தமிழ் மக்களிடம் இருந்து யாராலும் மாவீரர்களைப் பிரிக்க முடியாது-அருட்தந்தை மா.சக்திவேல்

மாவீரர்கள் என அழைக்கப்படுபவர்கள் தமிழ் மக்களின் இரத்தத்தில் கலந்துள்ளவர்கள். அவர்களை தமிழ் மக்களிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது என அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின்  தேசிய அரசியலுக்கு உயிருட்டிய காவல் தெய்வங்கள் தான் மாவீரர்கள். அவர்களை நினைவுகூர வேண்டாம் என சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது.

அரசு தற்போது பொது இடங்களில் தடை செய்தாலும் கூட, மனங்களில் அந்த உணர்வை தடை செய்ய முடியாது. எனவே தமிழ் மக்கள் தடைகளை உடைத்து,  வேறு வடிவங்களில் நினைவுகூர முடியும். அதற்கு எதிராக எந்தச் சட்டங்களும் வரப்போவதில்லை.

தமிழ் மக்களின் நினைவேந்தும் உரிமையை அரசு  மதிக்காவிட்டால், இனங்களுக்கு இடையில் பாரிய பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதுடன், தற்போதுள்ள   அரசின்  மீது எதிர்ப்புத் தன்மையையும் நீண்டகாலத்துக்கு உருவாக்கும் .

கடந்த காலங்களில் இருந்த ஆட்சியாளர்கள் அனுமதித்த விடயத்தை, இந்த ஆட்சியாளர்கள் மறுப்பது என்பது தற்போதுள்ள அரசின் மீது வெறுப்பை ஆழப்படுத்தும்.

தாயகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மாவீரர்களின் உயிர்த் துடிப்பு உள்ளது. அந்த உயிர்த்துடிப்புடன் தான்  மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கான தியாக தீபத்தை ஏற்றுவதற்கு மக்களால் முடியும். அதை எந்த இடத்திலும் ஏற்றுவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அதை தீர்மானிக்கவும் உரிமை உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் வேற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தள்ளப்பட்டுளோம். அதைக் கூட்டாக முன்னெடுக்க வேண்டும்.

அதாவது அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும், பொது அமைப்புக்களும் ஒன்றிணைந்து பொதுவான வேற்று நடவடிக்கையை ஒன்றாக முன்னெடுக்க ஆயத்தமாக வேண்டும் என்பதுடன், அந்தப் பொதுவான வேற்று நடவடிக்கையை மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அதன்படி மக்கள் நினைவேந்தல் நிகழ்வை நிம்மதியாக  அனுட்டிக்க முடியும்.