தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவுக்கு விட்டுக்கொடுப்புகள் அவசியம்(நேர்காணல்)

தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கட்சி நிலைப்பாடு குறித்தும் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இலக்கிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்

கேள்வி –எதிர்வரும் பொதுத் தேர்தலில் தங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

பதில்- வழமையாக தேர்தலை எதிர்கொள்வது போல் இம்முறையும் எதிர்கொள்வதற்கு எமது கட்சி தயாராக உள்ளது. பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தலுக்கான முன்னெடுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

கேள்வி- தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்கும் நிலை இக்காலகட்டத்தில் இருக்கின்றதா?

பதில்- தமிழ்க் கட்சிகளை இணைப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து ஓர் முன்னெடுப்பை மேற்கொண்டிருந்தனர். மக்களின் விடிவிற்காக, பிரச்சினைத் தீர்விற்காக  இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  தயாராக இருக்கின்றது. ஆனால் ஏனைய கட்சிகளும் அவர்களுக்கேற்ற வகையிலே அவர்களின் கொள்கைகள், விட்டுக் கொடுப்புகள், மற்றவர்களை அனுசரித்துப் போகின்ற நிலைமைகள் ஏற்படும் போது ஒற்றுமையாக சேர்ந்து கொள்ளலாம். ஒற்றுமையாக தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாக இருக்கின்றோம்.

கேள்வி- காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியிருக்கின்றது. இந்தக் கருத்துத் தொடர்பாக உங்களின் நிலைப்பாடு எப்படியிருக்கின்றது?

பதில்-அரசாங்கம் தன் இஷ்டத்திற்கு எதுவும் சொல்லிவிட முடியாது. அவர் ஒரு ஜனாதிபதி. அவரது ஆட்சிக் காலத்திலேயே  யுத்ததத்தை கொண்டு  நடத்தியவர். சர்வதேச மட்டத்திலே ஜெனீவா தீர்மானங்கள் இருக்கின்றது. சில பொறிமுறைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அரசு நிலை நீதியின் கீழ் சில சட்டதிட்டங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இது அவரின் குடும்பப் பிரச்சினையோ, தனிப்பட்ட பிரச்சினையோ இல்லை. ஒரு நாட்டின் தலைவர் என்ற வகையில் அவர்  இதனை எதிர் கொள்ள வேண்டும். அவரின் போக்கிற்கு அவர் இவ்வாறு கூறிவிட்டு மௌனம் சாதிக்க முடியாது. அதை சர்வதேச ரீதியாக ஒரு தீர்வு அல்லது அதற்கு ஒரு முடிவு, அல்லது அதன் நிலைமை பற்றி வெளிக்கொணரப்பட வேண்டும்.

கேள்வி- புதிய அரசாங்கம் பதவியேற்ற காலகட்டத்தில்  தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்வதற்கு எவ்வாறான நிலை காணப்படுகின்றது. சாதகமான நிலையா? அல்லது பாதகமான நிலையா?

பதில்-புதிய அரசாஙகத்தோடு பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதும் தயாராகத் தான் இருக்கின்றது. அதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தான் புதிய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தான் தமிழ் மக்கள் அந்த ஆணையை வழங்கியிருக்கிறார்கள்.

புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் வாக்குத் தேவையில்லை. சிங்கள மக்களின் வாக்குகளால் தான் வென்று விட்டேன் என்று கூறிக்கொண்டு தன்போக்கிலே நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அது சிங்களவர்களுக்கு மட்டும் உரிய நாடு அல்ல. அதில் தமிழர்களுக்கும் ஒரு பங்கு இருக்கின்றது. மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எங்கள் பிரதிநிதிகளோடு அரசாங்கம் ஒரு ற்றுமைக்கு வரவேண்டும். அவர்களுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நேரத்திலும் தயாராக இருக்கின்றது.

கேள்வி- எதிர்வரும் பொதுத் தேர்தலில் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

பதில்- புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு ஒரு காத்திரமான பங்களிப்பைச் செய்வது நல்லது  என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இந்த தமிழ்க் கட்சிகளைப் பிரித்து விடுவதில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் ஒரு பங்கு இருக்கின்றது. எனவே மக்களின் நன்மை கருதி இந்த புலம்பெயர்ந்த மக்கள் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்தால், அது மக்களுக்கு நன்மையாக அமையும்.

கேள்வி-வன்னித் தேர்தல் தொகுதியைப் பொறுத்தவரையில் வெளிநாடுகளில் உள்ளவர்களின் வாக்குகள் அதிகமாக இருக்கின்றது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகம் வந்து வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உங்கள் கட்சி எவ்வாறு இருக்கின்றது?

பதில்-அவர்கள் வந்து வாக்களிப்பது எமக்கு நல்லது தானே. எங்களுக்கு வாக்கு அதிகரிக்கும். தமிழர்களின் வாக்குப் பலம் அதிகரிக்கும்.

கேள்வி-புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி அழுத்தமாக ஏதும் சொல்ல விரும்புகின்றீர்களா?

பதில்-புலம்பெயர் தமிழர்களுக்கு ஒரு பங்கு இருக்கின்றது. அவர்கள் தோற்றுப் போன  தமிழினத்தின் மறுவாழ்விற்காக பல பங்களிப்பை செய்து வருகின்றார்கள். அதை நான் நன்கு அறிவேன். அவர்கள் என்னூடாகவும்  இழப்பை சந்தித்த மக்களுக்காக வாழ்வாதாரங்கள், கல்வித் திட்டங்கள் போன்றவற்றில் மிகவும் அக்கறையாக செயற்படுகின்றார்கள். அதேபோல் அவர்கள் இந்த தமிழினத்தின் விடிவிற்காக ஒருமித்த மனதோடு பங்களிப்பு செய்ய வேண்டுமென்பது என்னுடைய கருத்து.

கேள்வி-யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வடகிழக்குப் பகுதியிலுள்ள மக்களுக்கு முழுமையான வசதிகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றதா? அல்லது அவர்களுக்கான தேவைகள் இருக்கின்றதா? புலம்பெயர்ந்த தமிழர்கள் அவர்களுக்கு எவ்வாறான உதவிகள் செய்ய வேண்டும்?

பதில்- முழுமையான வசதிகள் கிடைத்திருப்பதாக கூறமுடியாது. நானும் இந்த யுத்ததினால் பாதிக்கப்பட்டவள். இந்த யுத்த வலியை சுமந்து கொண்டிருக்கின்றவள் என்ற வகையில் யுத்தத்திலே நேரடியாக பதிக்கப்பட்ட மக்களுக்கா பலவிதமான வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றேன். என்னைப் பொறுத்தவரையில் புலம்பெயர் தமிழர்கள் வழங்கும் நிதியை ஒரு பொறிமுறையுடாக வடகிழக்கு மக்களுக்கு வழங்குவார்களாக இருந்தால், அது சரியான மக்களுக்கு போய்ச் சேர்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

ஊடகங்கள், இணையத்தளங்களுடன் தொடர்பு கொள்ள வசதியுள்ளவர்கள் ஒருவர் பல இடங்களில் நிதியினைப் பெற்றுக் கொள்வதும், அந்த வசதி இல்லாதவர்கள் அதாவது எழுத வாசிக்கத் தெரியாத, யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள்  எந்தவித உதவியையும் பெறாத நிலையும் காணப்படுகின்றது.இந்த நிலை மாறவேண்டும் என்று சொன்னால் இரு பக்கங்களிலும் ஒரு பொறிமுறை உருவாக வேண்டும். நிதியை வழங்குபவர்களும், பெறுபவர்களும் ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் செயற்படுவார்களாயின் அபிவிருத்தி என்பது அதாவது மக்களுக்கு தேவையான வற்றை இலகுவாக அடையாளம் கண்டு செயற்படக்கூடியதாக இருக்கும்.