Home ஆய்வுகள் தமிழ்நாட்டில் ஈழத் தமிழ் ஏதிலிகள் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்கின்றார்கள் – பேராசிரியர் முனைவர் குழந்தை

தமிழ்நாட்டில் ஈழத் தமிழ் ஏதிலிகள் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்கின்றார்கள் – பேராசிரியர் முனைவர் குழந்தை

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இவர்கள் ஏதிலிகள். ஆனால் இவர்கள் ஏதிலிகளாகக் கருதப்படுவது கிடையாது. தஞ்சம் அடைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அல்லது அடைக்கலம் தேடியவர்கள் என்று கருதப்பட்டு, நடத்தப்படுகின்றார்கள். 

இந்தியா   ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகளின்  உயர் ஆணையகத்தில் கையெழுத்து இடாத  நாடாக இருக்கிறது. அதனால் ஐக்கிய நாடுகள் ஏதிலிகளுக்கான முகாம்களில் பணியாற்ற முடியாது.

இந்தியாவில் திபெத்திய  ஏதிலிகள், ஈழ அகதிகள், பர்மிய, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து ஏதிலிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் ஈழ  ஏதிலிகள் குறித்துப் பேராசிரியர் முனைவர் குழந்தை அவர்கள் ‘இலக்கு’ ஊடகத்தினரின் கேள்விகளுக்கு தனது விரிவான பதிலை அளித்திருந்தார்.

Capture.JPG 2 4 தமிழ்நாட்டில் ஈழத் தமிழ் ஏதிலிகள் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்கின்றார்கள் - பேராசிரியர் முனைவர் குழந்தை

கேள்வி -சிறுபான்மை இனங்களின் மீதான ஒடுக்கு முறையே உலகளாவிய அகதிகள் அதிகரிப்புக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. இருபத்தோராம் நூற்றாண்டில் தொடரும் இப்பிரச்சினையை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில் – உலகமயமாக்குதல் ஏதிலி உலகத்தை உருவாக்குகிறது.  நுகர்வு வெறி, ஆடம்பர வாழ்வு, அதிகார மோகம் ஆகியவை உலகமயமாக்குதலை உருவாக்குகின்ற கூறுகளாக இருக்கின்றன. இந்தக் கூறுகளை நிலைநிறுத்த நாடுகளிடையே, நாட்டிலுள்ள இனக் குழுக்களிடையே, சமயங்கள் இடையே, நிறங்களிடையே முரண்பாடுகளையும், சண்டைகளையும், போர்களையும் உருவாக்கி முதல் உலக நாடுகள், அதற்குத் துணைபோகும் நாடுகள் மிகப் பெரிய ஆதாயத்தை அடைகின்றன. உலகமயமாக்குதல் பலவீனம் ஆக்கப்பட்ட மக்களுடைய குருதியை உறிஞ்சுகின்ற ஒட்டுண்ணியாக இருக்கிறது.  இந்த ஒட்டுண்ணி இருக்கும்வரை ஏதிலிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.  எனவே மக்களை சிறுமைப்படுத்தி, பலவீனப்படுத்தி, அடக்கி அதிகாரத்தில் அமர்ந்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, எல்லாவற்றையும் நுகர்ந்து கொண்டிருக்கின்ற ஒரு குழுதான் இந்த ஏதிலிகளை உருவாக்குகின்ற காரணமாக இருக்கின்றது. மேலும் போரினால் வருகின்ற ஏதிலிகள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.  அதைத் தவிர்த்து இயற்கை சீற்றழிவு, நோய்கள் இவற்றின் வழியாக மக்கள் ஏதிலிகளாக உருவாக்கப்படுகிறார்கள்.  எனவே இந்த முறை இருக்கும் வரை ஏதிலிகளை தொடர்ந்து உருவாக்குவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்பதை  நான் தெளிவுபடுத்துகிறேன்.

கேள்வி -2 உலகளாவிய ஏதிலிகளில் ஈழத் தமிழர் 27ஆவது இடத்தில் இருப்பதாக உலக வங்கியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஓர் சிறிய நாட்டில் இருந்து இலட்சக் கணக்கான தமிழர்கள் அகதிகளாக்கப்படுவது எதனைக் காட்டுகிறது?

பதில் – சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கோர முகத்தைக் காட்டுகின்றது. இந்தப் பேரினவாதத்தை ஒரு சிறு குழு தனது அதிகார மோகத்தைத் தீர்த்துக் கொள்வதற்கு, நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது. இதனால் மூடநம்பிக்கை, அறியாமை, வகுப்புவாதம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இன அழிப்பு, கொடூரமான அடக்குமுறை, மனிதநேயம் அற்ற தன்மை ஆகியவற்றை இந்தச் சிறு குழுவானது பயன்படுத்தி, ஒரு மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை ஏதிலிகளாக மாற்றுவதை நாம் பார்க்கின்றோம். எனவே சிங்கள அரசு இந்த  இன அழிப்பையும், கொடூரமான அடக்குமுறையையும், மனிதநேயம் அற்ற தன்மையையும் பயன்படுத்துவதால் தான் இன்று இலட்சக்கணக்கான ஏதிலிகள் உருவாக்கப்பட்டு, இன்றைக்கு இடம்பெயர்ந்து இருப்பதை நாம் பார்க்கின்றோம்.  எனவே இந்த இலட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்வதற்குக் காரணம் அந்தப் பேரினவாதம் தான். இந்தப் பேரினவாதத்தைப் பயன்படுத்தி, செயற்படுத்துவதை  இன்று பார்க்கின்றோம். எனவே அப்பாவி மக்கள் மீதுதான்  இன அழிப்பு கட்டவிழ்த்து விடப்படுகின்றது. எனவே இது தொடர்ந்து நடைபெறுகின்றது. எல்லா  நாடுகளிலும் இப்படிப்பட்ட செயற்பாடு தொடர்ந்து நடைபெறுவதை நாம் பார்க்கின்றோம்.

கேள்வி – இந்தியாவில் 1990 அளவில் 200,000 ஆக இருந்த ஈழத்தமிழ் ஏதிலிகள் எண்ணிக்கை 2020 இல் 93000 ஆக கணிப்பிடப்படுகிறது. இவை தொடர்பான புள்ளிவிபரங்கள் தங்களிடம் உள்ளதா? அதை சுருக்கமாகக் குறிப்பிட முடியுமா?

பதில் – 2021 ஏப்ரல் முதலாம் திகதி வரை தமிழ் நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில்  உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பை அரசு நடத்தியது. அதை அங்கீகரித்து, ஆஃபர்(offer)  நிறுவனமும், ஜே.ஆர்.எஸ்.(JRS) நிறுவனமும் ஏற்றுக்கொண்ட புள்ளிவிபரத்தின் படி, 29 மாவட்டங்களில் ஈழத்தமிழ் அகதி முகாம்கள் இருக்கின்றன. இந்த 29 மாவட்டங்களில் 106 முகாம்கள் உள்ளன. இரண்டு மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் இருக்கின்றன. ஒன்று திருச்சியிலும், இன்னொன்று இராமநாதபுரத்திலும் இருக்கின்றன. திருச்சியில் இருக்கக் கூடிய சிறப்பு முகாமில் 80 நபர்கள் இருக்கிறார்கள். இராமநாதபுரத்தில் 2 நபர்கள் இருக்கிறார்கள்.  106 முகாம்களில் இருக்கக் கூடிய 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் ஆண் குழந்தைகள் 5813 பேர்.  பெண் குழந்தைகள் 5274பேர்.  12 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட நபர்களில் – இளம் இளைஞர்களில் – ஆண்கள் 5725பேர். பெண்கள் 5674பேர்.  18 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள் 17614பேர். பெண்கள் 18722பேர். ஆக 58822 நபர்கள் முகாம்களில் தற்போது பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். முகாமில் பதிவு செய்யப்படாமல், காவல்துறைப் பதிவில் முகாமுக்கு வெளியே இருக்கக் கூடிய நபர்கள் ஏறக்குறைய 32,000 பேர். இதில் பல நபர்கள் தொடர்ந்து  இலங்கைக்குத் திரும்பிச் செல்கிறார்கள். சில நபர்கள் இறந்து போகிறார்கள்.  சில நபர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். இது ஏறக்குறைய இருக்கக்கூடிய, ஒரு அரசு அங்கீகரிக்கப்பட்ட புள்ளி விபரத்தை உங்களுக்கு தந்திருக்கிறேன்

கேள்வி – எண்பதுகள் முதலே ஈழத்தமிழர் தமிழகம் நோக்கியே ஏதிலிகளாக வந்தனர். இருப்பினும் பின்னைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்றமைக்கு என்ன காரணம் என கருதுகிறீர்கள்?

பதில் – முதலில் தமிழ் நாட்டிற்கு இவர்கள்  வருவதற்கான வழியிருந்தது. வேறு எந்த நாட்டிற்கும் செல்வதற்கான வழி மிகக் குறைவு. அதனால் தமிழ்நாட்டிற்குத் தான் அதிகமான மக்கள் வந்தார்கள். ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் வழி பிறந்தது. பல்வேறு வாய்ப்புகள் இருந்தது. அதனால் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும், மேலை நாடுகளுக்கும் சென்றார்கள். தமிழ்நாட்டு முகாமில் வறுமை தாண்டவமாடுகிறது. எனவே தான் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்கு அவர்கள் முயற்சி எடுத்திருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக ஐரோப்பிய நாடுகளுக்கும், மேலை நாடுகளுக்கும் இவர்கள் சென்றிருப்பதை பார்க்கின்றோம்.

தமிழ் நாட்டு முகாம்களில் கட்டுப்பாடுகள் அதிகம். இது ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை என்று தான் நான் சொல்லுவேன். எனவே அனைத்து வாழ்வாதாரங்களும், அடையாளங்களும், உரிமைகளும் பறிக்கப்பட்டவர்கள், வளமாக இருக்கக்கூடிய நாடுகளை நோக்கி பயணமாவது இயற்கையான ஒரு செயலாகும். எனவேதான் ஈழத் தமிழ் ஏதிலிகள் தமிழ்நாட்டிற்கு வந்ததைவிட வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு அவர்கள் மிகவும் முயற்சி எடுத்துச் சென்றிருக்கிறார்கள். எனவே இது ஒரு காரணமாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே வாய்ப்புகள், வழிகள் இருக்கின்ற பொழுது அந்த நாட்டிற்குச் செல்வது தான் அவர்களுடைய இயற்கையான இயல்பாக இருக்கும். பறிக்கப்பட்டவர்கள் வளத்தை நோக்கி நகர்வது அவர்களுடைய அடிப்படை உரிமையும், வாழ்வு இலக்குமாக இருப்பதை  நாம் பார்க்கின்றோம்

கேள்வி – உரிமைகள் மறுக்கப்படுவதுடன் இங்கும் அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுவதாக வரும் செய்திகள் பற்றி என்ன கருதுகிறீர்கள்?

பதில் – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இவர்கள் ஏதிலிகள். ஆனால் இவர்கள் ஏதிலிகளாக கருதப்படுவது கிடையாது. தஞ்சம் அடைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அரசினுடைய கருணையின் அடிப்படையில் வாழக் கூடியவர்களாக் கருதப்படுகிறார்கள். இவர்களுக்கு என்று எந்த ஒரு ஏதிலிச் சட்டமும் இந்திய ஒன்றிய அரசில் இல்லை. அதனால்தான் இவர்களுக்கு எந்தவொரு குடியுரிமையும்,  உரிமையும் கிடையாது. இவர்கள் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எட்டிற்குப் பத்து என்ற அளவில் இருக்கக் கூடிய வீடுகளில்தான் – குடிசைகளில் தான் – இவர்கள் வாழ்கிறார்கள்.  முகாம்களில் 15 நாட்களுக்கு ஒருமுறை அரசு அதிகாரிகள் சோதனை செய்கிறார்கள். 24 மணி நேரமும் கியூ பிரிவு இந்த முகாம்களில் அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம், பண்பாட்டுச் சீரழிவு, உரிமையற்ற தன்மை இந்த முகாம்களில் மிகவும் தாண்டவம் ஆடிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கின்றோம்.

கேள்வி -6 ஈழத்தமிழ் ஏதிலிகள் மேம்பாட்டிற்கும், சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கவும் எவ்வாறான முயற்சிகள் இடம் பெறுகின்றன?

பதில் – வெளிநாடுகளுக்குச் செல்ல முயன்றதாகக் குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் அவர்களை நிறுத்தி, பிணையில் வெளியே வந்த மக்களை, நீதிமன்ற வளாகத்தில் இருந்து அவர்கள் வெளியே வருகின்ற – சிறையிலிருந்து வெளியே வருகின்ற – பொழுது அவர்களைக் கைது செய்து மீண்டும் திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தின் உள்ளே இருக்கக்கூடிய சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறார்கள். 30 ஆண்டுகளாக இவர்கள் தமிழகத்தில் ஏதிலிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது சிறப்பு முகாம்களில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பங்களை இழந்து, குடும்பங்களில் இருந்து பிரிக்கப்பட்டு இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வருகின்ற அரசுக்கு மனு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். கோரிக்கைகளை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய குடும்பங்களோடு இணைந்து வாழ அனுமதி கொடுங்கள் என்று இவர்கள் கேட்கிறார்கள். தாய் நாடு திரும்புவதற்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்கிறார்கள். கடந்த ஆட்சியாளர்கள், முதல்வர்கள், இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் எந்த விதத்திலும் இவர்கள் கொடுத்த மனுவிற்கு செவிமடுக்காமல், இவர்களை சிறப்பு முகாமில் வைத்திருக்கிறார்கள்.

கடந்த 8 நாட்களிற்கும் மேலாக இவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கிறார்கள்.  இவர்களை விடுவிக்க வேண்டும் என்று சொல்லி நாடாளுமன்ற உறுப்பினர் திரு வைகோ, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இளந்தமிழக இயக்கத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் செந்தில் போன்றோர் தொடர்ந்து இவர்களுடைய உரிமைக்காகக் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இவர்களின்  பிரச்சினை ஐ.நாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவர்களை விசாரணை நடத்தி விடுதலை செய்து, இவர்களை நாட்டிற்கோ அல்லது முகாம்களுக்கோ திருப்பி அனுப்ப வேண்டும் என்று சொல்லி பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. எனவே அப்படிப்பட்ட செயற்பாடுகளை அரசு கவனத்தில் எடுத்து, இதை முன்னிறுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் வந்ததனால் தற்போது இருக்கக் கூடிய முதல்வருக்கு, தங்களை விடுவிக்க வேண்டும் என்று சொல்லி இவர்கள் கடிதம் எழுதி இருக்கிறார்கள். கண்டிப்பாக இந்த முதல்வர் இந்த மக்கள் மீது கருணை கொண்டு விரைவில் நல்லதொரு தீர்ப்பை – முடிவை இவர்களுக்குக் கொடுத்து விடுதலை செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Exit mobile version