தமிழ் அகதி குடும்பத்தை உடனடியாக விடுவிக்குமாறு 9 மருத்துவ அமைப்புகள் இணைந்து வலியுறுத்தல்

நீண்டகாலம் தடுப்புமுகாமில் வாழ்வது தமிழ் அகதி குடும்பமான பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டு பிள்ளைகளுக்கும் பாரதூரமான பாதிப்புகளை உண்டுபண்ணும் என்பதால் இனிமேலும் தாமதிக்காமல் இக்குடும்பம் சமூகத்தில் வாழ அனுமதிக்கப்படவேண்டுமென Royal Australasian College of Physicians (RACP) அமைப்பு உட்பட ஒன்பது அமைப்புகள் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

*பிரியா-நடேஸ் குடும்பத்தை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டுமென ஒன்பது     மருத்துவ அமைப்புகள் ஒன்றாக இணைந்து கோரிக்கைவிடுத்துள்ளன.

*இக்குடும்பம் நியூசிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ குடியமர்த்தப்பட   முடியாது என உள்துறை அமைச்சர் Karen Andrews தெரிவித்துள்ளார்.

*குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை அடிப்படையாக     வைத்து முழுக்குடும்பமும் நாடுகடத்தலுக்கெதிராக தொடர்ந்தும்   சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவருகிறது.

நீண்டகால தடுப்புமுகாம் வாழ்க்கை குழந்தைகள் மற்றும் சிறுவர்களில் அளவிட முடியாத மனநிலை பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இந்நிலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பிரியா-நடேஸ் குடும்பம் மாத்திரமே தடுத்துவைக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள சூழல் பிள்ளைகளுக்கு ஏற்றதல்ல எனவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டாவது மகள் தருணிகா பெர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில் நேற்று அவரது நான்காவது பிறந்ததினமாகும்.

குருதித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தருணிகாவுடன் தாயார் பிரியா மட்டுமே பெர்த் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் தந்தையும் சகோதரியும் கிறிஸ்மஸ் தீவிலேயே உள்ளனர்.

இந்தப்பின்னணியில் தருணிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து பிரியா-நடேஸ் குடும்பம் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் வலுத்துள்ளன.

நன்றி – SBSTamil