ் மக்களின் வாக்குகளினால் வந்த பிரதிநிதி அதனை விரும்பாத நிலையே இருந்தது. மக்களின் இன்றைய தேவை வாழைச்சேனை சந்தியில் சிலை வைப்பது அல்ல. நிலங்களை பறிகொடுத்து விட்டு சிலைகளை வைப்பதால் எந்த பிரயோசனமும் இல்லை. அரச தரப்பில் உள்ள பிரதிநிதிகள் எந்த செயற்பாட்டினையும் திருப்திகரமாக முன்னெடுக்கவில்லை. நாங்கள் அதனை எதிர்பார்க்கவும் இல்லை.

Exit mobile version