Home ஆய்வுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பணிகளை எவ்வாறு அழைப்பது? – கணிதன்      

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பணிகளை எவ்வாறு அழைப்பது? – கணிதன்      

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதீத நம்பிக்கை வைத்து தமது நாளாந்த பிரச்சினை முதல் அரசியல்தீர்வுவரை அனைத்தையும் அடைய எதிர்பார்த்திருந்தனர். யார் கண் பட்டதோ கூட்டமைப்பின் ஒற்றுமை அன்றிலிருந்தே சிதைய ஆரம்பித்து விட்டது.

ஒற்றுமை சிதைவடைவதை அறிந்த பின்னரும் எந்தவொரு தனிநபரோ அல்லது கட்சியோ தமக்கான விடிவைக் கொண்டுவராது என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக இருந்தனர். அதன் விளைவாகவே கூட்டமைப்பைப் பயன்படுத்தி தமிழரசுக் கட்சி தன்னை வளர்த்துக்கொண்டபோதிலும், இதனை நன்குணர்ந்த நிலையிலும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே தமது முழுமையான ஆதரவினை வழங்கியிருந்தனர். அதனால்தான் 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் கூட்டமைப்பு மக்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்றிருந்தது.

ஆயுதப்போராட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்த நிலையில், அனைவரும் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்திய வேளையில், தற்பொழுது யுத்தநிறுத்தம் மேற்கொண்டால் அது புலிகளுக்கு ஒட்சிசன் வழங்கியதுபோல் ஆகிவிடும் என்று கூறிய புளொட்டையும் கூட அது கூட்டமைப்பில் இணைந்துகொண்ட ஒரே காரணத்திற்காக தமிழ் மக்கள் தற்காலிகமாக அதன் தவறை மறந்து அதற்கும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

புளொட் கூட்டமைப்பில் இணைந்த உடன் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களின் பரப்புரையின்போது அதன் தலைவர் திரு.சித்தார்த்தன், “அரசியல் கட்சிகள் இணைந்துவிட்டோம். இனி மக்கள் தாங்கள் ஐக்கியமாக இருக்கிறோம் என்பதையும் எங்களது ஐக்கியத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்பதையும் அனைவருக்கும் தெரிவிப்பது, தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோகமாக வெற்றியடையச் செய்வதிலேயே தங்கியுள்ளது” என்றும் கேட்டுக்கொண்டார். மக்களும் தாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து பயணிப்பதற்குத் தயாராக இருப்பதை தேர்தல்களின் மூலம் தெளிவாகவே வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்ட உடன் நடைபெற்ற 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இலங்கை தமிழரசுக் கட்சி தனது மக்கள் விரோதக் கொள்கையை ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் உட்கட்சி சனநாயகப் போராட்டத்தினூடாக தமிழரசுக் கட்சியை வழிக்குக் கொண்டு வந்துவிட முடியும் என்று அப்போது அங்கத்துவக் கட்சிகள் நம்பின.

பின்னர் சில அங்கத்துவக் கட்சிகள் என்ன காரணத்திற்காகவோ தமிழரசுக் கட்சி கிழித்த கோட்டைத் தாண்ட மறுக்கின்றன. இதுவே தமிழரசுக் கட்சி இன்று தான்தோன்றித்தனமான முடிவுகளை எடுத்து, மக்கள் வழங்கிய ஆணைகளுக்கு மாறாக, எதேச்சாதிகாரமாகச் செயற்படுவதற்கும் அங்கத்துவக் கட்சிகள் கையறு நிலைக்குச் சென்றிருப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததன் காரணமாக 2012ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் இலங்கையின்மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டது. இதன்போது 2010ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்னிக்கு நேரடியாகச் சென்று மீள்குடியேறிய மக்களைச் சந்தித்து இறுதி யுத்தத்தின்போது அவர்களது அனுபவங்களையும் இழப்புக்களையும் குறித்து தாம் சேகரித்திருந்த சாட்சியங்களை ஜெனீவா மனித உரிமைகள் ஆணையகத்தில் கையளிக்க முடிவு செய்திருந்தனர்.

ஆனால் பின்னர் அமெரிக்கா அதனை விரும்பவில்லை என்று காரணம்கூறி தமிழ் மக்கள் வழங்கிய ஏகோபித்த ஆதரவின் காரணமாக தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த சுமந்திரன் தெரிவித்தார். இதிலிருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் விரோதச் செயற்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன.

2012ஆம் ஆண்டு பிரேரணையை அன்றைய மகிந்தராஜபக்ச அரசாங்கம் நிராகரித்திருந்தது. அதன் பின்னர் அமெரிக்கா  மீண்டும் 2013ஆம் ஆண்டு ஒரு பிரேரணையைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. இந்தக் கூட்டத்தொடரில் அரசாங்கத்துடன் எதிர்க்கட்சியிலிருந்த மங்கள சமரவீரவும் பங்குபற்றியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. இதிலும் இலங்கை அரசாங்கம் ஏராளமான விடயங்களை ஏற்க மறுத்திருந்தது. இந்த நிலையில்தான் சுமந்திரன், மங்களசமரவீர, ரணில், சந்திரிகா அம்மையார் போன்றவர்கள் அவ்வப்போது சிங்கப்பூர் சென்றுவந்தனர்.

இலங்கை அரசாங்கத்தின் மெத்தனப்போக்கு சர்வதேச சமூகத்தினருக்கு எரிச்சலூட்டுவதாக அமைந்தது. இதன் பயனாகவே அவர்களின் முயற்சியால் 2015ஆம் ஆண்டு சனாதிபதியாக மைத்திரிபால சிறீசேனவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்பொழுதிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாகவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து தமிழ் மக்களின் நலன்களைப் புறந்தள்ளிச் செயற்படத் தொடங்கிவிட்டது.

சனாதிபதித் தேர்தல் நேரத்தில் எந்த மைத்திரிக்காக வக்காளத்து வாங்கி தமிழரசுக் கட்சி செயற்பட்டதோ அதே கட்சி பின்னர் அவருக்கு எதிராக மட்டுமே செயற்பட ஆரம்பித்தது. 2015ஆம் ஆண்டு மார்ச்மாத ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் நடக்கவிருந்த விவாதத்தை திருவாளர் சுமந்திரனும் மங்கள சமரவீரவும் அவசர அவசரமாக அமெரிக்காவிற்கும் ஜெனீவாவிற்கும் பறந்தோடி அதனை பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடத்துவதற்கு வேண்டுகோள் விடுத்தனர்.EC21D243 A0C4 4EE4 82ED CB5EF70D1273 1 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பணிகளை எவ்வாறு அழைப்பது? - கணிதன்      

இந்த நேரத்தில் இலங்கைக்கு நேரடியாக விஜயம் செய்து கள ஆய்வுகளை மேற்கொண்டு மக்களிடமிருந்து நேரடியாக வாக்கு மூலங்களைப் பெற்றுக்கொண்டு தமது அறிக்கையை சமர்ப்பிக்கவிருந்த அன்றைய மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் திருமதி நவீப்பிள்ளை தனது பதவிக்காலம் முடிவடைந்து விடைபெறுகிறார். அவர் சமர்ப்பித்திருந்த இடைக்கால அறிக்கையிலேயே இலங்கை குறித்து காட்டமான கருத்துக்களை முன்வைத்திருந்தார். அவர் பதவியில் இருந்தபோது இந்த விவாதம் நடைபெற்றிருந்தால் இலங்கை பாரிய அழுத்தத்திற்கு முகங்கொடுத்திருக்கும். இதிலிருந்து இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றியவர்கள் தமிழரசுக் கட்சியின் வெளியுறவுச் செயலாளரும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் அன்றைய வெளிவிவகார அமைச்சருமே.

இதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு அன்றைய மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் திரு.சையத் றாட் அல் ஹசைன் நவீப்பிள்ளையின் அறிக்கையை மையப்படுத்தி தனது காட்டமான விமர்சனங்களையும் முன்மொழிவுகளையும் முன்வைத்திருந்தார். இலங்கை இனியும் தனது நாட்டில் நடைபெற்ற விடயங்கள் குறித்து விசாரணை நடத்தும் என்ற நம்பிக்கை இல்லை என்று தெரிவித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல முன்மொழிவுகளைச் செய்திருந்தார்.

இதன்போது மீண்டும் திருவாளர் சுமந்திரன் அமெரிக்காவிற்கும் ஜெனீவாவிற்கும் பறந்து அதனை நீர்த்துப் போகச் செய்து இலங்கையில் நடைபெற்ற யுத்தக்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஒரு கலப்பு விசாரணைப் பொறிமுறையினை மேற்கொள்வதற்கான திருத்தத்துடன் தீர்மானம் நிறைவேற்றி இலங்கை அரசாங்கத்தையும் அதற்கு இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொள்ளச் செய்திருந்தார். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு ஆண்டு கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. இதுவே 30/1 தீர்மானம் என்று அழைக்கப்படுகிறது.

தமிழரசுக் கட்சியின் அன்றைய தலைவரான திரு.சம்பந்தரினால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டு வடக்கு மாகாண முதலமைச்சாராக முடிசூட்டி வைக்கப்பட்ட திருவாளர் விக்கினேஸ்வரன் அவர்கள் இதிலிருந்துதான் தனது தலைவர்களுடன் முரண்பட ஆரம்பித்தார். இதனாலேயே அவர் அன்றைய நாடாளுமன்றத் தேர்தலின்போது இரட்டைப்பொருள்பட தமிழர்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியில் வந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இலங்கையின் இணை அனுசரணையுடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 30/1 நடைமுறைப்படுத்தாத நிலையில், அதில் எத்தகைய மாற்றமுமின்றி 34/1 தீர்மானத்தின் மூலம் மேலும் இரண்டாண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டிருந்த போதிலும், தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்கான போராட்டம் சர்வதேசமயப்பட்டிருந்தது. இலங்கை அரசாங்கம் யுத்தம் என்ற போர்வையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றுள்ளது. அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. மனிதகுலமே வெட்கித் தலைகுனியும் செயல்கள் இடம்பெற்றுள்ளன என்று சர்வதேச நாடுகள் தெரிவிக்கும் அளவிற்கும் அதனோடு மட்டுமல்லாமல் இத்தகைய செயற்பாடுகள் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் சர்வதேச சமூகம் கருத்துரைக்கும் அளவிற்கு ஆயுதப் போராட்டம் பல கதவுகளைத் திறந்திருந்தது.

அரசியல் தீர்வு இதோ வரப்போகிறது. பொங்கலுக்குள் வந்துவிடும் தீபாவளிக்குள் வந்துவிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திருவாளர் சம்பந்தன் திருவாய் மலர்ந்திருந்தார். அதற்கான எத்தகைய முன்முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் ஐ.நாவில் இலங்கைக்கு கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுத்து சர்வதேசத்தின் அனுதாபத்தைப் பெற்றிருந்த தேசிய இன விடுதலைப் போராட்டத்தை அரசாங்கத்துடன் இணைந்து நீர்த்துப் போகச் செய்வதில் முனைப்புடன் செயற்பட்ட பெருமை இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் அதன் சிரேஸ்ட தலைவர் திருவாளர் சம்பந்தரையும் அவரது கைப்பாவையும் ரணிலின் செல்லப்பிள்ளையுமான சுமந்திரனையுமே சாரும்.

அரசியல் தீர்வு ஒருபுறம் இருக்கட்டும். இவர்களது இவ்வளவு விட்டுக்கொடுப்புகளும் முண்டுகொடுப்பும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ததா? காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுத்ததா? இராணுவத்தினரும் அரசாங்கத்தின் திணைக்களத்தினரும் அடாத்தாகக் கபளீகரம் செய்துள்ள தமிழ் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டதா?

அரசியல் தீர்விற்காக அனைத்தையும் ஒத்திவைத்திருப்பதாக திருவாளர் சம்பந்தன் தெரிவித்திருந்தார். அதற்காகவே முன்னர் மைத்திரி – ரணில் அரசாங்கம் கொண்டுவந்த அனைத்து விடயங்களையும் கேட்டுகேள்வி இன்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறுவதற்கு உதவினார். இன்று வடக்கு-கிழக்கில் குவிந்துள்ள இராணுவத்தினரை வெளியேற்றக்கோரி நீலிக்கண்ணீர் வடிக்கும் கூட்டமைப்பின் எம்பிக்கள், கடந்த நான்கு வருடங்களாக பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட அதிகளவு நிதியை எதிர்த்து ஒரு வசனம் கூட பேசாமல் அல்லது நாடாளுமன்றத்தில் வாய்கிழிய கத்திவிட்டு பின்னர் அதற்கு ஆதரவாகத்தானே வாக்களித்துள்ளனர்.

சனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு ரணிலால் வெற்றிபெற முடியாது என்பதால்தானே பத்தொன்பதாவது திருத்தத்தின் மூலம் சனாதிபதிக்கான அதிகாரங்களைக் குறைத்து அதனை பாராளுமன்றத்தினூடாக பிரதமருக்கு வழங்கும் 19ஆவது திருத்தத்தை ஐ.தே.கவுடன் இணைந்து சுமந்திரன் தயாரித்தார். அதற்கு தனது சகாக்கள் அனைவரையும் ஆதரவளிக்கச் செய்தார். நூறுநாள் வேலைத்திட்டத்தில் இதனை நிறைவேற்ற முடிந்த சம்பந்தர் கூட்டத்திற்கு நான்கு ஆண்டுகளில் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லையே.

ஒவ்வொருமுறை வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிப்பதற்கும் அரசாங்கத்தை நெருக்கடியிலிருந்து காப்பதற்கும் ஏதோவொரு வெகுமதியைக் கூட்டமைப்பினர் பெற்றுக்கொண்டுள்ளனர். முதலில் நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு புதிதாக வந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே தீர்வையற்ற வாகனம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. பின்னர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. இதுவும் கூட்டமைப்பினரை மையப்படுத்தியே வழங்கப்பட்டது.

அரசியல் நிர்ணய சபையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை ஆமோதித்ததற்காகவும் 2018ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்ததற்காகவும் அவசர அவசரமாக உருவாக்கபப்ட்ட உள்ளூராட்சி தேர்தல்கள் திருத்த சட்டத்திற்கு கண்மூடி ஆதரவு வழங்கியதற்காகவும் கூட்டமைப்பின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களும் அபிவிருத்தி நிதியாக தலா இரண்டரை கோடி ரூபாய் பெற்றுக்கொண்டனர்.

2018ஆம் ஆண்டில் எமது பிரச்சினைகளை திட்டமிட்டு திசை திருப்புவதற்காகவே மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு நாடகத்தில் வேண்டுமென்றே சனாதிபதிக்கு எதிரான நிலையெடுத்து, ரணிலைக் காப்பாற்றி தனியாக ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க வழிசெய்தமைக்காக கூட்டமைப்பின் ஒவ்வொரு உறுப்பினரும் அபிவிருத்தி என்னும் போர்வையில் பெற்றுக்கொண்ட தொகை நாற்பது கோடி.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரம் உயர்த்தித் தருவதிலோ தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பதிலோ அக்கறையின்றி இருப்பதுடன் அவற்றிற்கு சாட்சிகளாக நின்று காணி உறுதி வழங்குவதும் எதனடிப்படையில்? தமிழ் மக்களின் வழிபாட்டிடங்களை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தி அதில் பௌத்தவிகாரைகள் அமைப்பதை தடுக்க முடியாமலிருப்பதன் காரணம் என்ன? தலைவரின் சொந்தத் தொகுதியிலேயே வரலாற்றுச் சிறப்பு மிக்க வெந்நீரூற்றைக் காக்க முடியாமல் போனது ஏன்?

தமிழ் மக்களின் நலன்களை வென்றெடுத்து தருவோம் எங்களை நம்புங்கள் நான் இருக்கிறேன் என்று சொல்லி நம்பிக்கையூட்டி அவர்களை நடுத்தெருவில் விட்டதற்கான சன்மானங்களா அவை? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த செயலை எப்படி அழைப்பது?

ஆங்கிலத்தில் என்றால் நெகோசியேட்டர், பார்கைனர், பெசிலிடேட்டர், புரோக்கர், கமிசன் ஏஜென்ட் என்று சூழலுக்கேற்ப அவர்களை அழைப்பதற்குப் பலவகையான சொற்கள் உள்ளன. ஆனால் இவைகளுக்கு தமிழில் தரகர் என்ற சொல்லே பாவனையில் உள்ளது.  வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் மக்களின் மன ஓட்டத்தை தனக்குத் தெரிந்த சொல்லில்  அதனைக் கூறியுள்ளார்.

Exit mobile version